Skip to main content
என். எம் பதி என்கிற நண்பர்...............

அழகியசிங்கர்


போனவாரம் அசோகமித்திரன் கூட்டத்திற்கு செப்டம்பர் மாதம் நடத்தத் தீர்மானித்து அதற்கான விண்ணப்பத்தை அங்குள்ள அலுவலரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டேன்.  கூட்டத்திற்கு யார் பேசப் போகிறார்கள்? யாரைக் கூப்பிடுவது? என்ற கேள்விகள் என் மனதைப் படாதபாடு படுத்தியது.  என் நண்பர் மயிலாடுதுறையில் இருப்பவர் பிரபுவைக் கூப்பிட்டேன்.  அவர் எல்லா விதங்களிலும் உதவுவதாகக் குறிப்பிட்டார். திருவல்லிக்கேணியில் இருக்கும் ராஜகோபாலனிடம் சொன்னேன்.  நானும் ராஜகோபாலனும் ஒருவரை ஒருவர் பார்த்து 1 மாதம் ஓடிப்போயிருக்கும்.  சரியாகப் பேசி 2 மாதங்கள் ஆகியிருக்கும்.  இன்னொரு நண்பரிடம் எனக்கு 2 ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை.  ஒருகாலத்தில் நானும் அந்த நண்பரும் மிகவும் நெருக்கமானவர்கள். இப்போதெல்லாம் யாருடனும் பேச முடியவில்லை என்பதோடல்லாமல், யாரையும் சந்திக்கக் கூட நேரம் இருப்பதில்லை. 

 டாக்டர் செல்வராஜுடம் உடம்பைப் பற்றிப் பேசவே முடிவதில்லை.  பார்க்கக் கூட முடிவதில்லை.  அப்படிப் பயப்படும்படியாக உடம்பு இல்லை.  ஆனால் கட்டுப்பாடு வேண்டும்.  சாப்பாடுவதில் கட்டுப்பாடு. நடை பயில்வதில் வேகம் என்றெல்லாம் வேண்டும.  முன்பு நான் பார்த்துப் பழகிய சென்னை இல்லை என்பதோடல்லாமல், சென்னையே முழுவதும் மாறிவிட்டது.  மாலை வண்டிகளின் அணுவகுப்புடன் வீட்டிற்குப் போவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது.

ராஜகோபாலன் என்னிடம் 2 விஷயங்கள் குறிப்பிட்டார்.  முதல் விஷயம் அவருக்குப் பேரன் பிறந்த விஷயம்.  அது முக்கியமான விஷயம் என்பதோடல்லாமல், மகிழ்ச்சிகரமான ஒன்று கூட.  அதோட இன்னொன்றும் சொன்னார்.  பதி இறந்துபோய் பத்து நாட்கள் ஆகியிருக்கும் என்று.  கேட்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

நான் சென்னைக்கு வந்தவுடன் சந்திக்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களில் பதியும் ஒருவர்.  கடந்த 8 ஆண்டுகளாக நான் அவசரக்கோலத்தில் ஞாயிறு மட்டும் சென்னையில் இருப்பேன்.  அப்போதெல்லாம் நான் அவரைச் சந்திக்க முடிந்ததில்லை.  ஆனால் சென்னைக்கும் வந்தும் யாரையும் சந்திக்க முடிவதில்லை என்பதில் எனக்கு பெரிய வியப்பாக இருந்தது.  உண்மையில் நானும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தோம்.  விருட்சம் இதழ்களில் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். கொம்பன் என்ற பெயரில் பத்தி எழுதிக்கொண்டிருந்தார்.  பலருடைய கவனத்தை அந்தப் பத்தி கவர்ந்திருந்தது.  ஆனால யாரிடமும் கொம்பன் யார் என்பதைச் சொல்லாதீர்கள் என்று கேட்டுக்கொள்வார்.
பதி ஒரு உணர்ச்சிகரமான மனிதர்.  மனதில் பட்டதை சொல்லிவிடுவார்.  ஞாயிறுதோறும் போனில் பேசிக்கொண்டிருப்பார்.  என்ன தோன்றியதோ அவர் பேசுவதை நிறுத்தி விட்டார்.  நான் தொடர்பு கொண்டாலும் என்னால் அவரைப் பிடிக்க முடியவில்லை.  பின் தொடர் கட்டுரை எழுதுவதையும் நிறுத்தி விட்டார்.  பதிக்கு என்னயாயிற்று என்று தெரியவில்ல. என் மேல் எதாவது கோபம் இருந்திருக்கும். பதி அதை வெளிப்படுத்தக்கூட இல்லை.

ஒரு திருமண வைபவத்தில் பதியும் அவர் மனைவியையும் சந்தித்தேன்.  அப்போது அவர் நிதானம் இல்லாமல் இருந்தார்.  பதி ஓயாமல் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார்.  எப்படி அவர் உடம்பு தாங்குகிறது என்று யோசிப்பேன்.  ஆனாலும் ஒரு கட்டத்தில் நிதானத்திற்கு வந்துவிடுவார்.  நவீன விருட்சம் இதழ்களைப் பார்த்து எனக்குக் கடிதம் எழுதுவார்.  அவருக்கு என் கவிதைத் தொகுதியைப் படிக்க அனுப்பியிருந்தேன்.  அதைப் படித்துவிட்டு அவர் எழுதிய கடிதம் இதோ.


என்.எம்.பதி
122/3, 33வது குறுக்குத் தெரு
பெசன்ட் நகர்,
சென்னை 600 090.
                                        23.05.2007


அன்புள்ள தோழர் அழகியசிங்கருக்கு,

பதி அநேக வணக்கங்களுடன் எழுதிக்
கொண்டது?  எப்போதும் ஓடிக்கொண்-
-டேயிருக்கும் உங்களை வார நாட்
களில அலைபேசியில் தேடினால்
நீங்கள் நீராடிக்கொண்டோ அல்லது மயிலாடு
-துறையில் ஆறிக்கொண்டிருக்கும்
இரவு உணவைத் தேடிச் செல்லும்
நேரமோ, வயலோ வரப்போ, புயலாகப்
போகும் பேருந்துகளுக்கு நடுவிலோ பிடிக்க
நேரிடும். சில வார்த்தைகளைத் தவிர
பேச முடியாது எனவே, மூச்சுவிட்டு
இந்த அஞ்சலட்டை.
கவிதைத் தொகுப்பு அற்புதம். அற்புதம்.
வரதராஜனின் வழவழ ஓவிய முகப்பிலிருந்து
கடைசிவரி 263ம் பக்கம் வரை
அற்புதம்.  ஞானக்கூத்தன் வழக்கம்போல்
சரியாக சொல்லியே தப்பித்து விட்டார்.
காரணம், அசாதாரணமாகும் கணங்
களும், கவிதையாவதையும் சாதாரணமாக
வே குறிப்பிட்டுவிட்டார்.  அவரும் ஒரு
கவிஞன் அல்லவா? கவிதைகளை
இடையிடையேயும், கடைசியிலும்
பிடித்துவிடுகிறார்.  சனி, ஞாயிறில் பேசு
வோம்.  இது வெறும் ரசீது..நன்றி.

எபபோதும் உண்மையுள்ள,


என்.எம்.பதி

பதியைப் பற்றி எழுதவேண்டுமென்று கடந்த சில தினங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.  தற்செயலாக கண்டபடி சிதறிக் கிடக்கும் என் புத்தகக் குவியலில் பதியின் இந்தக் கடிதம் பொக்கிஷம் மாதிரி கிடைத்தது.

பதி என்னை விட்டுப் போனாலும், ஏதோ விதத்தில் என்னுடன் பேச விரும்புவதாகவே தோன்றியது.  எப்போதோ அவர் எழுதிய கடிதம் ஏன் என் கண்ணில் பட வேண்டும்?  கடைசியில் அவரைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். ஒரு நல்ல நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்.  எல்லாவல்ல இறைவன் அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தரட்டும். 

Comments