Skip to main content
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு


அழகியசிங்கர்


5.


என்னை என் அலுவலகத்திலிருந்து விடுதலை செய்து விட்டார்கள்.  நான் போய்த்தான் ஆக வேண்டும்.  இந்த நினைப்பே என்னை மிரட்டியது.  வீட்டில் என் வயதான தந்தை, மனைவியின் தாய், என் பெண் என்று எல்லோரையும் விட்டு விட்டுப் போகவேண்டும்.  இது வலிய எடுத்துக்கொண்ட வலி. துக்கம்.  இந்தப் பதவி உயர்வால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.  சம்பளம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும்.  அதற்குக் கொடுக்கும் உடல் உழைப்பு, மன அழுத்தம் மிக அதிகம்.  டாக்டர் செல்வா நீங்கள் போகாமல் இருந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்.  போகாமல் இருந்தால் இன்னும் பின் விளைவுகள் ஏற்படும்.


சுரேஷிற்கும் பதவி உயர்வு கொடுத்திருந்தார்கள்.  அவனை மும்பைக்கு மாற்றி இருந்தார்கள்.  அவனுக்குப் போகவே விருப்பமில்லை.   "ஏன் நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள்?" என்று கேட்டான்.  "ஏதோ ஒரு தருணத்தில்  அசட்டுத் தைரியம் வந்து விடுகிறது," என்றேன்.  அவன் சிரித்தான்.
ஒரு 50 வயதில் குடும்பத்தை விட்டுப் பிரிவது என்றால், வனவாசம் செல்வதுபோல்தான்.  அழகியசிங்கர் என்னை ஆறுதல்படுத்தவோ பேசவோ தயாராய் இல்லை.  அவருடைய இணை பிரியா நண்பர் அமுதுவும் என்னைக் கண்டுக்கொள்ளவில்லை.


நான் கிளம்புவதற்குமுன், டாக்டர் செல்வா பிபிக்கு 2 மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருந்தார்.  நான் முதலில் அம்லான்க் ஏ என்ற மாத்திரையைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  பதவி உயர்வு, குடும்பத்தைவிட்டு விலகிப் போவது என்றெல்லாம் நினைத்தபோது பதைபதைப்பு அதிகரித்து விட்டது. 
பல ஆண்டுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்லான்க் ஏ எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது.  ஒரு விதத்தில் ரத்த அழுத்தம் என்பது மனப்பிராந்தியா என்று நினைப்பது உண்டு.


நான் பந்தநல்லூரில் சேர்வதற்கு முன்னால் பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தேன்.  வீட்டைவிட்டு காலையில் கிளம்பிவிட்டேன்.  வாசலில் என் குடும்பமே நின்று வழி அனுப்பியது.  அவர்கள் யாரையும் நான் திரும்பிப் பார்க்காமல் வேகமாக அசோக்நகரில் பஸ்ஸைப் பிடிக்கச் சென்றேன்.

                                                                                                                         (இன்னும் வரும்)
                                                            

Comments