Skip to main content


தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)

--------------------------------------------------------------------------------------------
சார் வணக்கம் சார்..”
“ம்ம்.. ம்ம்..”
“எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?”
“எந்தா வேணும் பர”
“சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…”
“அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் -
“சார்....”
“சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும், நான் பிசியா இருக்கேன்ல”
“அப்படியே என் சம்பளம் பத்தி..யும்..”
“சம்பளம்தான் போட்டாச்சே பேங்குக்குப் போய்க்காணும், அவ்வட சென்னு நோக்கு”
“வந்துச்சு சார் இரண்டு நாள் குறைவா வந்திருக்கு சார் அதான் என்னன்னுக் கேட்கலாம்னு..”
“அப்படியா, அங்க ஒங்க முதலாளி இருக்கார்ல போயி அவரைக் கேளு”
“என்ன சார்..?”
“சென்னு அவரை நோக்குன்னு..”
“சரி சார்..”
அவர் சரியென்று தலையாட்டிவிட்டு அந்த அறைவிட்டு வெளியேப் போனதும், அவன் துள்ளிக் குதித்துச் சிரித்தான், பக்கத்து அறையிலிருந்து நான் என்ன ரசூல் என்னாச்சு ஏன் இப்படி சிரிக்கிற என்றேன், அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. எழுந்து என் அறைக்கு வந்து என்னிடம் –
“சா...ர்.., சம்பளவு குறைவு சார்...” மீண்டும் காலை உதைத்துக்கொண்டு சிரித்தான். அவன் நாங்கள் பணிபுரியும் குவைத்து நாட்டின் தனியார் நிறுவனத்தில் உடன் வேலையாற்றுமொரு கணக்காளன், கேரள நாட்டைச் சேர்ந்தவன், தமிழரைக் கண்டால் தெரிந்தோரிடம் தமிழ்கலந்து மலையாளம் பேசுவான், புதிய தமிழர்கள் எனில் முற்றிலும் மலையாளத்தில் பேசி தன்னை தனித்த தேசத்திற்கு உரியவனாகக் காட்டிக் கொள்பவன்.
ஒரு அறையில் இரு பிரிவு செய்து ஒரு புறத்தை அவனுக்கும் மறுபுறத்தை எனக்கும் கொடுத்துள்ளது எங்கள் நிறுவனம். எனவே யார் இங்கு சம்பளவிவரம் குறித்து அவனிடம் ஏதேனும் கேட்க வந்தாலும் என்னைக் கடந்தே போயாகவேண்டும் என்பதால் இவன் செய்யும் இங்ஙனமான கீழ்த்தரமான செயல்கள் என்னையும் பாதிப்பதுண்டு. ஆனால் யாரைப்பற்றியும் அவனுக்குக் கவலையில்லை, அவனுக்கு இங்ஙனம் விவரம் கேட்க வரும் தொழிலாளிகளை இங்குமங்குமங்குமென அலையவிட்டு துன்புறுத்துவதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது.
நான் ‘பாவம் ரசூல் ஏன் இப்படி செய்கிறாய்’ என்று கேட்பதற்குள் அந்த அப்பாவிப் பெரியவர் மீண்டும் உள்ளே வந்தார்.
“சா..ர்..”
அவர் அழைத்ததும் இவன் முகத்தை இரும்பு போல் இறுக்கிக் கொண்டான். கால்மீது கால்போட்டுக் கொண்டு –
“ச்சொல்லுங்க டண்டா பாணி, மொதலாளி கிட்ட கேட்டாங்களா? என்ன சொன்னா(ன்) அவரு?”
“உங்க கிட்ட பேசச் சொன்னாரு சார்”
“பின்ன பர.. எந்தா ஆயி”
“ரெண்டு நாளு சம்பளம் குறைவா வந்திருக்கு சார்”
“ஆ..னோ, நான் நோக்கிக் கொள்ளாம், ஈ மாசம் சேர்த்து இட்டுகொடுக்கா(ம்) நீ போய்க்கோ.
“கண்டிப்பா வரும்ல சார்....’
“வரும்ப்பா.. நான் சொல்லியாச்சுல்ல வரும் போ...”
மீண்டும் அவர் வெளியேறிப் போனதும் காலை உதைத்துக்கொண்டு சிரித்தான். எனக்கு கோபம் மண்டை உடைய வந்தது, அதற்குள் அவனே எழுந்து என் பக்கம் வந்தான், வந்து -
“மதி..யே இவ்வட நோக்கு, ஆயாள கண்டா ? கேட்டு முடிப்பதற்குள் சிரித்தும், சிரித்துக்கொண்டே காலை உதைத்துங்கொண்டான்.., அதைத் தொடர்ந்து ‘சார் கண்டிப்பா வரும்ல சார்...’ என்று அவர் சொன்னதை வேறு மீண்டும் சொல்லிக் கிண்டலடித்தான்.
“நீ பண்றது நல்லதுக்கில்ல ரசூல் அவர் பாவம் பெரியவர், வறுமையின் வலி உனக்கு கேலியாகப் படுவது சரியல்ல”
“என்ன சரியல்ல???”
“உனக்கேன் இத்தனைச் சிரிப்பும் ஏளனமும்? விவரம் கேட்டால் அதற்கு பதில் சொல்லிவிட்டுப் போயேன்..”
“அதனைக்கொண்டு நினக்கெந்தா ஆயி, ஆயாளு எந்தா நிண்ட அச்சனானோ?”
“அவசியமில்லாம பேசாத ரசூல்...”
“பின்னே; நீ எந்தன உங்காளுக்கு வக்காலத்து வாங்குதா?”
“பெரியவரை நீ கிண்டல் பண்ணுவ கேட்டுக்குனு சும்மா இருக்கவா?”
“நான் என்ன சொல்லியாச்சு.. அவர் கேட்டதுக்கு பதில் சொல்லியாச்சி?”
“நீ எப்படி சொன்னன்னு எனக்குத் தெரியாதா, அவர் எவ்வளோ மரியாதையா கேட்கிறாரு? அதும் சம்பளம் பற்றிதானே கேட்கிறாரு? உன்னுதுல ரெண்டுநாளு சம்பளம் குறைஞ்சா உனக்கு எப்படி இருக்கும்?”
“அதுக்கெல்லாம் நா(ன்)ஒன்னும் செய்யாம்பற்றில்லா மோனே.., மோல் ல இருக்க ஆள் சொன்னா தரலாம், அதான் மொதலாலியப் போயி பாருன்னு சொன்னேன், ஞான் வேறெந்தா செய்யும், திஸ் இஸ் ஆபிஸ், நானொன்னும் இவ்வடத்து மொதலாளி அல்லல்லோ”
“நீ எதுவான்னா இரு, அவரின் பணிவை ஏன் கிண்டலடிக்கிறாய், நீயும் தொழிலாளி அவரும் தொழிலாளி’
“..................”
“அதும் டண்டா பானி என்று அவரின் பெயரைவேறு ஏளனமாய் அழைக்கிறாய்”
“பின்ன அவன்ட பேரன்தா ?”
டேய் அது தண்டபாணிக்கும் நீ சொல்ற டண்டா பானிக்கும் வித்தியாசமில்ல, அவர் எவ்வளோ பெரியவரு, எப்படி வணங்கி உன்னிடம் பேசுறாரு?”
“ச்சீ.. இதெந்தா டோ..., அவன் பேசினா நானும் பேசனும், அவனும் நானும் ஒன்னானோ ?”
“வேற ? உனக்கு தனியா தலையில என்ன கொம்பா முளைச்சிருக்கு?”
“அவன் ஆபிஸ் கிளின் பண்றவன், வெறும் வொர்கரல்லோ, ஆம் ய அக்கவுண்டன்ட், ஓபிஸ் ஸ்டாஃப், அறியோ?”
என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. கோபம் உச்சிக்கு ஏறியது. கையில் இருந்ததை இருந்தபடியே தூக்கி அவன் முகத்தில் விட்டெறிந்தேன்..
“லுக்.. நான் ஜி.எம் க்கு சொந்த அனியனானு(ம்), நின்னை இன்னு ஞான் கொண்ணுமுறிக்கும்”
“நீ எந்த மயிரான்னா இரு.. எதனா பண்ணிட்டுப் போ.. ஏண்டா என் தமிழன கிண்டல் பண்ற? நான்கன்னா என்ன உங்களுக்கு எளக்காரமா? தமிழன்னா என்ன காருதா? இல்லை தொட்டுக்க இனிக்குதா?” என்று கத்தி கோபத்தில் எழுந்து அவன் ஏதோ சொல்லிமுடிப்பதற்குள் சட்டைப் பிடித்து கத்தி பேச, பதிலுக்கு அவன் பேச, கோபத்தில் ஓங்கி ஒரு அரையே விட்டுவிட்டேன், பல் ஆடி ரத்தம் கொட்டிவிட்டது..
அவ்வளவுதான், அடுத்த நொடியே அலுவல் மொத்தமும் எழுந்து என் அறைக்கு ஓடிவந்து நின்றது. மேலாளர் வந்தார். அவுங்க அண்ணனும் வந்தார். இரண்டுபேரையும் ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் “நான் ஒன்றுமே செய்யவில்லை ‘தண்டபாணிக்கு சம்பளம் குறைவுன்னு வந்தான், உங்களைப் பார்க்கச்சொல்லி சொன்னேன், நீங்கள் சொன்னதும் இம்மாதம் சேர்த்து இட்டுத்தருவதாகவும் சொன்னேன். உங்கள் அனுமதி இன்றி நான் ஒரு பைசா கூட இங்கு யாருக்கும் தருவதில்லை. அதற்குள் என்னவோ இவனுக்கு இத்தனைக் கோபம் வந்து என்னை அடிக்கிறான். ஐ யாம் ஆனர் இன் மை டியூட்டி” என்று வேடமிட்டுப் பேசினான்.
என்னைக் கேட்டார் மேலாளர், என்ன செய்த என்றார், இங்ஙனம் இங்ஙனம் என்றேன்.
நீதான் முதலில் சட்டியை பிடித்தாயா என்றார் “சட்டையைப் பிடித்தது தப்புதான் சார்” என்றேன்
“அடிச்சிருக்க இது பெரிய தப்பு இல்ல?”
“ஆமா சார்..”
“அது ரத்தம் வர அளவு அடிச்சிருக்க, இது அரபு தேசம், காவல்நிலையத்துல புகார் சொன்னா உடனே உன்னை கைது செய்வாங்க, ம்ம்.. அவன்கிட்ட மன்னிப்பு கேளு” என்றார்.
தப்பு தான் சார், ஆனா இவன் ‘என் ஒட்டுமொத்த இனத்தையே அவதூறாகப் பேசுறான் என்று எப்படி அவரிடம் நான் எடுத்துச் சொல்ல? அதற்கு மாறாக ‘இல்லை இவன் தண்டபாணி போன்ற ஆட்களை கிண்டலடித்துப் பேசுகிறான்’ என்றேன்.
“அதற்கு.. நீ அவனை அடிப்பியா? இது என்ன உன் வீடு உன் வேலையாட்கள் என்று நினைத்தாயா? நீ நினைத்தால் எல்லாம் நடக்கவா நாங்கள் இங்கிருக்கோம்?”
“இல்ல சார்.. தப்பு தான் இனிமே அப்படி..”
“செய்றதை செய்திட்டு இனிமே என்ன இனிமே..”
“அவன்தான் சார் முதல்ல..”
“அவன் முதல்ல உன்னை அடிச்சானா? வாயிலதானே பேசினான்”
“ஆனா அவதூறு பேசினான் சார்”
“ச்ச.. நீ சாதுவானவன்னு நினைத்தேனே, இப்படி செய்திருக்கியே, எப்படி ரத்தம் வரமாதிரி அடிச்சிருக்க?”
“.....................” இனி பேசி பயனில்லை மௌனமாக நின்றேன் நான்.
“இதை சும்மாவிட முடியாது, இதற்கு நீ மன்னிப்பு கேட்டாலும் இல்லை என்றாலும் உனக்கு இது தான் கடைசி எச்சரிக்கை எழுந்து போ இங்கிருந்து” என்றார்.
நான் முகம் வாடி தலைகுனிந்து அங்கிருந்து வெளியேறி கீழறைக்கு வந்தேன். ‘உடனே டிசிப்ளினரி ஆக்சன் எடுங்க’ன்னு அவர் கத்தி சொல்லும் சப்தம் எனக்கு வெளியே வருகையில் கேட்டது.
அடுத்த சில மணித்துளிகளின் நகர்விற்குப் பின், ‘இரண்டு நாள் பணியிலிருந்து எனைத் தள்ளிவைத்திருப்பதாக மெமோ வந்தது. குமுறல் தாங்க முடியவில்லை எனக்கு. அவன் என்னிடம் பேசும்போது சொன்ன ‘டன்டா.. பானி’க்கும் அங்கே அவரிடம் பேசுகையில் சொன்ன தண்டபாணிக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.
ஆனால் இது புதிதல்ல, இது இங்கே தொடர்ந்து நடக்கும் இவர்களின் அட்டூழியம். இப்படி பணியிடத்தில் இவர்கள் செய்யும் கேளிக்கையும் அரசியலும் ஏராளம், அரபு தேசத்தில் வேலை செய்ய வரும் தமிழர்கள் அரபியைவிட இவர்களால் துன்புறுவது கொஞ்சநஞ்சமல்ல. அலுவல் சூழல் என்பது கூட வேறு, அதை தவிர்த்து கட்டுமான பணி நடக்குமிடம் மற்றும் பணிமனைகளில் இவர்கள் ஆடும் ஆட்டம் உச்சம். ஆயினும், சில இடங்களில் இரண்டாம் பட்சமாய் நம்மை நடத்தினாலும் “டேய்.. அவன் நம்மாளுடே” என்று சொல்லி தமிழருக்கு உதவி செய்வதும் சில விதிவிலக்காய் இங்கே நிகழ்வதுண்டு.
என்றாலும், பிறரை மதிக்கவும் அன்பு காட்டவும் இயல்பிலேயே கற்ற தமிழினம் அவர்களின் அரசியலில் படும் அவதிக்கு நிறைய கதைகள் வளைகுடா நாடுகளில் தேடாமலே ஆங்காங்கே கிடைக்கும்.
ஆக, அப்படி அவனின் துள்ளல் நகைப்பினூடே, அவன் வென்றுவிட்ட களிப்பினூடே இதர நாட்களும் கழிந்துப் போக, ஒருவேளை பேசியும் ஒருவேளை பேசாமலும் மாதங்களும் கடந்துப் போக, அந்த பழைய நினைவுகள் எல்லாம் மனதிலிருந்து அழிந்துபோய் அவனின் புதிய சிரிப்பை மட்டுமே பார்த்துச் சிரிக்கும் புதிய மனதினனின் மனநிலையில் இருவரும் சற்று மாறியிருக்க, பின்னொரு நாளில் கடைத்தெரு சென்றிருக்கையில் எதேச்சையாக அவனைக் கண்டேன்.
காலம் எப்பொழுதுமே அப்படித்தான் ‘வடுக்களை இதயத்தில் பதித்துவிட்டு காயங்களை ஆற்றிவிடுகிறது. அப்படித்தான், அவனைப் பற்றிய காயங்களையும் மனது ஆற்றிக்கொண்டுதான் விட்டது. அதோடு; என்னவோ, திடீரென அவனைக் கண்டதும் பழைய கோபமெல்லாம் இல்லாத மனதில் இடைவெளி விட்டுப்பார்த்த ஒரு நட்புணர்வு பீறிட்டது. அருகருகே இரண்டு வருடமாய் அமர்ந்து பணியாற்றிய, ஒன்றாக பேசி சிரித்த, ஒன்றாக அமர்ந்து உணவுண்ட உணர்வு போலது;
‘ஏய் ரசூல்’ கைதூக்கிக் காட்டி எப்படி இருக்கிறாய், இங்கே என்ன குடும்பத்தொடுப் பயணமா’ என்று கேட்டுவிட, அவனும் அவன் மனைவி பிள்ளைகளை விட்டு ஓடி வந்து எனை கட்டிப்பிடித்துக் கொள்ள, ஒரு நொடி உடம்பெல்லாம் ஆடிப்போனது. அடுத்தடுத்து.. எப்படி இருக்க, இன்னைக்கு ஏன் வேலைக்கு வரலை, இங்க யாரிருக்கான்னு இரண்டொரு வார்த்தை பேசி இன்னபிற நலமெல்லாம் கேட்டுவிட்டு,
அவனுடைய மனைவி குழந்தைகளை அருகே அழைத்து ‘இதோ பாரு இதுதான் மதிமாறன், என் அலுவல் சிநேகிதன், என் பக்கத்துக்கு அறை, ரொம்ப நல்லவன், நான் கூட சொல்லுவனே, எனக்கு ரொம்ப பிடிக்கும்னு மதி’ன்னு அவன்தான்’ என்றான்.
உடனே அவனுடைய மனைவியும் “ஆம் அதுசரி ஆயாளானோ; உங்களைக் குறிச்சி ஒருபாடு பரஞ்சுக் கேட்டுட்டுண்டு, எங்ஙன சுகந்தன்னையானோ?’ என்றாள்.
என்ன சொல்ல, ம்ம்.. நலம், நலம்தான் என்று சிலாகித்தேன்.
மற்றபடி பெரிதாகச் சொல்ல வேறில்லை என்னிடம், சும்மா ஓரிரு நிமிட நலம் விசாரிப்புதான். பின் பார்ப்போம் என்று கை குலுக்கி விட்டு அவன் போனான், நானும் வந்தேன்.
ஆனால் மனசு எப்படியோ ஒரு கனமாவும் லேசாவும் இருக்கமாதிரி ரெண்டாங்கட்டானா இருந்தது. ச்ச.. இவனுக்கு என் மேல இவ்வளவு பாசமா என்று ஒரு ஆச்சர்யம் எழுந்தது. அதன்பின் கொஞ்ச நாளில் அவன் எங்கள் நிறுவனத்தை விட்டு நின்று விட்டான். வேறு எங்கோ நல்ல வேலை கிடைத்ததாகச் சொல்லி எங்களைவிட்டுப் போனான்.
பிறகு ஓரிரு வருடங்கள் கழிந்தது. அவனில்லாத அறையில் தமிழருக்கான மரியாதை நிறைந்து இருப்பதாக எனக்கொரு நிறைவு இருந்தது, என்றாலும் அவனின் தனிப்பட்ட நட்பிற்கென்றும் மனதின் ஓரத்தில் ஒரு தனியிடம் இல்லாமலில்லை. அடிக்கடி அவனின் நினைவுகளோடும் நாட்கள் கடந்தன..
சுற்றும் பூமி நிறைய மனிதர்களைப் பிறப்பித்துக் கொண்டும், இருந்த மனிதத்தை மக்கள் அழித்தும் மிச்சப்படுத்தியும் வைத்திருக்க, ஏதோ ஒரு திருப்பத்தில் வெகுண்ட பூமி வெப்பம் தகிக்க நகரும் காலத்தோடு மீண்டும் மீண்டுமாய்ச் சுற்றிக்கொண்டு வருடங்களை விழுங்கிவிட; எங்களுடைய சம்பள ரசீதில் பேச்சுக்குக் கூட ஒரு காசு பணம் ஏறாமல், இதர மலையாளி மேலாளர்களின் சதிக்குட்பட்ட விடுமுறை தொலைபேசி மற்றும் தாமத வருகைக்கான கட்டணம் மட்டும் சம்பளத்தில் பிடித்ததுபோக, ஒரு வஞ்சனையின் வலிகலந்த சொச்ச சம்பளம் மட்டும் எப்பொழுதும்போலென அளவு மாறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது.
நாங்களும் வேறு வழியின்றி, வளைகுடா நாடுகளில் எங்குப் போனாலும் அவர்களேயிருக்கும்பட்ச்சத்தில் பேயிடமிருந்து தப்பித்து இன்னொரு புதிய பேயிடம் சிக்குவானேனென, ஒரு செக்கில் பூட்டிய மாடுகளாக மலையாள ஆளுமையின் கீழ் கட்டுண்டுக் கிடந்தோம்.
அப்படிக் கிடந்த ஒரு நாளில் –
வேறு பல பணிகளுக்கிடையில் நான் ஆழ்ந்திருக்க திடீரென பக்கவாட்டில் யாரோ உள்நுழைவதாய் உணர்ந்து எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன் –
ரசூல்....
ரசூல் நின்றிருந்தான்.
பெரிய கோர்ட் சூட் டை என பாந்தமாக அழகாக வந்து என்னெதிரே திடுமென நின்றான்.
தமிழ் மலையாளம் இனம் அடையாளம் என எல்லாவற்றையும் மனது உதறிவிட்டு நட்பின் தொலேறி அமர்ந்துக் கொள்ள, எனக்கு அவனைக் கண்ட சந்தோஷம் பெரிதாக இருந்தது. அதும் இவ்வளவு அழகா அவன் வந்துநிற்க -
ஹேய்... ரசூல்..... என்ன இது ஸ்மார்ட்........... எப்படி இருக்க என்றேன்.
அவன் ஓடி வந்து எனைக் கட்டிபிடித்து சலாம் சொல்லிவிட்டு ‘நல்லாருக்கேன் மதி..யே. நீ எப்படி இருக்க, நான் ஒரு பெரிய அக்கவுண்ட் ஆபிசரா ஆயிருக்கேன். நம்ம கம்பனி போல பல மடங்கு கூடுதல் சம்பளம் எனக்கிப்போ. இங்க ஒரு ஆடிட் இருந்தது அதான் வர வழியில அப்படியே உன்னையும் பார்க்கலாம்னு வந்தேன்’ என்றான்.
எனக்கு மனது மகிழ்வாள் நிறைந்தது. நம்மோடிருந்தவன் ஒருவன் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிப் பொங்கியது. என்னதான் தனக்கான பிடிசோற்றுக்கு பஞ்சம் என்றாலும் தன் நண்பனொருவன் இப்படி குறுகிய காலத்தில் ஒரு பெரிய நிலைக்கு வந்துள்ளான் என்று அறிகையில் அதைக் கண்டு பூரித்து வாழ்வது உயர்வெனப் பட்டது.
மனதார மேலும் வளர்ந்து பெரியாளாக வர வாழ்த்திவிட்டு பின் இருவரும் அருகிலிருந்த சிற்றுண்டி விடுதிக்குச் சென்றோம். அங்கேயே அமர்ந்து இருவரும் தேநீர் அருந்தினோம். வீட்டு விஷயங்கள் பேசினோம். அடுத்த நகர்வு குறித்து, இரு நிறுவனங்கள் குறித்தும் பேசி சில மணித்துளிகள் அரட்டையடித்து வேறு எல்லோரைப் பற்றியும் நலம் விசாரித்துவிட்டு மீண்டும் சந்திப்பதாய் சொல்லி பிரியாவிடை பெற்றோம்.
நான் இங்கு நல்ல பதவியில் இருப்பதாகவும், நிறைய உழைப்பதாகவும், இதை வேறு நிறுவனங்களில் செய்தால், இதே பதவிக்கு இன்னும் நிறைய சம்பாதிக்கலாமென்றும் அதற்கான முயற்சியினைச் உடனே செய்யென்றும் தகவல் சொல்லிவிட்டுப் போனான் ரசூல்.
மிக விலையுயர்ந்த மகிழுந்தில் ஏறி சாலைதிரும்பி மீண்டும் ஜன்னல்திறந்துப் பார்த்து எனக்கு கையசைத்துவிட்டுப் போன அவனின் நட்பு எனை நெகிழத் தான் செய்தது.
அவனை வழியனுப்பிவிட்டு வந்து நான் என் இருக்கையில் அமர்ந்தேன். அமர்ந்து பின்னால் சாய்ந்தேன். ஒரு பெரிய கேள்வி மனதிற்குள் எழுந்தது. என்ன மாதிரியான உலகமிது?
எப்படி இங்கே வாழ்வது?
எனக்குத் தெரிந்து அவனிடம் சொல்லிக் கொள்வது போல் அத்தனைச் சிறப்பென்று ஒன்றுமில்லை. அத்தனை பிறர் பற்றிய பொது நல்லெண்ணம் என்றெல்லாம் அதிகமாக அவனுக்கில்லை. பிறர் துன்புறுவதைக் கூட மகிழ்ச்சியாகப் பார்க்கக் கூடியவன். தோழமை ஏற்பட்டால் நன்றாக பேசுவான் நட்பாக இருப்பான். நட்பாக இருப்பான்.. ஆம் அதுதான், அங்கிருந்து தான் சற்று நூல் பிடித்தேன், அவன் நட்பாக இருந்தான். பழகியோர் உறவுற்றோர் என உற்றார் எல்லோரிடமும் அவன் நட்பாக இருந்தான். கிண்டலடித்தாலும், கோபம் கொண்டாலும் பின் அதை மறந்து புதிதாகப் பிறந்தவனைப் போல் பழகினான். பிடிக்காதவரிடமும் அன்பு பாராட்டினான். அன்பு செய்வது போல் நடிக்கவேனும் செய்தான். அதில் சிலருக்கான அலாதி இருந்தது.
அலுவல் என்றில்லை வீட்டிலும் அவன் மிக்க அன்பு செய்தான். பொதுவாக நாளெல்லாம் அவன் வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பதுண்டு. மனைவியைப் பற்றியும் குழந்தைகள் பற்றியும், அவனுடைய அண்ணன் தம்பிகள் அக்காத் தங்கைகள் பற்றியுமெல்லாம் மிக கவனம் செலுத்துவான். அங்குதான் அங்குதான் எனக்கு அந்த அவனுடைய சூழ்சுமம் புரிய வந்தது. ஒன்றுமேயில்லாத ஒருவன் அத்தனை எளிதில் உச்சியை அடைவதில்லை. இறைவன் எல்லோருக்குமே ஒரு சிறப்பைக் கொடுத்தே வைத்துள்ளான். அதைப் புரிபவர்கள் பெரியாளாய் ஆகிறார்கள். அவன் ஆனதன் ரகசியம் கூட அதுதான் குடும்பத்தை’ தனது சுற்றத்தை’ தனைச் சார்ந்தோரை அவன் நன்றாக வைத்திருந்தான். எத்தனைதான் அவன் சுயநலத் தனமாக இருந்தாலும், பிறர் பற்றிய கேளிக்கையான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் வீட்டில் அன்பும் அக்கறையோடுமிருந்தான்.
மனிதர்கள் பொதுவாக இரு வேறாக இருக்கிறார்கள்; ஒன்று, வீட்டைப் பார்த்துக் கொள்வது, அல்லது நாட்டைப் பார்த்துக் கொள்வது. இரண்டையும் பார்த்துக் கொள்வதற்குப் பக்குவப் பட்டவர்கள் மிகக் குறைவு. அதிலிருந்து நாம் மாறுபட வேண்டும். வீடும் பெரிது நாடும் பெரிதென்று இரண்டையும் இரு கண்ணினைப் போல் காக்க வேண்டும். நாட்டிற்கு செய்ய நினைக்கும் நல்லவைகளை வீட்டிலிருந்தேத் துவங்கிடல்வேண்டும். அப்படித் துவங்குபவர்களின் கையில்தான் நாளைய உலகின்’ சமதர்ம செழிப்பின்’ பொது அக்கறை நிறைந்த மனிதர்களின் விடிவிற்கான எதிர்காலம் தொக்கி நிற்கிறது. அவர்களில் ஒருவனாக நானிருக்க முயல்வேன், இவனின் வளர்ச்சியைக் கண்டெல்லாம் நாம் நம்மை மாற்றிக் கொள்ளக்கூடாது. நம் வெற்றி மட்டும் பெரிதென்று நம்புதல் நம் பண்பல்ல. எனை நம்பும் எஜமானனை வெறும் பணத்திற்காக விட்டுச் செல்பவனல்ல நான். நான் இருக்குமிடத்தில் நான் சரி. மனதால் எண்ணத்தால் நான் சரி. நமக்கான கதவு திறக்கும். நிச்சயம் திறக்குமென்று எண்ணிக் கொள்கையில் மேலே ஒரு அறையின் ஜன்னல் திறக்கப்பட்டது.
எங்களுக்கு தேநீர் மற்றும் குடிநீர் கொண்டுவரும் தம்பி அந்த ஜன்னலருகே வந்து ஒரு பிடி சோறள்ளி அந்த சுவற்றின் மீது எட்டி வைத்தான். சோற்றின் வாசம் காற்றில் கலக்கும் முன்னே காகங்கள் பறந்து வருவதுபோல்; இங்கே புறாக்கள் கூட்டமாக பறந்துவந்து அமர்ந்தன. ஒன்றின் முகம்பார்த்து ஒன்றென சோறு கொத்தித் தின்றன..
அந்த தம்பி வெறும் சொற்ப சம்பளம் வாங்குபன்தான் என்றாலும் அவன்மீது ஒரு தனி மதிப்பே வந்தது. அதற்குள் இன்னொரு தட்டில் சோறுகொண்டு படிவழியே இறங்கி என் அறையின் வாசல் கடந்து அலுவலுக்கு வெளியே போய் வாசலில் நின்றிருந்த நாயொன்றிற்கு தட்டோடு சோறு வைத்தான். அந்த நாய் எகுறிகுதித்து ஓடிவந்து வாளை ஆட்டிக்கொண்டு அவசர அவசரமாக பசியில் உணவை கவ்வி கவ்வி விழுங்கியது..
எனக்கு உள்ளூர ஒரு வெப்பம் பரவ சரசரவென மேஜைக்கு வந்து என் அலுவல் பைக்குள்ளிருந்த என் வங்கிக் கணக்கட்டையை எடுத்து அதிலிருந்த வங்கியின் தொலைபேசி எண்ணிற்கு அழுத்தி வங்கியில் எனதான பணம் எவ்வளவு இருக்கிறது என்றுக் கேட்டேன். கணிசமான தொகை இருப்பதாகச் சொல்ல, அதில் கொஞ்சம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, மீதியை நண்பர்களுக்கு அனுப்பி பசியில் அவதிப்படும் ஏழ்மைக் குடும்பங்களுக்கு ஏதேனும் வாழ்வாதாரம் அமைத்துத் தரச் சொல்லியும், எஞ்சினால் அதை ஏழை மாணவர்களுக்கு படிக்கவேண்டி கொடுத்து உதவவும், அதேநேரம் அனாதை குழந்தைகளுக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கும் தந்துதவுமாறு கேட்டு அதற்குத் தக்க ஏற்பாட்டினை உடனடியாகச் செய்தேன்.
அதற்குள் தண்டபாணி வந்து நின்றார், சார்.. என் சம்பளம் எட்டு வருஷமா ஏறவே இல்லை சார், என்றார். நான் எப்படிச் சொல்வேன் எனக்கும் தானென்று. இருந்தாலும் அது போகட்டும், அது ஒரு சதி, அது ஒரு இனத்தின் மீதுத் திணிக்கப்படும் நெடுநாளைய சதி; அதிலிருந்து வெளியேற இன்னும் நாம் எத்தனை இழப்போமா என்று வலிக்க, ஒரு பெருமூச்சினையிழுத்து விட்டுவிட்டு, சொல்லுங்கள் ஐயா, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன்.
என் பொண்ணுக்குக் கல்யாணம் வேற வெச்சிருக்கேன் சார், நீங்கதான் ஒரு தமிழ் ஆளு இங்க பெரிய பொறுப்புல இருக்கீங்க, நீங்க சொல்லி ஒரு ரெண்டு லட்சம் லோன் வாங்கி கொடுங்க சார், நான் மாசாமாசம் தவறாம கட்டுவேன் சார், நான் கண்ணியம் தவரமாட்டேன் சார் என்றார். அவர் பேச்சு என் அப்பா வந்து என்னிடம் என் தங்கைக்கு கல்யாணம் நடத்திக் கொடேண்டா என்று கேட்டதுபோலவேயிருந்தது. பேசும்போதே அவரின் முதுமை வேறு ஒரு புறம் வலிக்க’ ஏழ்மை கண்களின் ஓரம் கண்ணீரின் ஈரமாக அவருக்குப் படிந்துப் போயிருந்தது.
நான் ஒரு நொடி யோசித்துவிட்டு என் மேலாளரை அழைத்து என் தங்கைக்கு திருமணம் உடனே ஒரு இரண்டு லட்சம் கடனாக தர இயலுமா என்று கேட்டேன், அவர் தவிர்க்கமுடியாத அவசரமெனில் உதவலாம் வங்கிக் கணக்கினுடைய எண்ணினைத் தா என்றார். நான் பெரியவர் தண்டபாணியிடம் திரும்பி அவருடைய வங்கிக்கணக்கு எண்ணினை எழுதித் தரச்சொல்லி வாங்கி என் மேலாளருக்குக் கொடுத்தேன். அவர் கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார். அதற்குள் சுனாமி சுனாமி சுனாமியாம் ஊர்ல சுனாமியாம், நிறைய கடலோரப் பகுதிகள் பாதிப்பாம், மக்கள் குடிசை கூட இல்லாம பள்ளிக்கூடங்களில் தங்கியுள்ளார்களாம் என்று நண்பர்கள் பதறி ஓடிவந்தனர்.
பதறாதீர்கள், ஆளுக்கொரு கைபிடித்து சுனாமியை நம்மால் நிறுத்திவிட முடியுமா என்றேன். அதெப்படி முடியுமென்றார்கள். சரி, ஆளுக்கொரு பங்கிட்டு பணம் அனுப்பினால் அது அவர்களின் சொச்சக் கண்ணீரையேனும் துடைக்க உதவுமில்லையா என்றுகேட்க எல்லோரும் ஆமென்று சொல்லி வாரி வாரிக் கொடுத்தார்கள். தன்னால் இயன்றளவில் மதம் இனம் என ஒன்றும் பாராது இங்குமங்குமென வாங்கிச் சேகரித்துக் கொடுத்தனர். உடனே அதை ஊரில் ஒரு நண்பர்கள் குழு வைத்து பாதிக்கப்பட்டோருக்கு இயன்றளவில் உதவி செய்ய ஏற்பாடு செய்தோம்.
சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வந்தது. சுனாமி இங்கும் வரும், பெரிய பாதிப்பு இருக்கலாம் எச்சரிக்கை என்றார்கள். நான் இனி எது வந்தாலென்ன என்று எண்ணிக்கொண்டு தொலைக்காட்சியை அணைத்துவிட்டு மல்லாக்கப் படுத்து கண்களை மூடிக்கொண்டேன். கண்களுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து ஒவ்வொரு மலரிலாய் அமர்ந்து அமர்ந்து தேன் குடித்தன.
ஒரு பட்டாம்பூச்சி ஒரு மலருக்கருகில் போக இன்னொரு பட்டாம்பூச்சி அந்த மலருக்கு அருகில் வர’ அந்த மலரை விட்டுவிட்டு அந்த பட்டாம்பூச்சி பறந்து நகர்ந்து வேறொரு மலரில் அமரப்போக’ அங்கே இன்னொரு பட்டாம்பூச்சி பறந்துவர, அது அந்த மலரையும் விட்டுவிட்டு நகர்ந்து அருகிலிருந்த வேறொரு புதிய மலரினைத் தேடிப் போனது. மலர்கள் வனமெங்கும் பூத்துக் கிடந்தன, அதை வாரி தனதென்று வைத்துக் கொள்ளத்தெரியாத பட்டாம்பூச்சிகளுக்கு எந்த மலரிலும் தனதான உரிமையே இருந்திருக்கவில்லை. எல்லாமே எல்லோருக்குமாய் உள்ளதென நம்பி அவைகள் இங்குமங்கும் மாறி மாறி பறந்து தனக்குக் கிடைத்த இடத்தில் தேன்குடித்தன... நானும் எனைமறந்த ஒரு நிம்மதி வானில் நிம்மதியாய் பறக்குமொரு நிறைவின் உச்சத்தில் உறங்கிபோனேன்!!
என் உறக்கம் என்னிடம் மட்டுமில்லை, பிறரின் கனவுகளுக்குள்ளும் கால்நீட்டிக் கொண்டிருப்பது காலையின் விடியலில் மெல்ல உணரப்பட்டது...

வித்யாசாகர்

Comments