பத்மநாபனாகிய நான் பேசுகிறேன். யார் இந்த பத்மநாபன்? யாருமில்லை, சாதாரணத்திலும் சாதாரண மனிதன்தான் நான். என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவரைப் பற்றி பேச எத்தனையோ இருக்கும். ஏன் உங்களுக்குக்கூட ஏதோ தெரிவிக்க ஆசைப் படுவீர்கள். யாரும் பேசத்தான் விரும்புவார்களே தவிர, மற்றவர்கள் பேசுவதைக் கேட்க விரும்ப மாட்டார்கள். ஆனால் ஒருவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க விரும்புகிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் மனோதத்துவ மருத்துவர்களாக இருப்பார்கள். ஏன்என்றால் அவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். கேட்டால்தான் அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை கடவுளின் தூதுவர்களாக நினைத்துக் கொள்பவர்கள். அவர்கள் கேட்க மட்டும் செய்வதில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்வார்கள். நான் ஏதோ என்னைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன். நீங்களும் நான் சொல்வதைக் கேளுங்கள். வேறு எதுவும் சொல்ல வேண்டாம். சரி, எப்படி ஆரம்பிப்பது? நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சொல்ல விரும்பவில்லை....