Skip to main content

இருபது ரூபாய்..(சிறுகதை)இந்த முறை பாபு. ஆனால் அவரை அனுப்ப மேலாளருக்கு விருப்பமில்லை. பாபு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடுவார் என்று. பாபுவைப் பற்றி என்ன சொல்வது. 24 மணிநேரமும் பணத்தைப் பற்றியே சிந்தனை உள்ளவர். யாரிடம் எப்படி பணம் கடன் கேட்பது. பாபுவுக்கு குடும்பம் பெரிசு. 3 பெண்கள். பின் ஒரு ஆண் பிள்ளை. எல்லோரும் படிக்கிறார்கள். வருமானம் வங்கியில் கிடைக்கும் வருமானம் மட்டும்தான். வீட்டில் ஆடம்பரமான செலவு.

சாட்லைட் கிளைக்கு பாபுவை அனுப்ப மேலாளர் தயங்கியபோது, மேலாளர் மீதே பாபுவுக்குக் கோபம். ஒருநாள் சாட்லைட் கிளைக்குச் சென்றால், ரூ.300 கிடைக்கும். பாபு பரக்கிற பரப்பில் முன்னதாகவே பணத்தைப் போட்டு எடுத்துக் கொண்டு விடுவான். அன்று அப்படித்தான் டிஏ பில் போடாமலேயே பணத்தை வவுச்சர் போட்டு எடுத்துக் கொண்டு விட்டான். நான் மேலாளரிடம் புகார் செய்தேன். ஏனோ அவர் பாபுவை விஜாரிக்கவில்லை.

இது ஒரு பக்கம். பாபு புலம்ப ஆரம்பித்ததால், மேலாளர் சாட்லைட் கிளைக்கு பாபுவை இனிமேல் அனுப்ப ஒப்புக்கொண்டு விட்டார். பல மாதங்களாக சாட்லைட் கிளைக்கு நான் சென்று வந்ததால், சில பொறுப்புகளை பாபுவிடம் ஒப்படைக்க நானும் சென்றேன். காரில், நான், பாபு, மீனு..இந்த மீனு மதுரைப் பெண். அவளைத் தூக்கி சீர்காழி கிளையில் போட்டு சித்தரவதை செய்கிறார்கள். அவள் கிளார்க். பாபுவும், நானும் உதவி மேலாளர்கள்.

6கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கீராநல்லூர் சாட்லைட் கிளைக்கு 10 பேர்கள் வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாரத்தில் 2 நாட்கள் போகவேண்டும். ஒரு வாரத்தில் பாபுவுக்கு ரூ.600 கிடைக்கும். பாபு புலம்பியதற்குக் காரணம் இருக்கிறது.

சாட்லைட் கிளையில் உள்ள கணக்குகள் எல்லாம் மானுவல். கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி கணக்கு இருப்பது ஆபத்து. பாபு சாட்லைட் கிளைக்குச் செல்லப் போவதை அறிந்து எனக்கு இது வேற கவலை. மானுவல் கணக்கில் பலர் பணம் எடுக்கவே வருவதில்லை. பல கணக்குகளில் பேர் மாத்திரம் இருக்கும். என்ன முகவரி என்பது தெரியாது. பாபு நினைத்தால் சுருட்டலாம். மீனு செல்வதாக இருந்தாலும் கூட, எளிதாக சுருட்டலாம். மீனு புதுசு என்பதால், ஏமாற்றவும் ஏமாற்றலாம்.

ஆனால் பாபு அதுமாதிரி செய்யக்கூடியவரா என்பது எனக்குத் தெரியவில்லை. கொஞ்ச மாதங்களுக்குமுன் பூங்கோதை என்ற அலுவலர், வங்கியை ஏமாற்றி 3 லட்சம் வரை எடுத்துவிட்டாள். ரொம்பவும் தற்செயலாக அவள் ஏமாற்றிய விதத்தைக் கண்டுபிடித்தார்கள். வேறு பெயரில் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது, அந்தக் கணக்கிற்கு அனோமதயக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவது, பின் தானாகவே கையெழுத்து இட்டு பணத்தை எடுப்பது..மீனா மாதிரி மஞ்சுளா என்ற பெண் புதிதாகச் சேர்ந்திருந்தாள். பூங்கோதை சொல்கிறாள் என்று மஞ்சுளா புதிய கணக்கை தொடங்கி வைத்தாள். அந்த வினையால் அவள் எங்கள் கிளையிலிருந்து வேறு எங்கோ தூக்கி எறியப்பட்டாள். அந்தத் திருட்டைக் கண்டுபிடித்த கேசவனுக்கு உடம்பெல்லாம் ஆட ஆரம்பித்து விட்டது. வவுச்சர்களை செக் பண்ணும்போதுதான் கேசவன் கண்டுபிடித்தார். அவரால் முதலில் நம்பவே முடியவில்லை. பூங்கோதை அப்படிப் பேசுவாள். உண்மையில் அந்த வவுச்சர்களை நான் செக் செய்திருந்தால், கண்டுபிடிக்காமல் போயிருக்கலாம்.

அன்று சனிக்கிழமை. பூங்கோதைதான் திங்கட் கிழமையிலிருந்து சாட்லைட் பிராஞ்சிற்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்தோம். அப்படி முடிவு செய்த நாளில்தான் பூங்கோதையின் அயோக்கியத்தனம் தெரிந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சி. எங்கள் கிளையைவிட்டு பூங்கோதை போன பிறகு, திரும்பவும் தொடர்ந்து சாட்லைட் கிளைக்கு நான்தான் போய்க் கொண்டிருந்தேன். இதோ பாபு வந்து 2 மாதங்கள்தான் ஆகிறது.

சாட்லைட் கிளைக்கு நானும் பாபுவுடன் சென்றேன். அங்குள்ள நகைகளை எண்ணிக்கொடுத்தேன். பாபுவிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.

''சரி, வருகிறேன். இனிமேல் உங்கள் பொறுப்பு,'' என்றேன்.

''சார், ஒரு விஷயம். நீங்க மங்கள விலாஸ் வழியாகத்தான் போகப் போகிறீர்கள்...ஒரு தக்காளி சாதமும், ஒரு வடையும் வாங்கிக்கொண்டு போக முடியுமா?''

''சரி,'' எனறேன்.

என்னிடம் தக்காளி சாதம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூறிய பாபு பணம் எதுவும் தரவில்லை. நாங்கள் வந்த வண்டி டிரைவரிடம், என்னை மெயின் கிளை அலுவலகத்திற்குக் கொண்டு விடச் சொன்னேன். போகும் வழியில் மங்கள விலாஸ் ஓட்டலுக்குச் சென்று எனக்கும் பாபுவிற்கும் சேர்த்து தக்காளி சாதம் 2 வடைகள் வாங்கி஧ன். மொத்தம் 40 ரூபாய் ஆயிற்று. பாபு ஒரு தக்காளி சாதம் வடைக்கு ரூ20 தரவேண்டும்.

மதியம் 2 மணிக்கு பாபுவும்  மீனுவும்  எங்கள் மெயின் கிளை அலுவலகத்திற்கு வந்து விட்டார்கள். சாட்லைட் கிளைக்கு அரைநாள் பணிதான். அங்கு மானுவல் கணக்கை முடித்துக்கொண்டு மெயின் கிளையில் கணக்கை முடிக்க வேண்டும்.

பாபு உள்ளே நுழைந்தவுடன் என்னைப் பார்த்து,

''என்ன தக்காளி சாதம் வாங்கியாச்சா?'' என்று கேட்டார்.

 பொட்டலத்தைக் கொடுத்தபடி, ''20 ரூபாய் ஆயிற்று,'' என்றேன்.

பாபு பேசாமல் வாங்கிக்கொண்டு சென்றார்.

திரும்பவும் பாபு சாப்பிட்டுவிட்டு வந்தவுடன், ''என்ன சாப்பாடு நன்றாக இருந்ததா?'' என்று கேட்டேன்.

''நன்றாக இருந்தது.... கீரை வடை இருக்குமென்று நினைத்தேன்.'' என்றார்.

''கீரை வடை இல்லை...இதற்கே ரூ.20 ஆச்சு..,'' என்றேன்.

பாபு கண்டுகொள்ளவில்லை. எனக்குப் பதட்டம் ஆகிவிட்டது. எப்படி இவரிடமிருந்து ரூ20 வாங்கப் போகிறேன் என்ற கவலை வந்து விட்டது. கடைஊழியர் நாதமுனி என் பரபரப்பை உணர்ந்து,

''கவலைப் படாதீர்கள்..நீங்கள் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்க முடியாது,''என்றான் சிரித்துக்கொண்டே. பாபுவிடமிருந்து எப்படி 20 ரூபாய் வாங்குவது என்ற என் கவலையை மீனுவிடம் தெரிவித்தேன்.

''நீங்கள் வாங்கிக் கொடுத்ததாக எடுத்துக்கொள்ளுங்களேன்..'' என்றாள் மீனு.

''இல்லை..என்னிடம் கடன் என்று பத்து ரூபாய் கேட்டால்கூட அதைத் திரும்பவும் வாங்கும் வரை தூக்கம் வராது,''என்றேன்.

அன்று அப்படித்தான். பாபு பரபரப்பாக காரைக்காலிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் நுழைந்தவுடன், ''ஒரு பத்து ரூபாய் கொடுங்கள்,'' என்று என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அலுவலக வாசலுக்குச் சென்றார். அன்று முழுவதும் ஒரு பத்து ரூபாய் வாங்கிய நினைப்பே இல்லை அவருக்கு.

பாபுவிடம் எது கொடுத்தாலும் திரும்ப வராது என்று நன்றாகத் தெரியும். ஆனால் முகத்தில் அடித்தாற்போல் எப்படிச் சொல்வது. என் சங்கடம் இது. பாபுவிடமிருந்து இந்த 20 ரூபாயை எப்படியும் இன்றைக்குள் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

அலுவலகப் பரபரப்பில் பாபுவிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.வங்கி அலுவல் முடிந்து அலுவலர்களைத் தவிர எல்லோரும் போய்விட்டார்கள். எப்படியும் பாபுவிடமிருந்து வாங்கி விட வேண்டுமென்று முடிவு செய்து, பாபு இருக்குமிடம் சென்றேன்.

''சாட்லைட் கிளையில் என்ன கூட்டமா?'' என்று கேட்டேன் பாபுவைப் பார்த்து.

''எப்போதும் இருப்பதுபோல்தான். எப்படியும் அதிகமாக எல்லோரையும் பணம் போடச் சொல்ல வேண்டும்,'' என்றார் பாபு.

''இன்னிக்கு தக்காளி சாதம் ரொம்ப நல்லா இருந்தது...''என்றேன்.

அதைக் கேட்டு பாபுவும் தலை ஆட்டியபடி, ''நன்றாக இருந்தது,'' என்றார். நான் வாயைத் திறந்து

20 ரூபாய் கேட்க நினைத்தேன். அதற்குள் பாபுவை கிளை மேலாளர் கூப்பிட நகர்ந்து விட்டார். என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். இனிமேல் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்கின மாதிரிதான் என்று நினைத்துக் கொண்டேன். நாளைக்குக் கேட்டால், அப்படியா என்றாலும் என்பார். நிச்சயம் வாங்க முடியாது.

வீட்டிற்குக் கிளம்ப வேண்டிய நேரம் வந்து, இதோ பாபு கிளம்பிவிட்டார். அவர் காரைக்கால் போக வேண்டும். நான் அலுவலகத்தில் உள்ள எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டுத்தான் கிளம்ப வேண்டும். கிளம்புவதற்குமுன் மேலாளர், ஏபிஎம் கேசவன் என்று எல்லோரையும் கிளப்ப வேண்டும். இதோ பாபு போய்விட்டார். நாளைக்குத்தான் கேட்கவேண்டும். எங்கே கிடைக்கப் போகிறது? ஆறின கஞ்சி பழம் கஞ்சிதான்.

எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு வந்தேன். இரவு 8 ஆகிவிட்டது. நான் மயிலாடுதுறைக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டது. கம்ப்யூட்டர்களை அணைத்துவிட்டு வாசல் கதவைச் சாத்த வந்தேன். பாபு அவசரம் அவசரமாக அலுவலகத்தில் நுழைந்தார். ''என்ன பாபு?'' என்றேன். ''செல்லை வைத்துவிட்டுப் போய்விட்டேன்,''என்றார்.

நல்ல சந்தர்ப்பம் 20 ரூபாய் கேட்டுவிடலாமென்று நினைத்தேன். பின் பாபு செல்லை எடுத்துக்கொண்டு எங்களுடன் கிளம்பினார்.

வழக்கம்போல் மயிலாடுதுறை பஸ் நிற்குமிடத்தில்தான் காரைக்கால் பஸ்ஸும் நிற்கும். மேலும் பாபு வங்கிக் கதவுகளைச் சாத்தும்போது எந்த உதவியும் செய்ய மாட்டார். அவரை நான் மாப்பிள்ளை என்று என் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொள்வேன்.

எப்படியும் கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, பாபுவைப் பார்த்து, ''நீங்கள் 20 ரூபாய் கொடுக்க மறந்து விட்டீர்கள்...தக்காளி சாதம் வாங்கியதற்கு..'' என்றேன் துணிச்சலுடன்.

''நான் அப்பவே கொடுக்க வேண்டுமென்று, 100 ரூபாய்க்குச் சில்லறை மாற்றி வைத்துக்கொண்டிருந்தேன். இந்தாருங்கள்..'' என்று நீட்டினார்.

நான் அவரிடமிருந்து 20 ரூபாயைப் பறித்துக்கொண்டு மேலும் கீழுமாக அவரைப் பார்த்தேன்.

Comments

ஷைலஜா said…
நான் அவரிடமிருந்து 20 ரூபாயைப் பறித்துக்கொண்டு மேலும் கீழுமாக அவரைப் பார்த்தேன்////


இந்த பறித்துக்கொண்டு என்ற சொல்லாட்சியில் கதை மனசோடு ஒன்றிவிட்டது!
அப்பப்பா... அவரிடமிருந்து 20 ரூபாயை வாங்கி தெரு பிச்சைக்காரனுக்கு போட்டால் கூட பரவாயில்லை. நீங்கள் அவரிடமிருந்து 20 ரூபாயை வாங்கிய பின்தான் எனக்கு நிம்மதி... அழகியசிங்கர் சார்....அமெரிக்காவிலிருந்து நவீன விருட்சத்திற்கு அன்றாடம் தவறாமல் தண்ணீர் ஊற்றுகிறீர்கள்... அதுவும் நன்றாக வளர்கிறது... வாழ்த்துக்கள்.
பாபு உதவி மேலாளர் அல்ல... அவர் ஒன்றிற்கும் உதவா மேலாளர்...
/நான் அப்பவே கொடுக்க வேண்டுமென்று, 100 ரூபாய்க்குச் சில்லறை மாற்றி வைத்துக்கொண்டிருந்தேன்./

கேட்டது எத்தனை நல்லதாயிற்று:)! நல்ல கதை.

Popular posts from this blog