Skip to main content

புதிய அத்தியாயம்




சொன்ன கதையையே திரும்பத் திரும்பச்
சொல்லச் சொல்லிக் கேட்கிறது குழந்தை.
கவனப் பிசகாக
சிங்கத்தைப் புலியென்றோ
முயலை மானென்றோ
இரண்டு குருவிகளை மூன்றென்றோ
சொன்னோமேயானால்
பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
தவறென்று திருத்துகிறது.
உறக்கம் அழுத்தும்
அதன் விழிகளைக் கண்டு
சுருக்கி முடித்திட நினைத்தால்
திருப்தியற்றுச் சிணுங்குகிறது.
‘அதன்பிறகு அனைவரும்
நலமே வாழ்ந்தார்கள்’ எனும்
கடைசி வாக்கியத்துக்காக
இமைகள் விரியக் காத்திருந்து
நிறைவான புன்னகையுடன்
தூங்கச் செல்கிறது.

வாழ்க்கையைப் பல நேரங்களில்
அதன் போக்கில் விட்டுப் பார்க்க
அஞ்சுகிற நமக்கும்
குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
ஆரம்பம் ஆனது...

அணைத்த விளக்கு பரப்பிய இருளில்
ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்

புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து.


Comments

அருமை ராமலக்ஷ்மி

மழலையின் இனிமையைக் கண் முன்னே நிறுத்திவிட்டீர்கள்.

எங்க பேரன் நான் தூங்கினபிறகு மிச்ச கதையை முடித்துவிட்டு,என்னை எழுப்பி குட்நைட் சொல்லிவிட்டுத் தூங்குவான்.:)
ஷைலஜா said…
மழலைப்பருவம் அற்புதம் உங்க கவிதையும் தான் ராமலஷ்மி.
ஒவ்வொரு இருளுக்கு பின்னும் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒரு குழந்தை வருகிறது. நல்ல கவிதை
மிக்க நன்றி வல்லிம்மா, ஷைலஜா, நீலகண்டன்.