அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாவண்ணம் மறைக்கத் தெரிந்தவர்களுமல்லர். வீட்டு வாசலில் இரண்டு நாட்களாகத் தண்ணீர் ஊற்றப்படாதிருந்த போகன்வில்லாச் செடிகள் வாடியிருந்தன. வெண்ணிறப்பளிங்குத் தரையில் அதன் செம்மஞ்சள் நிறப்பூக்கள் உதிர்ந்து வீழ்ந்து குப்பையாகிக் கிடந்ததைக் கவனிக்காமல் அஸ்விதா என்ன செய்கிறாளெனக் கோபம் வந்தது. வழமையாக இதன் பராமரிப்பு எல்லாம் அவள் பொறுப்பில்தான். இதில் நீங்கள் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் வீட்டிலும் பெண்கள் இது போன்ற வேலைகளைத் தாங்களே ப...