Skip to main content

மொழம்


'பண்டிகை நேரம்
பதினஞ்சு ரூவாய்க்குப்
பைசா குறையாது மொழம்'


காசில் கறாராய் இருந்தாலும்
களை கட்டியிருந்தது
அவள் கடையிலே வியாபாரம்.


வந்து நின்ற பேருந்திலிருந்து
இறங்குகிறாள் ஒரு இளந்தாய்
கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த
மூன்று குட்டித் தேவதைகளுடன்.


எண்ணெய் வைத்து வாரிமுடித்த
பூச்சூடாப் பின்னல் நுனிகள்
பச்சை மஞ்சள் ஊதா ரிப்பன்களில்.


கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக்
குழந்தைகளை இழுத்துக் கொண்டு
வேகமாகக் கடந்தவளைக்
கூவி அழைத்துக்
கொடுக்கிறாள் பூக்காரம்மா


'அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.
*** *** ***

Comments

பூவைப் போன்றே பூ விற்பவளின் இதயமும்.... இனிய வாசத்துடன்...
ஹ ர ணி said…
மனசை அள்ளிய அழகு கவிதை. அருமை.அருமை.