Skip to main content

எதையாவது சொல்லட்டுமா........39

குளிர் காலத்தைவிட கோடைகாலம் மிகக் கடுமையானது. அதுவும் என் அலுவலகக் கட்டிடத்தை விட மட்டமானது எதுவுமில்லை. காலையில் மயிலாடுதுறையில் 6 மணிக்கு மின்சாரத்தை நிறுத்தினால் 9 மணிவரை ஆக்கி விடுகிறார்கள். சூடு பறக்கும் தேர்தல் நேரம் வேறு. யாருக்கு நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானே கேட்டுக்கொள்கிறேன். போனமுறை என் பெயரும், நடிகர் கமல்ஹாசன் பெயரும் வாக்களர் பட்டியலில் இல்லை. என் பெயர் இல்லை என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் பெயர் விடுப்பட்டிருந்தது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துவிட்டது. நான் சாமான்யன் என்பதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

சரி யாருக்கு ஓட்டுப் போடுவது. ஒவ்வொரு முறையும் நான் ஓட்டுப் போடும்போது எல்லாக் கட்சிகளிலும் ஓட்டுப் போடுவேன். சிலசமயம் முகம் தெரியாத தனித்து நிற்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுவேன். அல்லது ஓட்டே போடாமல் போய்விடுவேன்.

ஓட்டுப் போட்டு எதாவது கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களுடைய குறையைத் தீர்க்க முடியாது. பெரிய புரட்சியை செய்து விட முடியாது. ஆனால் நியாயமான நிர்வாகத்தை வெளிப்படுத்தினால் போதும். அது மாதிரி தரக்கூடிய கட்சி எது?

திராவிடக் கட்சிகளை விட மாற்று எதாவது உண்டா என்றால் இல்லை. காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எல்லோரும் தலைவர்களாக தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். கட்சிக்குள்ளேயே கொடும்பாவி எரிக்கும் சம்பவம் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் நடக்காது. பாரதிய ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சிதான். இந்துத்துவா முத்திரை பலமாக விழுந்துவிட்டதால் அதற்கு ஓட்டு கிடைப்பது கடினம்.

பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சியாகப் போய்விட்டது. தமிழ் நாட்டில் பரவலாக உள்ள மற்ற ஜாதி மக்களுக்கு அவர்கள் சேவை போய்ச் சேராது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அப்படிப்பட்டதுதான். எல்லா மக்களுக்குமான கட்சியாக அவர்களால் மாற முடியாது. அதனால் அவர்கள் ஓட்டும் குறிப்பிட்ட வகுப்பினரின் ஓட்டுகளாகவே இருக்கும்.

நான் விரும்புவது தோழர்கள் கட்சியைத்தான். குறிப்பாக மார்க்கிஸ்ட் கட்சி. ஆனால் அவர்களாலும் தனிப் பெரும் கட்சியாக தமிழ் நாட்டில் உருவாக முடியவில்லை. திரும்பத் திரும்ப திமுக, அதிமுக கட்சிகளையே பார்த்தாயிற்று. ஒரு மாற்றம் வேண்டும். விஜய்காந்த் கட்சியான தேமுதிகவை எடுத்துக்கொண்டால், அவர் கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் விஜய்காந்த் பேசுவதைக் கேட்டால், ஒரே ஆவேசமாகப் பேசுகிறார். அப்படி ஏன் பேச வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. பொதுவாக நான் விஜய்காந்த் படம் அவ்வளவாகப் பார்க்க மாட்டேன்.

சரி யாருக்கு ஓட்டுப் போடுவது? ஒவ்வொருமுறையும் மக்கள் நிதானமாகத்தான் தீர்பளிக்கிறார்கள். ஒருமுறை திமுக என்றால், அடுத்தமுறை அதிமுக. ஒவ்வொரு முறை ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்காக செய்யும் திட்டங்கள் பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கிறது. இதையே அவர்கள் முழு வீச்சாக செய்தால் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. கலைஞர் ஆட்சி பாலங்கள் ஆட்சி என்று சொல்லலாம். எல்லா இடங்களுக்கும் எல்லோரும் போய்வருவதற்கு பாலங்களை அசுர சாதனையாக செய்திருக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லை. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள். அடையாரில் அண்ணா நூலகத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
அதிமுகாவும் முக்கியமான கட்சிதான். அவர்கள் காலத்தில் மின்சாரம் கட் ஆகவில்லை. அந்தக் கட்சியின் தலைவி எல்லா விஷயங்களிலும் பிடிவாதம் பிடிப்பதைத் தளர்த்திக் கொண்டால் நன்றாக இருக்கும். ஒரு ஆட்சி 5 ஆண்டுகள் ஆண்ட பிறகு, வேறு கட்சிதான் வரவேண்டும். அப்போதுதான் ஒருவித மாற்றம் தெரியும். முக்கியமான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு எல்லோருக்கும் இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்கள். சரி மக்களிடம் வாங்கும் வரிப் பணத்தில்தானே எல்லாம் கொடுக்க முடியும்?

வங்கிகளில் நாங்கள் கடன் தருகிறோம். அரசாங்கத்தின் இலவசத் திட்டத்தால், வங்கியிலிருந்து கிடைக்கும் கடனும் இலவசமாக நினைத்துக் கொள்கிறார்கள். டிபிஎன்னில் கையெழுத்து வாங்க ((கையெழுத்துப் போடவில்லை என்றால் கடனே தள்ளுபடி ஆகிவிடும்) a) சாலிகிராமில் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு கையெழுத்துதான் போட்டார். கடன் எவ்வளவு தள்ளுபடி ஆகும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார். பணம் கட்டும் நோக்கம் சிறிதும் இல்லை.

அரசாங்கம் இலவசமாக எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க ஆரம்பித்தால், கடன் என்ற பெயர்கூட இலவசம் என்று ஆகிவிடும். சரி, நானும்தான் க.நா.சு நூற்றாண்டை முன்னிட்டு அவருடைய சில கவிதைகள் புத்தகத்தை அளிக்கிறேன் என்று கூறினாலும் கூட, யாரும் இலவசமாகக் கூட வாங்கி வைத்துக்கொள்ள தயாராக இல்லை. ஏன்?

(இன்னும் வரும்)

Comments

உங்கள் கூற்றைப் படித்த போது சற்றும் எதிர்பாராதக் கடைசி வரியில் ஒரு நல்ல கதையைப் படித்தது போல் ஆகிவிட்டது. உங்கள் வீட்டில் காசு என்று கூறினால் கூட இப்போதைக்கு உங்களுக்கு கநாசு என்று மட்டுமேக் கேட்கும்.
I would like to receive KA NA Su books, but please dont ask em to send post card.

shall I mail you my postal address (chennai0