Skip to main content

எது கவிதை........3

எனக்கு அலுவலகம் போகும்போதுதான் கவிதையைப் பற்றி சிந்திக்க சரியான நேரம். கவிதையைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். சீனா சென்று வந்த என் நண்பர் ஒருவர், 'நீங்கள் அங்கு சென்றால், அங்கு கவிதை எழுத ஏராளமான இடம் இருக்கும். உங்களை நினைத்துக்கொண்டேன்,' என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கவிதை எழுதுவது ஒருவித மனநிலை. அதற்கும் கவிதை எழுதுவதற்கும் எந்தச் சம்மதமும் இல்லை. எங்கு சென்றாலும் கவிதையும் எழுத முடியும் அல்லது எழுத முடியாது. பெரும்பாலும் எனக்குக் கவிதை எழுத பஸ் ஸ்டாண்டில் பஸ் பிடிக்க நிற்கும்போதுதான் தோன்றும்.

அதே சமயத்தில் வலுகட்டாயமாக கவிதையும் எழுதக் கூடாது. ஆனந்த்தை ஒரு முறை அவர் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றேன். 'விருட்சத்திற்கு எதாவது கவிதை இருந்தால் கொடுங்கள்,' என்று கேட்டேன். 'கொஞ்ச நேரம், இருங்கள்,' என்று கூறியவர். உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து கவிதையை எழுத ஆரம்பித்து விட்டார். எழுதியதைக் கொடுத்தும் விட்டார். 'எப்படி இது மாதிரி?' என்று கேட்டேன். 'நீங்கள் கேட்டவுடன் எழுதிக் கொடுத்தேன்,' என்றார்.

இப்படியும் கவிதை எழுத முடியும். ரொம்பவும் யோசித்து கவிதை எழுத நினைத்தால், கவிதை வராமலே போய்விடும். கவிதையை எழுதிவிட்டு கவிதையைப் பற்றி விளக்கம் கூறுவது. எந்தச் சந்தர்ப்பத்தில், எப்படி கவிதை எழுதினேன் என்று எழுத ஆரம்பத்தால், கவிதையைப்படிக்கும் போது உண்டாகும் சுவாரசியம் குறைந்து விடும்.

'சில க.நா.சு கவிதைகள்' புத்தகத்தை ஒருவருக்குக் கொடுத்தேன் (இலவசமாக வழங்கப்படுகிறது). அதைப் பார்த்துவிட்டு அந்தக் காலத்தில் பிள்ளைத் தமிழில் இப்படித்தான் எழுதுவார்கள் என்றார். அவர் முடிதிருத்தம் செய்யும் கடை வைத்திருக்கிறாராம். அவரே 1000 கவிதைகள் எழுதியுள்ளதாகக் கூறினார். எல்லாம் நோட்புக்கில் இருக்கிறது என்றார். இப்படி சொல்பவரும் இருக்கிறார்கள்.
ஒருவர் கவிதையை எழுதிவிடுவார். பின் சந்தேகம் வந்துவிடும். வரியை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பார். பிரமிள் அவர் கவிதையை பலமுறை மாற்றி மாற்றி எழுதிக்கொண்டே இருப்பார். ரொம்பவும் மாற்றிக்கொண்டே போனால் கவிதை நம்மை விட்டு ஓடிப் போய்விடும். ஒருவித சாமர்த்தியம்தான் அதில் தென்படும்.

கவிதையை இந்த subjectல் எழுத வேண்டுமென்றும் எழுதக் கூடாது. கவிதை வராது. ஓடிப்போய்விடும். இன்னும் சிலருக்கு கவிதை மனதிற்குள்ளே இருக்கும். ஆர்.ராஜகோபாலன் என்ற கவிஞர், கவிதையை மனதிற்குள் எழுதிவிட்டேன். பேப்பர் பேனா எடுத்து வந்து எழுத வேண்டும் என்பார். என்னால் அதுமாதிரி கவிதை எழுத முடியாது. அதேபோல் கவிதையை மனதிற்குள் வைத்திருக்க முடியாது. ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டு, திரும்பவும் எழுத ஆரம்பித்தால் முன்பு எழுதியது மாதிரி கவிதை வராது.

க.நா.சுவிடம் எனக்குப் பிடித்த விஷயம். கவிதையை அலட்சியமாக எழுதுவது. ஒரு நோட்புக் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு ஒரு கவிதை என்றெல்லாம் எழுதியிருக்கிறார். அவருடைய 'விலை' என்ற கவிதையைப் படித்து எனக்கு ஆச்சரியம். 22 நாட்களில் சர்மாவின் உயில் என்ற நாவலை எழுதியிருக்கிறார்.

விலை என்கிற கவிதையை அந்தக் காலத்தில் எழுதியிருந்தாலும், இந்தக் காலத்திற்கு ரொம்பவும் பொருந்துகிறது.

ஓ..ஓ...ஓ...ஓ
இவனுக்குத் தேச பக்தி
நிறைய வுண்டு. தேசத்தை
விற்கும்போது
நல்ல விலை போகும்படிப்
பார்த்துக் கொள்வான்
இவனுக்கு தேசபக்தி
நி-றை-ய வுண்டு
ஓ....ஓ.....ஓ......ஓ

கவிதையில் ஓ....ஓ...என்கிறாரே அது எதைக் குறிக்கிறது. க.நா.சுவின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்த கவிதை. எளிமையாகப் புரியும்படி கவிதை இருப்பதோடு இல்லாமல், இன்றைய ஊழல் செய்யும் அரசியல்வாதியைப் பார்த்தா ஓ ஓ என்கிறார்.

இந்தப் புத்தகத்தைத்தான் இலவசமாக எல்லோருக்கும் அனுப்புகிறேன் என்கிறேன. ஒரு கார்டில் உங்கள் முகவரியை அனுப்புங்கள் என்கிறேன். இன்று வர 6 பேர்களைத் தவிர யாரும் புத்தகம் வேண்டுமென்று கேட்கக் கூட இல்லை. ஓ ஓ ஓ ஓ......

(இன்னும் வரும்)

Comments

ஹ ர ணி said…
அன்புள்ள...

கட்டுரை சுவாரஸ்யமாகப் போகிறது. என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது மனம் நெகிழும் தருணத்தில் அப்படியே சொற்களில் பதியும்போது அது கவிதையாக இருக்கிறது. நம்முடைய அறிவின் சாமர்த்தியத்தை அதனுள் திணிக்கும்போதும் அது கவிதை என்கிற அடையாளத்தைப் பெறுகிறது. குழந்தையை குழந்தையாக ரசிக்கும்போது இருக்கும் மனோபாவம் அக்குழந்தை வளர்ந்து பருவம் எய்துகிறபோது மாறுவதுபோல மாறிவிடுகிறது என்பதுதான் உண்மை. ஒரு குழந்தையைப் போலத்தான் எளிமையாகவும் பாசங்கு அற்றதாகவும் கள்ளங்கபடமற்றதாகவும் எழிலாகவும் இருக்கவேண்டும் என்பார் தாகூர். தொடர்ந்து வாசிப்பேன்.
எனக்கு க.நா.சு புத்தகம் அனுப்பி வையுங்கள். முகவரி . 31 பூக்குளம் புதுநகர், கரந்தை, தஞ்சாவூர் 613 002.
கவிதை குறித்த ஆழமானத் தொடர்... எது கவிதை? தொடரட்டும் அது ஒரு தனி புத்தகமாகவும் வரட்டும்.. கவிதை அன்பர்களுக்கு மிக பிடித்தமானதாவும் கவிதை ஆர்வலர்களுக்கு வழி காட்டும் விதமாகவும் இருக்கும்.
அருமையான பகிர்வு. நன்றி.

நேற்றுதான் கார்ட் வாங்கி வந்தேன். இன்று அனுப்பி விடுவேன்.
எனக்கு ஒரு புத்தகம் கிடைக்குமா..?! :-)