ஐயப்ப மாதவன்
மாமல்லன் தெருவில் அதிகம் பூனைகள் இருக்கின்றன
பல்வேறு நிறங்கள்
ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு விநோதம்
சில அணில்பிள்ளைகளை கொன்று தின்கின்றன
பசியின் வெறியோடு
சில எஜமானர்களின் அன்பு பிடிக்குள்
கிடைக்கும் எலும்புகள் அதிகம் கலந்த
மாமிசத் துண்டுகளை
முட்களோடு ஒட்டிய சிறிய சதைப்பகுதியோடு
கூடிய மீன்களை உண்டு மகிழ்கின்றன
அவனது மாடியில் எப்போதும்
ஒரு பூனை சதா அலைந்துகொண்டு
விசுவாசத்தின் அடையாளமாக
மேலும் அவன் உதடசைவுகளுக்கு ஏற்றவாறு
தன் நடத்தையை மாற்றியவாறு
அவனை விரும்பும் அது ஒரு பெண் பூனை
குரல்வழியே துரத்தும் ஓரிரு சமயங்களில்
எதாவது தேவைப்படின்
அப்புறம் படுத்துக்கிடக்கிறது
நிலவின் நிழல்போல
பெரிதாயிருந்த அதன் வயிற்றின் எடை
குறைந்தவேளை
அதைச் சுற்றி மூன்று சிறு குட்டிப்பூனைகள்
அவனுக்கு பொறுப்பு கூடிவிட்டதாக்
நினைத்துக்கொண்டான்
மாடிக்கு வரும் தருணங்களில்
அவற்றிற்காக எதாவது தருகிறான்
அவ்வாறான பொழுதில்
வன்மத்திலிருந்து ஒரு கிழட்டு
ஆண் பூனை அங்கு வந்துவிட்டது
அவன் அதை அங்கிருக்கும் பொழுதுகளில்
விரட்டியடிக்கிறான்
அதன் பார்வை அவனை அச்சுறுத்துகிறது
குட்டிகள் மாயமாய் போன வேளை
தரையெங்கும் ரத்தக் கசிவு
பின்னங்கால்கள் சிதைந்த பெண் பூனை
பதறிய அவன் விழிகள் அசையாது
உறைந்த குருதியை
சிதைந்த பெண் பூனையை
பார்த்துவிட்டு
விலங்குகள் சரணலாயத்திற்கு
போன் செய்துகொண்டிருந்தான்.
Comments