இரகசிய வேதனை
அசோகமித்திரன்
இருமுறை பஸ் கட்டண விகிதத்தை மாற்றியபோதும் அவன் சங்கடம் தீரவில்லை. முதன்முறை அவன் போகும் இடத்திற்கு 1.75 என்று நிர்ணயத்திருந்தது. கால் ரூபாய் நாணயம் அவனிடம் இருக்காது. இரண்டு ரூபாயாகக் கொடுத்தால் பல நேரங்களில் பாக்கிச் சில்லறை வராது. சில நேரங்களில் வருவது பொதுப் பழக்கத்திலிருந்து மறைந்திட்டட இருபது காசு நாணயமாக இருக்கும். நாட்டில் உள்ள இருபது காசு நாணயங்களெல்லாம் பஸ் கண்டக்டர்களிடம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
இரண்டாம் முறை மாற்றப்பட்ட கட்டணம் 1.25. கால் ரூபாய் சில்லறை இல்லையென்றால் பஸ்ஸில் ஏறவே பயப்பட வேண்டும். எவ்வளவு கால் நாணயங்களைச் சேர்த்து வைக்க முடியும்? இன்று ஒரு கால் ரூபாய் நாணயமும் இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான தடவைகளில் கால் ரூபாய்க்காக கண்டக்டர்கள் கொடுத்த இருபது காசு நாணயங்கள் இருந்தன. ஒரு முறை, ஒரே ஒரு முறை, அவர் கொடுக்கும் இருபது காசை அவர்கள் கால் ரூபாயாக ஏற்றுக்கொள்ளக் கூடாதா?
பஸ்ஸில் பயணம் செய்வதே ஏதோ பிச்சைக்குப் போய் நிற்பது போலச் செய்து விட்டார்கள் கண்டக்டர்களும் டிரைவர்களும். பெரிய பஸ் நிலையங்களில் அந்தக் கேவலத்தைச் சொல்லி முடியாது. எல்லாரும் ஒரு பஸ்ஸில் ஏறி வியர்த்து விருவிருக்கக் காத்திருந்தால் வேறொரு பஸ் காலியாகக் கிளம்பிப் போகும். அப்படியே நிறுத்தி ஏற்றிக்கொண்டால் கால் வைக்க முடியாத குப்பை அல்லது சேறருகே பஸ் நிற்கும். குண்டுப் பெண்மணிகள் பையுடனும் குழந்தைகளுடனும் ஓடி வரும் காட்சி நரகத்தை நம்பாதவர்களையும் நம்ப வைக்கும். கையிலிருக்கும் ஒரு பெட்டியை அனுமதிக்க முடியாது என்று நிர்தாட்சண்யமாக இறக்கி விடுவார்கள். அல்லது ஏற்றவே மாட்டார்கள். இதெல்லாம் அவனை வாட்டி வதைக்க அவன் இம்முறை ஒரு ரூபாயையும் ஒரு இருபது காசு நாணயத்தையும் கண்டக்டரிடம் நீட்டினான். கண்டக்டர் அதை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சீட்டு கிழித்துக் கொடுத்தான்
Comments