Skip to main content

மழை இரவு

பெரும் மழை இரவொன்றில்
குளிர் தளைத்திருந்த உடலை
வெப்பமேற்ற வென்புகை குழலொன்றை
பற்ற வைத்தேன்.
மஞ்சள் விளக்கின் அருகாமை
வெப்பமும் ஈரக்காற்றில் படபடத்துக்
கொண்டிருந்த படிக்கப் பிடிக்காமல்
வீசி எரிந்த புத்தகத்தின் வாசனையும்
ஏனோ பிடித்திருப்பதாக தோன்றியது.
வெளியில் தவளை சப்தமும்
அதன் பின்னான அமைதியும்
மழை இரவின் அச்சத்தை
திரித்துக் கொண்டிருந்தது.
நீண்ட நேரம் சிறு சிறு புகைகளாக
சுவைத்திருந்த சிகரெட் விரலில்
சுடும் போது சுண்டி எரிந்து விட்டு
மீண்டும் படுத்துக் கொண்டேன்.
அதன் பின் பெய்த மழையும்
பரவியிருந்த சிகரெட் நெடியும்
எப்போது விலகியது என எனக்கு
தெரியவில்லை.
மீண்டும் என்னை எழுப்பிவிட்டது
கதவிடுக்கில் கசியும் அதே சூரியன்

Comments