Skip to main content

சி மணி

ந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சி மணி சேலத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்குத் துக்கம் தந்தாலும் நான் எதிர்பாராதது அல்ல. உத்தமமான அவருக்குத் தன் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளத் தெரியாது. யாருக்குத்தான் தெரிகிறது என்று கேட்கலாம். நான் 'எழுத்து' பத்திரிகைக்கு முதலாம் ஆண்டு என் மகத்தான நண்பர்களில் ஒருவரான கி.ரா. அவர்களால் சந்தாதாரன் ஆனேன். (இது கரிசல் கி.ரா அல்ல). அப்போதே சி மணியுடையது அப் பன்னிரண்டு இதழ்களில் வந்திருக்கும். எனக்குப் பத்திரகையே ஒரு சோர்வு தந்தது. எழுத்தின் முக்கியக் கூறுகளைத் தவிர்த்து தவிர்க்கக்கூடியது மீத கவனம் செலுத்துவது போலிருந்தது.
நான் சந்தாதாரனாக இல்லாத போதிலும் அவ்வப்போது அது பார்க்கக் கிடைக்கும். நானும் சி சு செல்லப்பாவுமாகச் சேர்ந்து எது எதற்கோ நிதி, பேச்சாளர் என்று ஏற்பாடு செய்ய நிறைய அலைந்திருக்கிறோம். எஸ்.எஸ் வாசன், கிரிஷ் கர்னாட், எஸ்.கிருஷ்ணன், ஆருத்திரா என ஒரு நாளைக்கு ஒருவராகத் தடாலென்று போய் நிற்போம். அப்போது டெலிபோன் சாதாரண மக்கள் புழக்கத்துக்கு வரவில்லை.
செல்லப்பா ஒரு முறை கூட அவருடைய பத்திரிகையின் ஆதாரமாக விளங்கியவர்களைப் பற்றிச் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில்தான் இலக்கியச் சங்கம் என்றதொரு அமைப்பும், நடை என்ற பத்திரிகையும் தோன்றின. இதெல்லாம் எதற்கு என்று செல்லப்பா கேட்டதாக அந்த நண்பர்கள் சொன்னார்கள்.
'இலக்கியச் சங்கம்', 'கோணல்கள்' என்றதொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட 'நடை' ஞானக்கூத்தன் கவிதைகளை வெளியிட்டது! என்னுடைய சிறுகதை ஒன்றை வெளியிட்டது! அப்போது சி மணி சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அநேகமாகத் தினமும் நாங்கள் சந்திப்போம். நிறையப் பேச இருந்தாலும் ஒருவரையும் குறை கூறவில்லை. நான் சேலம் வரவேண்டும் என்று எவ்வளவு முறை அழைத்திருப்பார்! நான் ஒருமுறை பேருந்துச் சீட்டு வாங்கிப் பயண தினத்தன்று மூச்சை விட முடியாமல் சீட்டை ரத்து செய்தேன்.
'நடை' ஐந்தாவது இதழின் போதே அவருக்கு அவநம்பிக்கை வந்துவிட்டது. நல்ல விஷயங்களாக வருவதில்லை என்று சொன்னார். எட்டாவது இதழோடு நிறுத்தி விட்டார். சி மணியின் ஒரு நண்பர் வி.து சீனிவாசன், எனக்கு மிகவும் ஆப்தமாக இருந்தார். அவருடைய விமர்சனம் தவறியதேயில்லை. அதே நேரத்தில் மிகவும் உற்சாகமாகவும் இருப்பார். அந்தச் சில மாதங்கள் மகிழச்சிகரமானதாக இருந்ததோட பல விதங்களில் எங்களை முன்னோடிகளாக்கியது! சி மணியே பதிப்பாளரானார். என்னுடைய நாவல் 'கரைந்த நிழல்க' ளை அவர் எவ்வளவு அக்கறையோடு வெளியிட்டு அதற்கு ஒரு பின்னுரையும் எழுதினார்! இவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவருடைய படைப்புகள் பற்றி அதிகம் பேச்செழுந்ததில்லை.
க.நா.சுவுக்கு சி மணியின் 'எழுத்து' கவிதைகள் பிடிக்கவில்லை. ஆனால் 'வே மாலி' கவிதைகள் பிடித்திருந்தன. இருவரும் ஒருவரே என்று அறிந்தபோது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நானும், சி மணியும் க்ரியாவின் அகராதிப் பணியின் தொடக்கத்தில் ஒரு வாரம் போலத் தினம் சந்திப்போம். ஷிஃப்மன் என்ற அமெரிக்கர் ஃபப்ரீஷியஸ் அகராதியை அடிப்படையாக வைத்து ஒரு தடிமனான கையெழுத்துப் பிரதியைக் கொணர்ந்தார். அதை அப்படியே வெளியிட்டால் அதற்கென்றே ஒரு துணை அகராதி வெளியிடத் தேவைப்படும் என்று கூறினோம். அது தொடக்கம்.
இன்று க்ரியா தற்காலத் தமிழ் அகராதி இரு சிறப்பான பதிப்புகள் கண்டிருக்கிறது. ஒரு கவிதையில் வந்த 'தக்கோலம்' என்ற சொல்லுக்கு இணை பார்க்க வேண்டியிருந்தது. அதுபோல 'தட்டோ டி' 'விசல்' ஆகிய சொற்களுக்கும். சில கவிஞர்கள் அகராதிகளை மீறியவர்களாகிறார்கள். சி மணிக்கு 'ஆசான்' விருது அளித்த நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. இன்னும் என் முகவரி அட்டவணையில் அவருடைய சவுண்டம்மன் கோயில் தெரு முகவரிதான் இருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளில் அவர் அந்த முகவரியிலிருந்து மாறியிருக்கக் கூடும் இப்போது அது தேவையில்லாமல் போய்விட்டது.

Comments

Popular posts from this blog