Skip to main content

கவிதை வாசிக்க வாருங்கள்.......
பல ஞாயிற்றுக்கிழமைகள் யோசனை செய்துகொண்டே இருந்தேன். காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஏறினால், இரவு 7.30 மணி ஆகிவிடும். ஓவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் என்னை கவர்ந்த ஒரு விஷயம் பென்சுகள். மரத்தடி பக்கத்தில் பளபளவென்று கருப்பு நிறத்தில் இருக்கும் சலவைக்கல் பெஞ்சுகள். இதுதான் எல்லோரையும் சந்திக்கும் இடமாகத் தோன்றியது. என் அலுவலக நண்பர் ஒருவரை பல மாதங்கள் பார்க்கவில்லை. அவரை மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்தேன். பெஞ்சில் அமர்ந்துகொண்டு வெகுநேரம் பேசினோம்.திடீரென்று எனக்கு ஐடியா தோன்றியது. ஏன் கவிதை வாசிக்கக் கூடாது? என்று. முதலில் கவிதை எழுதுபவர்களில் பலர் இதுமாதிரி இடத்திற்கு வந்து கவிதை வாசிக்க வர மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக சிலர் வருவார்கள். எல்லோரையும் கூப்பிடலாம் என்றெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தேன். தாம்பரம் முதல் பீச் வரை உள்ள எந்த ஸ்டேஷனிலும் அமர்ந்துகொண்டு கவிதை வாசிக்கலாம் என்றெல்லாம் தோன்றியது. முதலில் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து கவிதை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவிதை வாசிக்கலாம். ஆனால் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒருவர் சந்தேகம் கிளப்பினார். அந்த ஞாயிற்றுக்கிழமை அது குறித்து யோசனை செய்து விட்டுவிட்டேன். வெறுமனே பெஞ்சில் சிலர் அமர்ந்து கவிதை வாசிக்க என்ன அனுமதி தேவை என்பது எனக்குப் புரியவில்லை. மேலும் இது தேர்தல் நடக்கப் போகிற குழப்பமான சூழ்நிலை. மேலும் பேப்பரில் விளம்பரப் படுத்தப் போவதில்லை. போனில் தொடர்புகொண்டு எல்லோரையும் கூப்பிட்டு உட்கார்ந்து கவிதை வாசிக்கப் போகிறோம்.எதற்கும் இதற்கு அனுமதி கேட்கலாம் என்று ஒரு ஸ்டேஷனை அணுகி அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டரை விஜாரித்தேன். 'கொஞ்சம் பேர் கவிதை வாசிக்கப் போகிறோம்...அனுமதி கேட்கவேண்டுமா? கொடுப்பார்களா?' என்று கேட்டேன். 'ஸ்டேஷன் மாஸ்டர் அனுமதி கொடுத்தால் போதும்,' என்றார்.
நேற்று (அதாவது 5.04.2009) ஞாயிற்றுக்கிழமை கவிஞர்கள் கூடி கவிதைகள் வாசிக்கலாம் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் பலரை அழைத்தேன். போன் செய்த நண்பர்களிடமும் நீங்களம் கூப்பிடுங்கள் என்றேன். 7 பேர்கள் வந்தோம். முதலில் திரிசூலம் என்ற ரயில்வே நிலையத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஒரு பக்கம் முழுவதும் மலை. இன்னொரு பக்கம் ஏர் போர்ட். மரங்கள் சூழ்ந்த பெஞ்சுகள் எங்களை வரவேற்றன.முதலில் இது எந்த நோக்கமே இல்லாத கூட்டம். எல்லோரும் கவிதை வாசிப்பதுதான் முக்கிய நோக்கம். அதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. ஆனால் கவிதையைக் குறித்தும் பேசத்துவங்கினோம். முதலில் கவிதை ஏன் புரியவில்லை என்பது குறித்து பேச்சு திரும்பி விட்டது. அது குறித்தே ரொம்ப நேரம் பேசத் துவங்கினோம். கவிதை என்றாலே ஒருசிலரை மட்டும் ஏன் குறிப்பிடுகிறார்கள். பலர் புறக்கணிக்கப்பட வேண்டிய காரணம் என்ன என்பதைப் பற்றி பேசினோம். கூட்டம் ஆரம்பத்தில் சமீபத்தில் மறைந்த கவிஞர் அப்பாஸ் அவர்களுக்கும், எஸ் சுகந்தி சுப்பிரமணியத்திற்கும் அஞ்சலி செலுத்தினோம். சுகந்தியின் பெருன்பான்மையான கவிதைகளை ஆளுக்கு ஒன்றாக வாசித்தோம்.மலையைப்பற்றியும், மின்சார வண்டியைப்பற்றியும் கவிதைகள் வாசித்தோம். உண்மையில் இப்படி கவிதை வாசித்துக் கேட்பது சிறப்பாகவே இருந்தது. எனக்கு இது வாரம் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்பது அவா. ஆனால் சில நண்பர்கள் மாதம் ஒரு முறை போதும் என்று கூறினார்கள். இறுதியில் மாதம் இருமுறை என்று ஒப்புக்கொண்டார்கள்.எனக்குத் தெரிந்து இன்னும் பல நண்பர்கள் கவிதை வாசிக்க வரவில்லை. மேலும் பல இடங்களில் இது மாதிரியான ஒரு முயற்சியை பல நண்பர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்க் கவிதைக்கு அவ்வளவு மரியாதை குறைவு. கவிதைப் புத்தகங்கள் விற்பதே இல்லை. நூலகங்களும் கவிதைத் தொகுதிகளை ஆதரிப்பது இல்லை. கவிதை எழுதத் தெரிந்த முதல்வராக இருந்தாலும், கவிதை எழுதத் தெரியாத முதல்வராக இருந்தாலும் நிலைமை இப்படித்தான்.இக் கூட்டத்தில் படித்த கவிதைகளை Panasonic Mini Cassette Recorder மூலம் பதிவு செய்தேன். ஆனால் 60 நிமிடம் ஆனபிறது காசெட்டின் ஒரு பகுதி முடிந்துவிட்டது. அடுத்தப் பகுதியைப் போட மறந்துவிட்டேன். அதேபோல் காமிரா எடுத்துக்கொண்டு போய் படம் எடுக்க மறந்துவிட்டேன். எடுத்திருந்தால் அதே இங்கே வெளியிட்டிருப்பேன்.இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் எஸ் சண்முகம் என்ற என் இலக்கிய நண்பரின் புத்தக விமர்சன கூட்டம் நடந்தது. பல்கலைக் கழகத்தில். பலர் வந்திருந்தார்கள். தமிழவன் வந்திருந்தார். லண்டனிலிருந்து நாகார்ஜூனன் வந்திருந்தார். திலீப் குமார், அம்ஷன் குமார், இந்திரன், எஸ் ராமகிருஷ்ணன் என்றெல்லாம் வந்திருந்தார்கள். பிரமாதமாக எல்லோரும் பேசினார்கள். சண்முகம் அக் கூட்டத்தைப் பதிவு செய்யவில்லை. போட்டோ எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு இது சற்று வருத்தம். இது மாதிரி ஒரு சந்திப்பு இன்னும் அப்படி நிகழுமா என்று தெரியவில்லை. சண்முகத்திடம் என் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டேன்.நானும் பல கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். பல கூட்டங்களை பதிவும் செய்தும் இருக்கிறேன். பதிவு செய்யாமல் விட்டிருக்கிறேன். திரும்பவும் பதிவு செய்ததைக் கேட்கும்போது சந்தோஷமான அனுபவமாக இருக்கும்.நேற்று நாங்கள் பேசிய பேச்சுகளையும், கவிதைகளையும் திரும்பவும் காசெட்டில் போட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தேன். எங்கள் பேச்சின் நடுவில் மின்சார வண்டிகளின் சப்தம் என்றெல்லாம் இருந்தது. எல்லோருக்கும் ஒரு கவிதையை எப்படி அழுத்தம் திருத்தமாக வாசிக்க வேண்டுமென்கிற பயிற்சியும் இதனால் ஏற்படும் போல் தோன்றியது.நாங்கள் யார் யார் வந்திருந்தோம் என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நான் (அழகியசிங்கர்), க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், ரா ஸ்ரீனிவாஸன், லாவண்யா, படுதலம் சுகுமாரன், மணி, மூர்த்தி என்று எட்டுப்பேர்கள் கலந்துகொண்டோ ம். நான் ஸ்ரீனிவாஸன் கவிதை ஒன்றை எடுத்துப் படித்தேன். படித்தப் பிறகு அக்கவிதையைக் குறித்து என் சிந்தனை சுழன்றவண்ணம் இருந்தது. பொட்டு என்ற அக் கவிதையை உங்களுக்கும் வாசிக்க அளிக்கிறேன்.


ரா ஸ்ரீனிவாஸன்பொட்டுஎண்ணையிட்டுச் சீவிய கூந்தலில்


மணக்கத் தயங்காது மல்லிகை


முகத்தில் மிகையாய் பூச்சு


உதட்டுச் சாயம் எடுப்பாய்த் தெரியும்


செவிகளில் தொங்கும் கம்மல்கள் போலி


கழுத்தில் முத்துக் கோர்த்த கருமணி மாலையோடு


சாளரம் வைத்த ரவிக்கையும் வாவென்று அழைக்கும்


வழவழ வெனக்காணும் சேலைகள்தான் அணிவாள்


வயது என்ன முப்பதுக்குள் இருக்கும்


தோள்பையில் என்னென்ன இருக்கும்


மாநிறத்திற்கோர் மாற்றுக் குறைவாய் அவள் நிறம்


நெற்றியிலெழுதி ஒட்டப்படவில்லை


என்றாலும் அவளைக் கண்டால்


ஐயமறத் தெரிய வரும்


காலையில் அலுவல் நேரம்


துவங்கும்போது அவளும் துவங்குவாள் உலாவ


நெடுஞ்சாலையின் நடைபாதையில்


ஆபரணப் போலிகள் விற்கும்


முஸ்தபாவிற்கு அவள் கைராசி


ஒவ்வொரு காலையும் கல்லாப் பெட்டியைத்


தொட்டுவிட்டுச் செல்லக் கேட்டுக்கொள்வார்


தேநீர் அருந்திய பின்பு


நின்றிருப்பாள் - பேருந்து நிறுத்தம்


அல்லாது போனால் சுரங்கப்பாதை நுழைவாயிலருகே


பாய்ந்து ஒளிவாள் போலீஸ்காரரைக் கண்டால் மட்டும்


குற்ற மன்றங்களில் கட்டிய அபராதத்திற்குக்


கணக்கில்லை அவள் வசம்


சுழலும் விழிகளால் வலைகள் வீசுவாள்


தனக்கு ஐம்பது தங்கும் விடுதிக்கம்பது


அவகாசம் இரு மணி நேரம்


என்பதவள் நிர்ணயம் குறைந்தபட்சம்


பேரம்படியா வாடிக்கையாளரை


வேசி மகனென்று ஏசவும் செய்வாள்


நொடிக்கோர் முறை எச்சில் உமிழும்


கொடியதோர் பழக்கம் அவளுக்கு


இரவில் இருப்பிடம் திரும்பும்போது


பரிசுச்சீட்டுகள் அலுக்காமல் பெறுகிறாள்


ஏதோவொன்று அவளிடம் குறைந்திருக்கக் கண்டு


சீட்டு விற்பவன் வியப்புடன் கேட்டான்


நெற்றிக்குப் பொட்டு இட்டுக்கொள்வதில்லையா?


வெற்றிடமாய் காணப்பட்ட நெற்றியை விரல்களால் தொட்டபடி


அவள் சொன்னாள் பெருமிதம் பொங்க


மரித்துவிட்ட கணவன் நினைவாய்


பொட்டு மட்டும் இட்டுக்கொள்வதில்லை...........கவிதை வாசிப்பு முடிந்து வீட்டிற்கு வரும்போது கிட்டத்தட்ட மணி பத்தாகிவிட்டது. இன்று காலை எழுந்தபோது கவிஞர் நேசனிடமிருந்து ஒரு செய்தி. கவிஞர் சி மணி இறந்து விட்டதாக. என்ன கவிஞர்களுக்கெல்லாம் போதாத காலமா என்று தோன்றியது. சி மணியை நான் பார்த்ததில்லை. அவர் நடத்திய நடை பத்திரிகையை அறிவேன். மரபு மீது சி மணிக்கு அலாதியான ப்ரியம். அவர் கவிதைகள் படிக்கும் போது சிலசமயம் ஞானக்கூத்தன் கவிதைகள் ஞாபகம் வரும். வே மாலி என்ற பெயரிலும் அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து வெகுகாலம் அவர் கவிதைகள் எழுதாமல் இருந்து விட்டார். அவருக்கும் உரிய கவுரவம் கிடைக்கவில்லையோ என்று தோன்றும். அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தார்க்கு விருட்சம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments

சி மணி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்