அழகியசிங்கர்
கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை தமிழில் முதன் முதலாக உருவானபோது, சி.சு செல்லப்பாதான் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூல் கொண்டு வந்தார்.
எழுத்து என்ற சிற்றேட்டில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு நூலாக அது இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த சில தினங்களாகப் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை என் நூல் நிலையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனோ என் கண்ணில் அது தென்படவில்லை.
அதன்பின் எழுபதுகளில் புதுக்கவிதைத் தொகுப்பு நூல்கள்தான் அதிகமாக வெளிவந்ததாகத் தெரிகிறது. ‘இலக்கியச் சங்க வெளியீடாக’ ‘புள்ளி’ என்ற தொகுப்பு நூல் டிசம்பர் 1972ல் வெளிவந்துள்ளது.
என் இலக்கிய நண்பர் ஒருவர் மூலம் ‘புள்ளி’ என்ற தொகுப்பு நூல் கிடைத்தது. அதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வடிவத்தில் ஒரு தொகுப்பு கொண்டு வர முடியுமா? விரல் சைஸில். அது மாதிரி ஒரு தொகுப்பு நூலை நானும் கொண் வரவேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. திரும்பவும் புள்ளியை 2015ல் நானும் முயற்சி செய்து கொண்டு வந்தேன்.
கவிதைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ புள்ளி’ தொகுப்பில் தொகுப்பைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ‘கசடதபற’ என்ற சிற்றேட்டிலிருந்து வெளிவந்த கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.
புள்ளியிலிருந்து ஒரு கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆர்.வி. சுப்பிரமணியன் எழுதிய ‘பாதைப் பசுக்கள்’ என்ற கவிதை.
“ பால் வற்றிய பசுக்களும்
மலட்டுப் பசுக்களும்
கவனிப்பாரற்ற கறவைகளும்
தசைகள் அசைத்து
மெல்லச் சாலைகளின் ஊடே
நடப்பதனால்
வண்டிக் காளையின்
கவனம் கெட்டுக்
குழப்பமும் விபத்தும்
நிகழ்வது தவிர்க்க
உரிமையாளர்க்கொரு
பணிவான வேண்டுகோள்!
அவரவர் பசுக்களை
“ ஒழுங்கில் வைக்கவும்
அநாதைப் பசுக்களை
அரசுக் காக்கும்!
அடுத்தது எம்.சுப்பிரமணியன் தொகுத்த ‘நாற்றங்கால்’ என்ற தொகுப்பு. மே 1974ல் வந்தது. 32 கவிஞர்களின் 42 கவிதைகள்.
இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருப்பவர் ந. முத்துசாமி. அவர் ஒரு இடத்தில்,
‘கவிதை செயற்கையாகப் பூட்டிய ஆபரணங்களை உதறிவிட்டு இருக்கிற வரையில் மரபுக்குள் அது மாட்டிக்கொள்ளாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். முதலில் அது சந்தத்தை அறவே உதறியாக வேண்டும். வெகு காலமாகச் சந்தத்தைத்தான் கவிதை என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அப்புறம் சொல்கின்ற தோரணையாலும் அது மரபுக்குள் மாட்டிக் கொள்ளலாம். இந்தத் தோரணையும் உதறிவிடக் கூடிய ஒன்றுதான். பிறகு என்ன மிஞ்சியிருக்கும்? இங்குதான் கவிதை மிஞ்சுகிறது என்று தோன்றுகிறது. முத்துசாமியின் இந்த கருத்து யோசிக்க வைக்கிறது.
இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளும் சிறுபத்திரிக்கைகளில் எழுதப்பட்ட கவிதைகள்தான்.
இன்னும் சில என் கையில் கிடைத்த தொகுப்பு நூல்களிலிருந்து உதாரணம் காட்ட விரும்புகிறேன்.
‘தெற்கிலிருந்து சில கவிதைகள்’ என்ற தொகுப்பு. தொகுப்பாசிரியர் சமயவேல். வயல் வெளியீடாக வந்துள்ளது. ஆண்டு 1992. 12 கவிஞர்கள் 67 கவிதைகள்.
இதன் தொகுப்பாசிரியர் தொகையுரையில் இப்படி எழுதியிருக்கிறார்.
'தமிழில் எல்லாக் கவிஞர்களையும் ஒன்று திரட்டும் ஆசை இருந்தும், வேலைப்பளுவையும் பிரசுரச் செலவையும் கருத்தில் கொண்டு தெற்கிலிருந்து எனப் பிரித்துக்கொண்டோம். வேறு பிரத்யேகக் காரணம் ஏதுமில்லை' என்கிறார்.
தேவதச்சனின் ஒரு கவிதையை இங்குத் தர விரும்புகிறேன்
காற்றில் வாழ்வைப்போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது.
அடுத்தது இருபதாம் நூற்றாண்டின் பெண் கவிஞர்களின் தொகுப்பு என்ற நூலைக் குறிக்க விரும்புகிறேன். தொகுப்பின் பெயர் ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ இதைத் தொகுத்தவர் க்ருஷாங்கனி. இதில் மாலதி மைத்ரி என்ற கவிஞர் ‘ஒளவையிலிருந்து ஒளவை வரை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
'ஒளவை என்பது தமிழ்ப் பெண் அறிவு மற்றும் விடுதலையின் ஒரு குறியீடு. அக்குறியீடு கவிதைத் தளத்தில் இயங்கும்போது, ஒரு உருவகமாகிவிடுகிறது. இந்த உருவகத்திலிருந்து தமிழ்ப்பெண்கள் அடுத்த தளத்தை அடைவது மிகவும் போராட்டமானது.'
இத் தொகுப்பிற்கு வ.கீதா நீண்ட முன்னுரை எழுதியிருக்கிறார்.
இக்கட்டுரையின் ஓரிடத்தில், இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்களில் பலர் நகரவாழ் நடுத்தர வர்க்கத்தால் பெண்கள்தான். ஒரு காலத்தில் கிராமங்களில் வாழ்ந்திருக்கலாம், அந்த வாழ்க்கை பற்றிய நினைவிழைகள் சில கவிதைகளில் வெளிப்படலாம். இருந்தாலும் தனது ஆளுமையை உறுதி செல்லக்கூடிய வசதியும், ஆற்றலும், சூழ்நிலையும் வாய்க்கப் பெற்ற நடுத்தரவர்க்கப் பெண்ணின் குரல்தான் இங்கு ஓங்கி ஒலிக்கிறது, என்கிறார்.
மொத்தம் 52 பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதி இது.
‘அமரந்தா’ எழுதிய ‘பேதம்’ என்ற கவிதையைப் பார்ப்போம்.
பாலத்தடிப் பூமரம் பட்டுப்போனதுடன்
நானும் இனி தளிர்ப்பதற்கில்லை என்று
சோர்ந்திருந்தேன்
முதல் முறை வெட்டுப்பட்டபோது பாலத்தடிப்
பூமரம்தான்
நம்பிக்கையூட்டியது கொள்ளை கொள்ளையாய்ப் பூத்து
இரண்டாம் முறையும்கூட என்னை இழுத்துப்பிடித்து
மூண்றாம்முறை வெட்டுப்பட்டபோது அடிமரம்
கலகலத்து
ஆயுற் தீர்ந்ததென உறுதிசெய்தது
பட்டுப்போன பாலத்தடி பூமரந்தான்.
பருவம் மாறி வசந்தம் வந்ததும் – என்ன ஆச்சரியம்
என்னிலும் தளிர்கள்
கண்களை நம்பாமல் பாலத்தடியைப் பார்த்தபோது
பட்டுப்போன பூமரத்தருகில் சின்னதாகப் புதுமரம்
ஜீவன் திரும்பிய தெம்பில் விசாலமாகக் கிளைவிட்டு
செழித்த செழிப்பில் நிலவோனை மோகிக்கும்
துணிவும் வந்தது.
மோகத்தின் வேகத்தில் கிளைகளின் நுனிகளில்
பொட்டுப் பொட்டாக அரும்புகள் கட்டின
நிலவோனின் தண்ணொளி அரும்புகளைப் பேணி
கொல்லென மலரும் மாயம் செய்யுமென
அவன் முகம் பார்த்து நெகிழ்ந்த வேளையில்
தணல் கரங்களைக் கொண்டு தீய்த்தான்
அரும்புகளை
நிலவில் ஏது தணல் எனக் கருகிய கண்ணால்
கேட்டபோது
உனக்குத் தகுதி தணல்தான் என்று சீறியதில்
சிந்திச் சிதறியதும் நெருப்புப் பொறிதான்.
இத் தொகுப்பில் கவிஞரைப் பற்றிய குறிப்புகளும் கவிதை முடியும் இடத்தில் வருகிறது.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 30 அக்டோபர் 2022 ல் வெளிவந்தது)
Comments