Skip to main content

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 1

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 1அழகியசிங்கர்

இந்த முறை நானும் மனைவியும் மயிலாடுதுறைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் பிடித்துப் போனோம்.  ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் பகல் நேரத்தில் வண்டியில் போவதில் சில சௌகரியங்கள் உண்டு.  வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு போகலாம்.  பல காட்சிகள் மனதில் நிழலாடும்.  நமக்குத் தெரியாத வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கலாம்.  பலர் பேச மாட்டார்கள். சிலர் புன்னகை புரிவார்கள். 
நான் ஒவ்வொரு முறையும் பகல் நேரத்தில் போகும்போது புத்தகங்கள், பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு போய் படிப்பேன். இந்த முறையும் அப்படித்தான்.  
முன்பெல்லாம் அதிகமாகக் கையில் எடுத்துக்கொண்டு போய் படிக்காமல் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன்.  அப்படியெல்லாம் ஆகக் கூடாது என்று எப்படியும் படிக்கத் தீர்மானித்தேன்.
விருட்சம் 105வது இதழுக்கு அனுப்பிய கதைகளையும் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டு போனேன் படிக்க.  
முதலில் அந்திமழை மார்ச்சு மாதம் இதழை எடுத்துக்கொண்டு போனேன் (உண்மையில் நான் கிளம்பிய அவசரத்தில் இன்னும் சில பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம்).
இப் பத்திரிகையில் üவாசனைý என்கிற ஆத்மார்த்தி கதையைப் படித்தேன்.  ஒரு ஆணை காதல் என்கிற போர்வையில் ஒரு பெண் எப்படி கிறுக்குத்தனமா மயக்கிறாள் என்பதுதான் கதை.  அதை ரொம்ப திறமையாக எழுதிக்கொண்டு போகிறார் ஆத்மார்த்தி.  இந்தக் காதலால் அவனுக்கு ஏற்படுகிற விபத்து.  ஒரு இடத்தில் ஆத்மார்த்தி இப்படி எழுதியிருப்பார் :
'எனக்கு பானு மேலே கோபம் வர்லை.  கோவமே வர்லை.  பானுன்னு நினைச்சாலே எனக்குள்ள எழுந்த மஞ்சக்கெழங்கு வாசனையும் அவ உடம்புலேருந்து பவுடரும் வியர்வெயும் கலந்து எழுந்த வாசனையும் என்னால் மறக்கவே முடியலை.' என்று எழுதியிருப்பார்.  திறமையாக எழுதப்பட்ட கதை.  எல்லோரும் படிக்க வேண்டிய கதை. ஆத்மார்த்தியிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது.  காதலினால் அவதிப்படுவது ஆண்களா பெண்களா என்று.  அந்திமழை பத்திரிகையில் காமிரா கண்கள் என்ற தலைப்பில் ஆம்ரே கார்த்திக்கின் புகைப்படம். நிச்சயம் பார்ப்பவர்களுக்குப் பரவசத்தை ஏற்படுத்தும். 
மாரி செல்வராஜ் என்ற இயக்குநரின் பேட்டி என்று இன்னும் பல தகவல்கள் கொண்ட பத்திரிகை.  முக்கியமாக திமுகவின் அரசியல் வியூகம் பற்றி பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.  இந்தப் பத்திரிகையின் தாளின் தரம் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.  எப்படி ரூ.20 க்கு இப் பத்திரிகையைக் கொண்டு வர முடிகிறது என்ற கேள்வியையும் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.
இரண்டாவதாக நான் படித்தப் புத்தகம் 'யானை பார்த்த சிறுவன்\ என்கிற சுந்தரபுத்தன் எழுதிய புத்தகம்.  முக நூலில் எழுதிய தகவல்களை எல்லாம் திரட்டிப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்.  புத்தகத்தைப் பிரமாதமான முறையில் அச்சடித்துள்ளார்.  சின்ன சின்ன தலைப்புகளில் பல தகவல்களைக் குறிப்பிடுகிறார்.  எதாவது ஒரு பக்கத்தைத் திருப்பி எதாவது ஒரு பகுதியைப் படித்துவிட்டு இந்தப் புத்தகத்தை மூடி விடலாம்.  பின் இன்னொரு முறை படிக்கலாம்.  65ஆம் பக்கத்தில் அப்பர் கரையேறிய குளம் என்ற தலைப்பில் கடலூரில் உள்ள வண்டிப்பாளையம் என்ற ஊரைப் பற்றி எழுதியிருக்கிறார்.  பெரும்பாலும் பயணங்களைப் பற்றி இப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  நான் முழுவதுமாக இப் புத்தகத்தைப் படிக்கவில்லை. கொஞ்சம் பக்கங்கள் மட்டும்தான் படித்தேன்.  ஆனால் பத்திரமாக வைத்திருந்து படிக்க வேண்டிய புத்தகம்.  சங்கமி பதிப்பகம் வெளியிட்ட இப் புத்தகம் விலை ரூ.115தான்.
சமீபத்தில் யாவரும் பப்ளிஷர்ஸ் சில புதியவர்களின் புத்தகங்களைக் கொண்டு வந்திருப்பதாக நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டேன்.  பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் போர்ஹேயின கதைகளை முன்னதாகவே வாங்கியிருந்தேன். அப் புத்தகத்தில் ஒரு கதையை மட்டும் படித்திருந்தேன். அதேபோல் யாவரும் பப்ளிஷர்ஸ் புத்தகங்களில் சிலவற்றை டிஸ்கவரி புத்தகச் சாலையில் போய் வாங்கிக்கொண்டு வந்தேன்.  அதில் சுனில் கிருஷ்ணன் என்பவரின் அம்புப் படுக்கை என்ற புத்தகம்.  இதில் முதல் கதையை மட்டும்தான் படித்தேன்.  வாசுதேவன் என்ற பெயரில் எழுதப்பட்ட கதை.  இந்த ஒரு கதையே போதும் சுனில் கிருஷ்ணன் எப்படி திறமையாக கதை எழுதத் தெரிந்தவர் என்பதை அறிந்துகொள்ள.  இந்த வாசுதேவன் என்ற கதையை ஒருவர் இரண்டு முறையாவது வாசிக்க வேண்டும்.  ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார் சுனில் : 'சுவரில் ரமணரும், அரவிந்தரும், இன்னும் இன்ன பிற நவீன குருமார்களும் புகைப்படங்களாக வாசுதேவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.' கதையின் முழு நாடியை இந்த வரிகள் மூலம் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் சுனில். ரூ.150 விலையுள்ள இப் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும்.
                                                                                      (இன்னும் வரும்)

Comments