Skip to main content

டெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...

டெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...


அழகியசிங்கர்




எப்போதும் போல இல்லை இந்தச் சனிக்கிழமை.  தேனாம்பேட்டையிலிருந்து மதியம் ஒரு மணிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.  ஒரே கூட்டம்.  வண்டியை ஓட்டிக்கொண்டே வர முடியவில்லை.  ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.  பின் தூங்க ஆரம்பித்து 4 மணி சுமாருக்கு எழுந்து, காப்பியைக் குடித்து விட்டு, தி நகரில் உள்ள ந்யூ புக் லேண்ட்ஸ் சென்றேன்.  அங்கே என் புத்தகங்களைக் கொடுக்க எடுத்துச் சென்றேன்.  
அங்கிருந்து திரும்பி வரும்போது ஒரே கூட்டம்.  எப்போதும் நான் விருட்சம் இலக்கியக் கூட்டம் நடத்தும்போது மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்குப் போவதற்குள் கூட்டம் மிகுதியாக இருக்கும்.  முன்னதாகவே சத்திரம் வாசலில் நின்றிருக்கும் கோவிந்தராஜனுக்கு என் மீது கோபம் கோபமாக வரும்.  உரிய நேரத்தில் நான் வரவில்லை என்று.  ஆனால் உண்மையில் இன்று முன்பு நான் போவதை விட கூட்டம் தாங்க முடியவில்லை.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  வீட்டில் மனைவி கதை கேட்க அயோத்தியா மண்டபம் சென்று விட்டதால் நான் திரும்பவும் ஒரு இரவு 8 மணி சுமாருக்கு அயோத்தியா மண்டபம் சென்றேன்.  ஒரே கூட்டம்.  ஒரே இரைச்சல்.  கதை சொல்ல வருபவர் என்ன சொல்ல வருகிறார் என்பது கேட்கவில்லை.  சில மாதங்களுக்கு முன் நான் நடேசன் பூங்காவில் கதை கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தினேன். சுற்றிலும் ஒரே சத்தமாக இருக்கும்.  கதையை வாசித்தால் வாசிப்பவருக்கே கேட்குமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படும்.  என் பக்கத்தில் கதைக் கேட்க வந்த நண்பர் வேறு வழியில்லாமல் கொட்டாவி விட்டதால் கூட்டம் நடத்துவதை விட்டுவிட்டேன்.
அப்படித்தான் அயோத்தியா மண்டபத்தில் என்னால் இருக்க முடியவில்லை.  பிறகு நடந்து சென்று முருகன் இட்லிக் கடையில் இட்லி சாப்பிடலாôமென்று நினைத்தேன்.  ஒரே கூட்டம்.  வாசலில் பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.  வந்துவிட்டேன்.  பின் நேராக என் வண்டியை எடுத்துக்கொண்டு மங்களாம்பிகா ஓட்டலுக்குச் செல்லலாமென்று நினைத்து அங்கு சென்றேன்.  உட்கார இடம் கிடைக்கவில்லை.  எனக்கு ஒன்று தோன்றியது.  எல்லோருக்கும் என்ன ஆயிற்று என்றுதான்.
ஏன் எல்லோருக்கும் என்னைப் போல் ஓட்டலில் சாப்பிட வேண்டுமென்கிற டெம்டேஷன் இருக்கிறது என்று யோசித்தேன்.  இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசித்தேன்.  பொதுவாக என்னுடைய கெட்டப் பழக்கம் நண்பர்களென்று யாரையாவது சந்தித்தால் ஓட்டலில் போய் காப்பி அல்லது டீ குடிப்பது வழக்கம். அல்லது யாரையும் சந்திக்கா விட்டாலும் நானே எதாவது ஒரு ஓட்டலில் நுழைந்து ஒரு குட்டி டிபன் சாப்பிடுவேன்.
ஒருநாள் அப்படித்தான் சங்கீதா ஓட்டலுக்குச் சென்றேன்.  ஒரே கூட்டம்.  ஒரு இடம் காலியாக இருந்தது.  சர்வர் யாரும் வரவில்லை. என்ன வேண்டுமென்று கேட்கவில்லை.  கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தேன்.  பின் எழுந்து வந்துவிட்டு வேற ஓட்டலுக்குப் போய்விட்டேன். ஆனால் ஓட்டலுக்குப் போகக்கூடாது என்ற முடிவு மட்டும் எடுக்கவில்லை.
இதையெல்லாம் சாப்பிடாதே...நிறுத்துடா என்று மனதிற்குள் கத்தினாலும், ஹோட்டலுக்குப் போகும் லாகிரி என்னை விடுவதில்லை. அதாவது பிளாட்பாரத்தில் காணும் பழையப் புத்தகங்களை வாங்கிச் சேர்ப்பதுபோல..
இன்றுதான் ஏனோ ஓட்டலுக்குப் போவதில் விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு வந்து, மனைவி வைத்திருந்த ஜீரக ரசத்தை சாதத்தில் கலந்து உண்டேன்.  உடன் தேங்காய் சட்னி.  மேலும் சாதம் தட்டில் இட்டு தயிர் கலந்து சாப்பிட்டேன்.  திருப்தியாக இருந்தது. இனிமேல் ஹோட்டலுக்குப் போகும் பழக்கத்தை விட வேண்டும். விட வேண்டும்.  விட வேண்டும். 


Comments