Skip to main content

விபத்தும் மீட்பும்

சிறுகதை
பிரபு மயிலாடுதுறை

சிதம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.சான்று வழங்கும் எழுத்தர் இன்னும் இருக்கைக்கு வரவில்லை.நேரம் காலை பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.அடுத்தடுத்த வேலைகள் மனதில் எழுந்தவாறு இருந்தது.சிதம்பரத்தில் வசிக்கும் ஒரு நண்பன் அவனுடைய பூர்வீக சொத்தை விற்பனை செய்ய இச்சான்றிதழைப் பெறுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டான்.புதுதில்லியில் அவனும் அவன் மனைவி குழந்தைகளும் வசிக்கின்றனர்.ஆருத்ரா தரிசனத்துக்கு மட்டும் ஆண்டுக்கொரு முறை குடும்பத்துடன் வருவான்.அவனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளான்.பத்திரப் பதிவு அலுவலகத்தில் வழங்கப்படும் சான்றிதழை அவன் சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் தரச் சொல்லியிருக்கிறான்.எழுத்தர் மிகவும் அசிரத்தையுடன் ஒவ்வொரு பெயராக அழைத்தார்.ராமகிருஷ்ணன் ராஜ்குமார் என என்னுடைய பெயர் அழைக்கப்பட்டதும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.சொத்தைப் பொருத்து யாதொரு வில்லங்கமும் இல்லை என்ற சான்றிதழ் தரப்பட்டது.தெற்கு வீதியில் இருந்த நண்பனின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.வெகுநேரம் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருந்தேன்.உள்ளே தொலைக்காட்சி இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் எனக்குக் கேட்டது.ஆனால் யாரும் வந்த பாடில்லை.தொடர்ந்து அழுத்தினேன்.ஒரு வயதான மூதாட்டி சிரமப்பட்டு நடந்து வந்தார்.
”ஆத்துல யாரும் இல்ல.எல்லாரும் ஆஃபிஸ் போயிருக்கா.சாயந்திரம் தான் வருவா”.
”இந்த சர்டிஃபிகேட்டை சார்ட்ட தந்திடுங்க”.
”சரி.கொஞ்சம் தூத்தம் சாப்பிடுறீங்களா?”
சிரமப்பட்டு நடந்து போய் ஒரு பெரிய சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.ரொம்ப தாகமாக இருந்தது.துளி கூட மிச்சமில்லாமல் நீர் அருந்தினேன்
”போய்ட்டு வரேன்மா”
”வாங்கோ”
தேரடிக்கு வந்தேன்.அங்கே எப்போதும் தேனீர் அருந்தும் கடைக்கு வந்து வடையும் தேனீரும் சொன்னேன்.நண்பனுக்கும் அவனது உறவினருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன்.சில வினாடிகளில் நன்றி என பதில் வந்தது.அம்மூதாட்டியைப் பற்றிய எண்ணம் எழுந்தது.வாழ்வில் எத்தனை சுக துக்கங்களைப் பார்த்திருப்பார்.வாழ்க்கையைப் பற்றி என்ன அபிப்ராயம் அவருக்கு இருக்கக்கூடும்!இள வயதில் திருமணமாகி வந்ததிலிருந்து அந்த வீடே கதி என வாழ்ந்திருப்பார்.மகன்கள் மகள்கள் பேரன் பேத்திகள் என காலம் தலைமுறைகளாக கடந்து சென்றிருக்கிறது.வாழ்க்கை அவருக்கு வெயிலில் வீடு தேடி வந்தவனுக்கு தாகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற புரிதலை உருவாக்கியிருக்கிறது.முக்கியமான உணர்வு தான் அது!தேனீருக்கு பைசாவைக் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.வாணியத் தெருவில் உள்ள பாலசுப்ரமணியன் வீட்டுக்கு வந்தேன்.வாசலில் அவனது மகள் சுபாஷிணி நின்றிருந்தாள்.
சிறு குழந்தையாக கைகளில் தவழ்ந்தவள் இன்று இளம்பெண்ணாக கண்ணுக்குத் தெரிகிறாள்.கைகளில் வெவ்வேறு வண்ணங்களில் பிளாஸ்டிக் வளையல்கள்.சாய்சதுர வடிவ சிறு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள்.இருக்கிறதா இல்லையா என் கண்டறிய முடியாதவாறு சிறு பிளாஸ்டிக் பொட்டு.அதே நிறத்தில் தோடும் தொங்கட்டானும்.
”அங்கிள்!வாங்க அங்கிள்.உள்ள வாங்க”.
”அப்பா  இருக்காராம்மா”.
”கோயம்புத்தூருக்கு ஒரு செமினாருக்குப் போயிருக்கார்.வர ரெண்டு நாளாகும்.நீங்க உள்ள வாங்க அங்கிள்”
நான் கிளம்ப யத்தனித்தேன்.
”அங்கிள்!வாங்க.லெமன் ஜுஸ் தரேன்.சாப்டிட்டு போங்க”.
”அடுத்த வாரம் வரேன்மா.அப்பாட்ட வந்துட்டு போனேன்னு சொல்லிடு”.
”அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க.அவங்களுக்காகத்தான் பார்த்திட்டு நிக்கறேன்.நீங்க உள்ள வராம போய்ட்டீங்கன்னு சொன்னா என்னைத்தான் திட்டுவாங்க”.
அவள் முகம் வருத்தத்தால் சுருங்கியது.
சமாளித்துக் கொள் எனக் கூறி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினேன்.
லௌகிகப் பணிகள் செய்து முடித்த பின்னர் சாதாரணமானவையாகவும் சிறியவையாகவும் தெரிகின்றன.ஆனால் அவை எடுத்துக் கொள்ளும் நேரமும் ஆற்றலும் ஒப்பீட்டளவில் கணிசமாகவே இருக்கிறது.அரசாங்க உத்யோகத்துக்குப் போக வேண்டாம் என முடிவெடுத்திருந்தாலும் எனக்காக பிறருக்காக ஏதேதோ காரணங்களுக்காக அங்கே காத்துக் கிடக்க வேண்டிய நிலை.பாலுவைப் பார்த்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.
சீர்காழிக்கு இன்னும் இருபது கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.மேகமற்ற வானத்தால் கோடை வெயில் தகித்தது.நகர எல்லையை நீங்கிச் சென்று கொண்டிருந்தேன்.எத்தனை முறை இப்பாதையில் பயணித்திருப்பேன்!ஆயிரம் முறை.ஒவ்வொரு ஊரும் கடைத்தெருவும் வளைவும் முக்கும் கரத்தில் விரல்களென அறிந்ததாக இருக்கிறது.வாகனத்தின் அதிர்வு உடலுக்கு தொந்தரவு தராத நிலையில் சீரான வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.பல வருட பழக்கத்தின் விளைவு அது.எஞ்சின் ஒலி மனதிற்கு ஆதார சுருதியாய் அமைய பல்வேறு எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
வேலங்குடி பாலம் அருகே சென்ற போது கூட்டமாக சிலர் நின்றிருந்தனர்.பதினைந்து பேர் இருக்கக்கூடும்.இரு சக்கர வாகனங்கள் சாலையின் இரு பக்கங்களிலும் நிறுத்தப்பட்டு அக்குறுகிய பாலத்தில் போக்குவரத்து குளறுபடியாகி பேருந்துகள் செல்ல வழியில்லாமல் நின்று ஹாரன் அடித்துக் கொண்டிருந்தன.சில நிமிடங்களுக்கு முன்னால் அங்கே ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது என யூகித்தேன்.கருப்பு நிறத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் மஞ்சள் நிறத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் சாலையோரத்தில் மோதிக் கீழே கிடந்தன.எனது வாகனத்தை தூரமாக தள்ளி வைத்து விட்டு பக்கவாட்டில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டேன்.விபத்துக்குள்ளான வாகனங்களை நிமிர்த்தி தள்ளினேன்.இலகுவாக இல்லாமல் சற்று சிரமப்பட்டு தள்ள வேண்டிய நிலையே இருந்தது.ஒன்றுடன் ஒன்று மோதியதன் விளைவாக இருக்கலாம்.எனது வாகனத்துக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தினேன்.சாலையில் இருந்த தடை நீங்கியதால் பேருந்துகள் தங்களது வழியைக் கண்டுகொண்டு நகரத் தொடங்கின.அவை நகர்ந்ததும் கூட்டத்தில் பாதி கலைந்தது.அப்போது தான் நீல நிற ஜீன்ஸும் வெண்ணிற டி-சர்ட்டும் அணிந்த அந்த இளைஞனைப் பார்த்தேன்.கருப்பு நிற தோள்-பையினை தனக்கு அருகில் வைத்திருந்தான்.தனது துண்டால் நெற்றியில் அழுத்திப் பிடித்திருந்தான்.அவன் துண்டில் ஊறி கைகளின் வழியே ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.சீராக தரையில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.அவன் திகைத்துப் போய் முகம் வெளிறி பதற்றம் கொண்டவனாக இருந்தான்.
108-க்கு ஃபோன் பண்ணியாச்சா என கூட்டத்திடம் வினவினேன்.மூன்று பேர் நாங்கள் பேசினோம் வண்டி வரும் என்றார்கள்.அடிபட்ட இன்னொரு ஆளைப் பார்த்தேன்.அவனும் இளைஞன் தான்.இலேசாக அடிபட்டிருந்தது.அவன் உள்ளூரைச் சேர்ந்தவன்.அவன் வாகனத்தை அவன் நண்பர்கள் சிலர் தள்ளிக் கொண்டு சென்றனர்.அவர்களுடன் சென்று அவனும் இணைந்து கொண்டான்.திடீரென எனக்கு ஓர் ஐயம் மனதில் தட்டியது.108-க்கு என் அலைபேசியிலிருந்து அழைத்தேன்.
”வல்லம்படுகையிலிருந்து ராஜ்குமார் பேசறன்.வேலங்குடி பாலத்துக்கிட்ட ஒரு ஆக்ஸிடெண்ட்.ஆம்புலன்ஸ் உடனே அனுப்பனும்”.
”எந்த மாவட்டம் சார்?”
”கடலூர் மாவட்டம்.சிதம்பரம் தாலுக்கா”.
”வண்டி எங்கேயிருந்து சார் அனுப்பலாம்?சிதம்பரத்திலிருந்து வர சொல்லலாமா?”
”வேண்டாம்.இந்த இடத்துக்கு சிதம்பரத்தை விட கொள்ளிடம் தான் பக்கம்.ஆனா அது நாகப்பட்டிணம் மாவட்டம்.எந்த வண்டியாயிருந்தாலும் சீக்கிரம் வரணும்.பிளீடிங் அதிகமாயிருக்கு.லேட்டாகும்னா சொல்லிடுங்க நான் வேற ஏற்பாடு பண்ணிக்கிறேன்”.
”வெயிட் பண்ணுங்க சார்!கொள்ளிடம் ஆப்பரேட்டர்ட்ட கனெக்ட் பண்றேன்”.மின்ணனு இசை ஒலித்தது.ஒரு சுற்று முடித்து அடுத்த சுற்று இசைக்கத் துவங்கியது.டிரைவர் ஹலோ என்றார்.
”வல்லம்படுகை பழைய கொள்ளிடம் பாலம் அருகே ஆக்சிடண்ட்.பிளீடிங் அதிகமாயிருக்கு.எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரணும்”.
”ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்போம் சார்.”
இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.பலர் கூடி நிற்கும் போது ஒருவருமே ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்ய மாட்டார்கள்.கேட்டால் பேசினோம் என்று சொல்லிவிடுவார்கள்.வராத வண்டிக்காக முதலுதவி செய்ய வேண்டிய நேரம் வீணாகிக் கொண்டிருக்கும்.108-எண் சேவையில் சம்பவ இடத்திலிருந்து முதல் அழைப்பு வந்ததுமே செயல்படத் துவங்கி விடுவார்கள்.ஒன்றுக்கு மேற்பட்ட அழைப்பு வந்தால் தகவல் முன்கூட்டியே வந்து விட்டது என்பார்கள்.நான் பேசிய போது எந்த மாவட்டம் எந்த தாலுக்கா விபத்து நடந்த இடம் அனைத்தையும் புதிதாகக் கேட்டுக் கொள்கிறார்கள் என்றால் என் அழைப்பே முதல் அழைப்பாக இருந்திருக்கிறது.நான் பேசிய பின்பு கூட்டம் கலைய ஆரம்பித்தது.
நாலைந்து பேர் மட்டும் அங்கே நின்றிருந்தனர்.புதிதாக வந்த வாகனங்கள் விபத்து நடந்த சுவடே இல்லாமலிருந்ததால் சகஜமாக சென்று வந்து கொண்டிருந்தன.அடிபட்ட இளைஞனிடம் தம்பி தண்ணீர் குடிக்கிறாயா எனக் கேட்டேன்.வேண்டாம் என்றான்.பைக்கை எடுத்துக் கொண்டு சென்று வல்லம்படுகை கடைத்தெருவில் இருந்த ஃபார்மஸியில் குளுக்கோஸ் இருக்கிறதா எனக் கேட்டேன்.இல்லை என்றனர்.மீண்டும் பழைய இடத்துக்கு வந்தேன்.
தூரத்தில் சைரன் ஒலி கேட்டது.அவ்விளைஞன் சற்று சிரமப்பட்டு எழுந்தான்.ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவனை வாகனத்தின் உள்ளே படுக்க வைத்து முதலுதவி அளித்தனர்.சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.உசுப்பூரில் வலது பக்கம் திரும்பி ரெயில்வே லெவல் கிராஸிங் தாண்டி சிவகிரி சாலை வழியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குள் செல்லுங்கள்.டவுனுக்குள் போக வேண்டாம் என சொன்னேன்.டிரைவர் தயங்குவது அவர் முகத்தில் தெரிந்தது.சோழன் எக்ஸ்பிரஸ் போயிருக்கும்.வேறு வண்டி எதுவும் இப்போது கிடையாது என்றேன்.அவரது தயக்கம் நீங்கியது.நீங்கள் போங்கள்.அந்த பையனுடைய வண்டியை ஏதாவது ஒரு வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வருகிறேன் எனக் கூறினேன்.
சில நிமிடங்களுக்குப் பின் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறப்பட்டேன்.விபத்து நிகழ்ந்த இடத்தை கடந்து சென்ற போது அவ்விடம் விபத்தின் சுவடுகளை அறிய முடியா வண்ணம் இருந்தது.குறுகலான பாலம்.அபாயகரமான இடம்.இங்கே எத்தனை விபத்துகள் நிகழ்ந்திருக்கும்.வண்டிக்காளைகள் மூலம் போக்குவரத்து நிகழ்ந்த போது கூட சில விபத்துகள் நிகழ்ந்திருக்கக் கூடும்.ஏதேதோ நூற்றாண்டுகளில் கூட அவ்வாறு நடந்திருக்கும்.அச்சாலை நெடுகிலும் நடந்திருக்கும்.அவ்விடத்துக்கு  விபத்து நிகழ்ந்த கணத்தைப் போன்றே முக்கியத்துவம் கொண்டவையோ அல்லது முக்கியத்துவம் அற்றவையோ மற்ற  பொழுதுகள்.இந்த வினாடியில் இப்பிரபஞ்சத்தில் எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.மனம் இலக்கின்றி சிதறிப் பரவியது.குழம்பியது.சோர்ந்தது.ஒரு முகப்படுத்த ஆக்ஸிலேட்டரைத் திருகினேன்.சிவகிரி சாலையை அடைந்து இராஜேந்திரன் சிலை, அட்மினி வழியாகச் சென்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அடைந்தேன்.  வெண்ணிற கோட் அணிந்த பெண் மருத்துவர்கள் ஸ்கூட்டியில் இங்குமங்கும் மருத்துவமனை வளாகத்தில் சென்று வந்து கொண்டிருந்தனர்.திகைப்படைந்த முகங்கள் என்பது அங்கிருந்த மக்களின் பொதுத்தன்மையாயிருந்தது.வாகன நிறுத்தத்தில் வண்டியை விட்டு விட்டு அங்கே நின்று கொண்டிருந்தவர்களிடம் கொஞ்ச நேரம் முன்பு ஆம்புலன்ஸ் வந்ததா எனக் கேட்டேன்.ஒவ்வொருவரும் ஓர் பிரத்யேக உலகில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.அவர்கள் கவனத்துக்கு வந்திருக்காது.வந்திருந்தாலும் மனம் பதிவு செய்திருக்காது.தெரியாது என்பதை இல்லை என்று சொன்றார்கள்.உத்தேசமாக ஒரு திசையைப் பார்த்து நடக்கத் தொடங்கினேன்.ரொம்ப தூரம் நடப்பதாகத் தோன்றியது.ஆம்புலன்ஸ் டிரைவர் என்னைப் பார்த்து கையசைத்தார்.அவரைப் பின்தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் சென்றேன்.
அப்பிரிவின் நுழைவாயிலுக்கு அருகில் போடப்பட்டிருந்த மேஜை நாற்காலியில் செவிலியர்கள் அமர்ந்திருந்தனர்.அவர்கள் மேஜைக்கு எதிரே ஒரு பெரும் பரப்பு பரந்து கிடந்தது.அதன் இடது பக்கத்தில் தனித்தனி இருக்கைகளில் மருத்துவர்கள் பத்து பேர் அமர்ந்திருந்தனர்.சிலர் எழுதிக் கொண்டிருந்தனர்.சிலர் நோயாளிகளின் பராமரிப்பாளர்களோடு  பேசிக் கொண்டு.சிலர் வெறுமனே அமர்ந்தவாறு.மையத்தில் தலைமை மருத்துவர் அமர்ந்திருந்தார்.மருத்துவர்களுக்கு எதிரே பாதைக்கு வலது பக்கத்தில் நோயாளிகளின் படுக்கைகள் அமைந்திருந்தன.பிளாஸ்டிக் கலன்களிலிருந்து சொட்டு சொட்டாக மருந்து இறங்கிக் கொண்டிருந்தது.சிலர் ஆழமான உறக்கத்திலிருந்தனர்.தலையணையை முதுகுக்கு கொடுத்து அமர்ந்திருந்தனர் சிலர்.
விபத்துக்குள்ளான இளைஞன் என்னைப் பார்த்தான்.நான் அவன் தலைமாட்டில் சென்று நின்று கொண்டேன்.இமைக்கு மேலே ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டரைப் பிரித்துப் பார்த்தேன்.காயம் பெரியதாக ஆழமாக இருந்தது.அதை விடப் பெரிதாக கண்ணுக்குக் கீழே காயம்.படுக்கையின் ஒரு காலில் சிகிச்சை விவரச் சீட்டு ஓர் அட்டையில் தொங்கிக் கொண்டிருந்தது.அவன் பெயர் சி.கார்த்திகேயன்.தந்தை பெயர் சிவநேசன்.ஊர் பாகூர்-பாண்டிச்சேரி.காயத்தின் அளவும் தன்மையும் எழுதப்பட்டிருந்தது.கார்த்திகேயன் முகத்திலும் கைகளிலும் வியர்வை அரும்பியிருந்தது.நான் மின்விசிறியின் சுவிட்சைக் கண்டறிந்து அதனை அழுத்தினேன்.வெளுத்த தலைமுடி உடைய மருத்துவர் வந்து பத்து கேள்விகள் கேட்டார்.விபத்துக்கு முன்னோ பின்னோ உணவு ஏதும் உண்டீர்களா-விபத்துக்குப் பின் வாந்தி எடுத்தீர்களா-அந்தரங்க உறுப்புகளில் அடிபட்டுள்ளதா வலியை உணர முடிகிறதா என்பது போன்ற கேள்விகள் கேட்டார்.அவருடைய உதவி மருத்துவர் அதனை குறித்துக் கொண்டார்.டி.டி இன்ஜக்‌ஷன் எழுதி தருகிறேன்.வாங்கி வாருங்கள் என்றார் என்னிடம்.முதலில் ஒரு படிவத்தை நிரப்பச் சொன்னார்கள்.அப்படிவத்துடன் சென்று ஐம்பது ரூபாய் செலுத்தி வருமாறு கூறினர்.செய்தேன்.கேஸ் ஹிஸ்டரி படிவத்தில் சில மருந்துகளையும் தையல் போடுவதற்கு தேவையான உபகரணங்களையும் எழுதி முதலில் மருந்துகளை வாங்கி வரச் சொன்னார்கள்.
ஃபார்மஸியில் நான்கு கவுண்டர்களில் முப்பது பேருக்கு மேல் நின்றிருந்தனர்.ஆட்கள் குறைவாயிருந்த ஒன்றில் கடைசியாக நின்று கொண்டேன்.ஆனால் மற்றவற்றை விட மிக மெதுவாய் அது நகர்ந்து கொண்டிருந்தது.ஒரு வரிசையில் கடைசியாக இருப்பது பொதுஜனத்தின் அடையாளமாகவும் குறியீடாகவும் இருப்பது குறித்து ஓர் எண்ணம் எழுந்தது.ஆர்.கே.ல‌ஷ்மண் கேலிச் சித்திரங்கள் நினைவில் எழுந்தன.வெள்ளை வேட்டியும் கிழிசல் ஒட்டு போட்டு தைக்கப்பட்ட கருப்பு கோட்டும் மூக்குக்கண்ணாடியும் என்னிடம் வந்து சேர்ந்து விட்டதாக எண்ணினேன்.வாழ்வும் அதன் இன்பங்களும் துன்பங்களும் மனிதர்கள் அனைவருக்கும் தான் பொதுவாக இருக்கின்றன.ஆனால் கலைஞனின் கலையில் அவை வேறொன்றாக மாறுகின்றன.பொது அபிப்ராயத்தை அவரது பென்சில் சித்திரங்கள் கட்டமைத்தன.கார்ட்டூன்களில் அவர் வெளிப்படுத்திய கேலிகளுக்கு கிண்டல்களுக்கு பகடிகளுக்கு அரசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் – நீதிமன்றமும்- கூட அஞ்சின.பொது ஜனமாய் வரும் வயதான பெரியவரின் வெவ்வேறு முகபாவங்கள் மனதில் வந்து போயின.அங்கே நின்று கொண்டு ஆர்.கே.எல் பற்றி யோசிப்பது மிகப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது.என் முறை வந்ததும் மருந்து சீட்டை  அளித்து மருந்தைப் பெற்றுக் கொண்டேன்.அதனை செவிலியரிடம் அளித்தேன்.மீண்டும் ஃபார்மஸிக்கு வந்தேன்.முன்பை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் தையல் போடுவதற்கு தேவையான அறுவைசிகிச்சை உபகரணங்களை மருத்துவமனைக்கு வெளியேயிருந்த ஒரு தனியார் மருந்தகத்தில் வாங்கி வந்தேன்.
நீண்ட தூரத்தை நடந்து கடந்த போது வண்டியை எடுத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது.நேரத்தைப் பார்த்தேன்.இரண்டு முப்பது.நடப்பதன் மூலம் அடுத்து செய்ய வேண்டியவை பற்றி ஒரு தெளிவு ஏற்படுவதாகத் தோன்றியது.நேரம் போய்க்கொண்டிருக்கிறதோ என்ற பதட்டமும் இருந்தது.ஆம்புலன்ஸ் டிரைவர் என்னுடன் இணைந்து கொண்டார்.என் பதட்டத்தை உணர்ந்து,
‘’அடி பெருசே தவிர பயப்பட ஒண்ணுமில்லை சார்’’ என்றார்.
’’கண்ணுக்கு மேலயும் கீழயும் அடிபட்டிருப்பதால யோசிக்கிறதா இருக்கு’’
‘’வருஷக்கணக்கா இந்த மாதிரி விஷயங்களை தினமும் டிரீட்மெண்ட் பண்றாங்க சார்.ஒரு விஷயத்தை கணிக்கறதுல அவங்களுக்கு அந்த அனுபவமே ஹெல்ப் பண்ணும்.’’
’’அந்த பையன் வீட்டுக்கு ஃபோன் பண்ணிங்களா’’
’’ஆம்புலன்ஸ்ல அழைச்சுட்டு வந்தப்பவே நம்பர் கேட்டு ஃபோன் பண்ணிட்டோம்.ஃபிரண்ட்ஸ் நம்பருக்கு கூப்பிட்டு சொல்ல சொன்னாப்ல.கொஞ்ச நேரம் முன்னாடி அவங்க கூப்டாங்க சார்.கடலூர் தாண்டி கார்ல வந்துட்டு இருக்காங்களாம்.அவங்க வந்ததும் நீங்க கிளம்புங்க சார்’’
இருவருமே கார்த்திகேயனின் படுக்கைக்கு அருகே வந்தோம்.அவன் சற்று அமைதியடைந்திருப்பது போல் தோன்றியது.
‘’தம்பி!உங்க ஃபிரண்ட்ஸ் கடலூர் தாண்டி வந்துட்டு இருக்காங்க.ஒரு மணி நேரத்தில் இங்க இருப்பாங்க.உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா’’
இல்ல சார்.ஒண்ணும் வேண்டாம்.
நான் கால்களை அகட்டி வைத்து இடது உள்ளங்கையின் மேல் வலது கையை வைத்து நின்று கொண்டேன்.சில நிமிடங்களில் உடலில் ஒரு சமநிலை ஏற்பட்டது.பின்னர் அது மூச்சுக்கும் பரவியது.அதன் விளைவாக மனதில் ஒரு அமைதி உருவானது.வெறுமனே நின்று கொண்டிருந்தேன்.மனதில் உருவாகும் எண்ணங்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவை எங்கோ தொலைதூரத்தில் இருந்தன
வெள்ளை நிறத்தில் நீல வண்ண சிறு கோலங்கள் ஆடை முழுதும் பரவியிருந்த சுடிதாரை அணிந்த ஓர் இளம்பெண் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை ஓர் ஆபரணம் போல் அணிந்து அங்கே வந்தாள்.பயிற்சி மருத்துவராக இருக்கக்கூடும் என நினைத்தேன்.சர்ஜன் கேட்ட பத்து கேள்விகளை மீண்டும் கேட்க துவங்கினாள்.
ஆம்புலன்ஸ் டிரைவர் ‘’மேடம்!இந்த கேள்விகளை சர்ஜன் முன்னாடியே கேட்டு எழுதிட்டார்’’என்றார்
’’ஏன் அவர்ட்ட மட்டும் தான் சொல்லணுமா.நானும் சர்ஜன் தான்.நான் தான் தையல் போடப்போறேன்’’என்று சொன்னாள்.அவள் கண்களில் ஒரு சிரிப்பு இருந்தது.தோள்களிலும் கைகளிலும் நளினமான துடிப்பு இருந்தது.
என்னைப் பார்த்து ‘’நீங்க தான் அட்டெண்டண்டா?சர்ஜரி எக்யூப்மெண்ட்ஸ் எங்கே?’’என்று கேட்டாள்.மருந்துக்கடையில் இருந்து வாங்கி வந்தவற்றை அவரிடம் அளித்தேன்.தனது அலைபேசியில் மணியைப் பார்த்தாள்.
”சார்!தலையில் அடிபட்டிருக்கறதால சி.டி.ஸ்கேனும் எக்ஸ்-ரே-வும் எடுக்கணும்.நான் எழுதித் தரேன்.ரிப்போர்ட் வந்ததும் எனக்கு ஃபோன் பண்ணுங்க.நான் சாப்பிடப் போறேன்.காலையில் ஏழு மணிக்கு சாப்பிட்டது.இன்னும் எதுவும் சாப்பிடலை.நம்பர் நோட் பண்ணிக்கங்க”
நான் என்னுடைய பாக்கெட் சைஸ் நோட்டில் எழுதிக் கொண்டேன்.அதைக் கண்டு அவள் பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றாள்.அவள் முகமே புன்னகையானது.
”மேடம்!பேஷண்ட்டுக்கு உடம்பு எப்படியிருக்கு.கண்ஸிஸ்டெண்டா” என்று கேட்டேன்.
”பயமில்லை!ஸ்டேபிள்”என்றாள்.
ஃபார்மஸிக்கு பக்கத்தில் இருந்த கவுண்டரில் ஐயாயிரம் ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டேன்.பணம் செலுத்திய விபரத்தைக் கூறி செவிலியர்களிடம் கேஸ் ஹிஸ்டரி படிவத்தை அளித்தேன்.கார்த்தியின் நண்பர்களின் வருகைக்காக காத்திருந்தேன்.அப்போது தலைமை மருத்துவர் என்னை அழைத்தார்.
”சார்!இதில கையெழுத்து போடுங்க’’ சில பேப்பர்களில் போட்டேன்.ஆம்புலன்ஸ் டிரைவரும் தன் கையில் இருந்த காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடை பெற்றார்.
மருத்துவர்,’’நீங்க பேஷண்டோட அண்ணனா’’ என்று கேட்டார்.
”இல்ல சார்”
”தம்பியா”
”இல்ல சார்”.
”சொந்தக்காரரா”
”இல்ல சார்.நான் ஆக்ஸிடண்ட் நடந்தப்ப அந்த வழியா போய்க்கிட்டு இருந்தேன்.பாஸர்-பை”.
அந்த பதில் அவர் எதிர்பார்க்காததாக இருந்தது.காகிதங்களில் சில இடங்களில் சகோதரர் என எழுதப்பட்டிருந்த இடங்களில் வழிப்போக்கர் என மாற்றினார்.எனது பெயரை ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கேட்டிருக்க வேண்டும்.
”என்ன தொழில் செய்யறீங்க”
”மரவாடி வைச்சுருக்கன்.விவசாயம் செய்யறேன்.பால் பண்ணையும் உண்டு”.
”அப்படியா!ரொம்ப நேரம் நீங்க இருக்கறதை பார்த்து அவரோட பிரதர்ன்னு நினைச்சுக்கிட்டேன்.நீங்க செஞ்சது ரொம்ப நல்ல விஷயம்”.
அங்கிருந்த மருத்துவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.சிலருக்கு சீர்காழி கடைவீதியில் இருந்த என்னுடைய மரவாடி தெரிந்திருந்தது.கார்த்தியின் நண்பர்கள் வந்தனர்.அவர்களிடம் மருத்துவ விபரங்களையும் பணம் கட்டிய ரசீதுகளையும் அளித்தேன்.ரசீதுக்கான தொகையை என்னிடம் தந்தார்கள்.அவர்கள் நான்கு பேர் வந்திருந்தார்கள்.
”சி.டி.ஸ்கேனுக்கு அழைச்சுட்டு போங்க.கூட நர்ஸ் வருவாங்க.அப்படியே எக்ஸ்-ரே வும் எடுத்திருங்க.ரிப்போர்ட் வந்ததும் எனக்கு ஃபோன் பண்ணுங்க.சர்ஜனுக்கு நான் கால் பண்ணி சொல்லிடறேன்.என் கூட ஒருத்தர் வாங்க.வல்லம்படுகையில கார்த்தியோட வண்டியை எடுத்து தரேன்.எடுத்துட்டு வந்து இங்க வச்சுடுங்க.இல்லன்னா ஜாக்கிரதையா பாண்டிச்சேரி கொண்டு போயிடுங்க”.
வந்து சில நிமிடங்களே ஆகியிருந்ததால் அவர்களுக்கு ஒன்றும்  புரியவில்லை.எனினும் செயல்படத் துவங்கினர்.நான் அச்சூழலிலிருந்து விடுபட்டேன்.இனி கார்த்தியின் நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது.கார்த்தியிடம் விடைபெற்றுக் கொள்ள சென்றேன்.
”தம்பி!நான் உனக்கு ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்றேன்பா.உடம்பை பாத்துக்க.நான் அடிக்கடி சென்னை போவேன்.அப்ப உன்னை வீட்டில வந்து பாக்கறேன்”.
”ரொம்ப நன்றி சார்.எனக்கு நீங்க இன்னும் ஒரு உதவி செய்யணும்”.
”சொல்லுப்பா”.
”நான் காரைக்காலுக்கு ஃபிரண்ட் ஒருத்தர் வீட்டுக்கு போகும் போதுதான் இப்படி ஆயிடுச்சு.அவங்க என்னை எதிர்பாத்துக்கிட்டு இருப்பாங்க.ஃபோன்ல நடந்ததை சொன்னா  பதட்டப்படுவாங்க.என்கிட்ட ஒரு செக் இருக்கு.அத அவங்க வீட்ல கொடுக்கணும்”.
”அப்படியா!பேங்க் அக்கவுண்ட் நம்பர் இருந்தா குடு தம்பி.நான் இங்கயே கலெக்‌ஷனுக்குப் போட்டுட்டு போறேன்”.
”என் கூட படிச்ச பையன் சார்.மனோகர்-னு பேரு.இப்ப கத்தார்-ல வேலை பாக்கறான்.என்கிட்ட ஒரு லட்சம் கடனா கேட்டான்.மூணு மாசம் முன்னாடி அவனோட அப்பா தவறிட்டார்.நான் மும்பையில வேலை பார்க்கறன்.அடுத்த வாரம் மும்பை போயிடுவன்.அதுக்குள்ள உடம்பு சரியாகி காரைக்கால் போக முடியாது.நீங்க போனா பரவாயில்லைன்னு நினைக்கறேன்”.
எனது தயக்கம் முற்றிலும் நீங்கவில்லை.
கார்த்தி அவன் நண்பர்களிடம் அந்த பையை எடுங்க என்று சொன்னான்.எடுத்தனர்.அதிலிருந்து காசோலையை எடுத்துத் தந்தான்.கோடிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.செல்ல வேண்டிய விலாசத்தைக் கேட்டேன்.அவன் ஒரு செல் நம்பரை தந்தான்.மனோகர் காரைக்கால் என பாக்கெட் டைரியில் எழுதிக் கொண்டேன்.கார்த்தியின் நண்பர்களில் ஒருவன் என்னுடன் வந்தான்.
மருத்துவமனையை நீங்கும் போது முற்றிலும் புதிய மனநிலைக்கு வந்தேன்.தவிப்பும் பதற்றமும் நீங்கி மனதில் அமைதியும் நம்பிக்கையும் நிரம்பியது.இரு சக்கர வாகனத்தை மெதுவாக இயக்கினேன்.என்னுடன் வந்த பையனைப் பற்றி விசாரித்தேன்.அவன் நான் மதிய உணவு உண்டேனா என வினவினான்.இல்லை வீட்டுக்குப் போய் விடுகிறேன் என பதில் சொன்னேன்.சில மணி நேரங்களில் நடந்தது மனதில் காட்சித்தெறிப்புகளாக தோன்றி மறைந்தது.அந்நேரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.வல்லம்படுகையில் அந்த பையனை இறக்கி விட்டேன்.கொள்ளிடம் பாலத்தில் ஆனைக்காரன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எனக்கு எதிர்பக்கத்திலிருந்து வந்த ஆம்புலன்ஸைக் கண்டேன்.டிரைவர் என்னைப் பார்த்து கைகாட்டினார்.நானும் கைகாட்டினேன்.வண்டி வேகமாக கடந்து சென்றது.அதே வண்டி.மற்றொரு விபத்து.
வீட்டுக்குச் செல்லாமல் மரவாடிக்குச் சென்றேன்.ஆட்கள் இருவரும் இழைப்பு வேலையை செய்து கொண்டு இருந்தனர்.ஆசாரிகள் யாரும் இல்லை.புதிதாக எதுவும் இல்லை.பாத்ரூம் போய் விட்டு கை கால் முகம் கழுவி வந்தேன்.என்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டேன்.பெரும்பாலான நேரம் அமர்ந்திருக்கும் இடம் ஆதலால் மனம் மாமூல் நிலையில் இருந்தது.மேஜையில் தபால் எதுவும் இருக்கிறதா என பார்த்தேன்.ராமகிருஷ்ண விஜயம் வந்திருந்தது.முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை புரட்டினேன்.படக்கதையில் உள்ள படங்களைப் பார்த்தேன்.நாளை முழுக்க படிக்கலாம் என மூடி வைத்தேன்.சி.சி.டி.வி வழியே இழைப்பு வேலை நடப்பதைப் பார்த்தேன்.தொலைபேசியை எடுத்து வீட்டு எண்ணின் இலக்கங்களை அழுத்தினேன்.மனைவியிடம் தாமதமாகும் என சொல்லியிருக்க வேண்டும்.மதியம் சாப்பாட்டுக்கு வருவேன் என எதிர்பார்த்திருந்திருப்பாள்.
”ஹலோ”
”ராஜ்குமார் பேசறன்”
”மரவாடிக்கு எப்ப போனீங்க?”
காலர் ஐ.டி-யில் எண்ணைப் பார்த்திருப்பாள்
”இப்பதான்.கொஞ்ச நேரம் ஆச்சு…..குட்டி என்ன செய்யறான்”
”ஃபிரண்ட்ஸோட ஃபுட்பாலை வைச்சு விளையாடிக்கிட்டு இருக்கான்”.
”சரி!நான் வந்துடறன்”
”நீங்க இன்னும் சாப்பிடல இல்ல”
”நேரா வரேன்.வச்சுடறன்”.
பேசியை வைத்தேன்.எனது எல்லா நடவடிக்கையையும் அவள் யூகித்தே வைத்திருக்கிறாள்.எனது நேர மாற்றங்கள்,பழக்க மாற்றங்கள்,நிலைகொள்ளாமைகள்.ஆகியவற்றைக் கொண்டே அவளுக்கு அனைத்தும் தெரிந்து விடுகிறது.அம்மாவிடம் மாட்டிக் கொள்ளும் குழந்தையைப் போல்தான் எனது நிலைமை.
கார்த்தியின் நண்பன் அலைபேசியில் அழைத்தான்.
”சார்!வண்டியை சிதம்பரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து போட்டுட்டன் சார்.சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்டும் எக்ஸ்-ரே-வும் வந்திடுச்சி.ஒண்ணும் பிராப்ளம் இல்லன்னு சொல்லிட்டாங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல தையல் போடுவாங்க”.
”சரி!கிளம்பும் போது ஃபோன் செய்ங்க”.
காரைக்காலுக்கு ஃபோன் செய்தேன்.விபரம் சொல்லி அவர்களுடைய விலாசம் கேட்டுக் கொண்டேன்.பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் உள்ள தெரு என்று வழி சொன்னார்கள்.பணியாளர்கள் வேலையை முடித்து விட்டு வாசல் விளக்கைப் போட்டனர்.நான் அவர்களின் ஊதியத்தை வழங்கினேன்.வாசலுக்கு வந்து காத்திருந்தேன்.கேட்டை மூடிவிட்டு சாவியைத் தந்தனர்.
வீட்டுக்கு வந்து வண்டியை காருக்கு பக்கத்தில் நிறுத்தி விட்டு பக்க பூட்டை பூட்டினேன்.அர்ஜுன் என்னைப் பார்த்ததும் ஆசையாக ஓடி வந்தான்.இரு கைகளாலும் அவனை தூக்கிக் கொண்டேன்.
‘’கண்ணே,மணியே,முத்தே,பொன்னே,வைரமே, வைடூர்யமே”என்று கொஞ்சினேன்.
”அப்பா மாணிக்கமே சொல்லல.சொல்லல”
”நாளைக்கு சொல்றன்.நீ போய் விளையாடு”
”எனக்கு என்ன வாங்கிட்டு வந்த”
”அப்பா இப்ப காரைக்கால் போறேன்.அப்ப வாங்கிட்டு வறேன்”
அவன் நண்பர்களுடன் சென்று சேர்ந்து கொண்டான்.
வீட்டிற்கு சென்றேன்.சாமி மாடத்தில் தீபங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.மனைவி கரம் கூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள்.நான் ஈஸி சேரில் அமர்ந்து வசதியாக காலை நீட்டி சாய்ந்து கொண்டேன்.வழிபாடு முடித்து என்னருகே ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.
”டீ கொண்டு வரட்டுமா?ஏன் மதியம் சாப்பிடலை?ஹோட்டல்லயாவது சாப்டிருக்கலாமே?”
”முதல்ல டீ தாம்மா”.
அவள் எதுவும் சொல்லாமல் எழுந்து போனாள்.சில நிமிடங்களில் தேனீருடன் வந்தாள்.அழகும் நேர்த்தியும் தீபா செய்யும் எல்லா செயல்களிலும் இருக்கும்.ஆறு ஆண்டு குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவள் சோர்ந்து போயிருந்ததை நான் பார்த்ததில்லை.எதற்கும் குழம்பியதில்லை.எதிர்மறையாக பேசியதில்லை.எந்த சூழ்நிலையிலும் செய்ய வேண்டிய செயல் என்ன என்பதில் தெளிவுடனே இருக்கிறாள்.
’’மதியம் ரெண்டு மணிக்கு வந்திருப்பேன்மா.வர்ர வழியில் ஒரு ஆக்ஸிடண்ட்.ரெண்டு பைக் மோதி ஒரு பையனுக்கு நல்ல அடி.ரத்தமா கொட்டுது.ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணி ஹாஸ்பிடல்-ல சேர்த்துட்டு வந்தேன்’’.
”அப்பவே எனக்கு ஃபோன் பண்ணா என்ன?”
”வேலை சரியா இருந்துச்சும்மா.நானே கொஞ்சம் பதற்றத்துல தான் இருந்தேன்”.
”உதவிக்கு போனவர் பதற்றமா இருந்தா அவருக்கு ஹெல்ப் பண்றது யாரு?”
நான் முறைத்துப் பார்த்தேன்.அவள் சிரித்தாள்.
”இன்னும் வேலை முடியல.ஆக்ஸிடண்ட் ஆன பையன் ஒரு செக்கை காரைக்கால்-ல தரச் சொல்லி தந்திருக்கான்.நான் பஸ்-ல போய் தந்துட்டு வந்துடறன்”.
”இப்ப அந்த பையனுக்கு எப்படி இருக்கு?”
”அவன் ஃபிரண்ட்ஸ் ஒரு மணி நேரம் முன்னால பேசினாங்க.அநேகமா இன்னைக்கு ராத்திரி டிஸ்சார்ஜ் ஆயிடுவான்”.
மேலதிக கேள்விகள் வருவதற்கு முன்னால் நான் அங்கிருந்து எழுந்து கிளம்ப ஆயத்தமானேன்.வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தேன்.வாசலில் நின்றேன்.கூடத்தில் நின்றேன்.சீப்பை எடுத்து தலைவாரிக் கொண்டேன்.செக் பாக்கெட்டில் இருக்கிறதா என பார்த்தேன்.
”தீபா!எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு.என்னை பஸ் ஸ்டாண்ட்-ல டிராப் பண்ணு”.
”ஏன்?வண்டியை ஸ்டாண்ட்-ல போட்டுட்டு போனா நைட் அத எடுத்துட்டு வரலாம்ல?”
”வண்டியை நிறுத்தி சைட்-லாக் போட்டுட்டன்மா.நைட் மெதுவா நடந்து வந்துடறன்.ஒரு ஹெல்ப்ன்னு தானே கேக்கறன்.”
”வெயிட் பண்ணுங்க வறேன்.”
நாங்கள் வீட்டை பூட்டி விட்டு வாசலுக்கு வந்ததும் அர்ஜூன் ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான்.தீபா வண்டியை ஓட்ட நான் பின்னால் அமர்ந்து கொண்டேன்.
பேருந்து நிலையத்தின் வாசலில் இருந்த பெட்ரோல் பங்க்-குக்கு அருகில் ஸ்கூட்டியை நிறுத்தினாள்.
நான் இறங்கிக் கொண்டு தேங்க் யூ என்றேன்.அவள் என் கண்களைப் பார்த்து நாட் அட் ஆல் என்றாள்.
”வேலை முடிஞ்சதும் டிஃபன் சாப்பிட்டுடுங்க.கிளம்பும் போது ஃபோன் செய்யுங்க”.
’’சரி!நான் போய்ட்டு வறேன்”.
அர்ஜூன்,அப்பா!நானும் நானும் என்று இறங்கப் பார்த்தான்.நீ அம்மாவோட இரு.நான் போய்ட்டு வந்துடறன் என சொன்னதும் சரி என்று விட்டான்.
ஒரு தனியார் பேருந்தும் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்றும் பாண்டிச்சேரி அரசுப் பேருந்தும் நின்று கொண்டிருந்தன.நான் பாண்டிச்சேரி வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன்.வண்டி புறப்படுவதற்கு முன்னரே டிக்கெட் எடுத்து வைத்துக் கொண்டேன்.சீட்டில் தலையை சாய்த்து கண்களை மூடிக் கொண்டேன்.தூங்கினால் பரவாயில்லை என்று நினைத்தேன்.வண்டி கிளம்பியது.நகர எல்லையைத் தாண்டுவதற்குள் தூங்கிப் போனேன்.விழித்துப் பார்த்த போது காரைக்காலில் பேருந்து சென்று கொண்டிருந்தது.நிலையத்தில் இறங்கி கிழக்கே கடற்கரை நோக்கி இட்டுச் செல்லும் சாலையில் அரை கிலோமீட்டர் நடந்திருப்பேன்.முதலில் வணிக நிறுவனங்கள் இருந்தன.பின்னர் உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும்.அதனைத் தொடர்ந்து பளபளப்பான அடுக்ககங்கள்.அதற்கு அப்பால் இருளில் காலிமனைகள் கிடந்தன.அதையொட்டி மூங்கில் வேலி போட்ட ஓட்டு வீடு ஒன்று இருந்தது.அதன் அண்மையில் சில கூரைவீடுகள் இருந்தன.வீட்டு வாசலில் நான்கைந்து பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.
”வணக்கம்.என் பேரு ராஜ்குமார்.சீர்காழியிலிருந்து வறேன்.பாண்டிச்சேரி கார்த்திகேயன் அனுப்பினாரு”.
”வாங்க சார்!கார்த்தி சாயந்திரமே பேசுச்சு.உள்ள வாங்க”.
நான் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன்.புதிதாக ஃபிரேம் போடப்பட்டிருந்த ஒரு பழைய புகைப்படத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்த சந்தன மாலை மங்கிக் கொண்டிருந்தது.பெண்டுலம் அலைவுறும் பழைய கடிகாரம் நேரத்தை எட்டு நாற்பத்து ஐந்து எனக் காட்டியது.சற்று தள்ளி ஒரு இளைஞனின் ஃபோட்டா இருந்தது.கத்தாரில் வேலை பார்ப்பவனாக இருக்கக்கூடும்!அயர்ன் மடிப்பு மாறாத சுடிதார் அணிந்திருந்த ஓர் இளம்பெண் சமையலறையிலிருந்து வந்து வணக்கம் சொன்னாள்.
மீண்டும் சமையலறைக்கு செல்ல முயன்றாள்.
”என்ன தயார் பண்றீங்க?”
”காஃபி”
”இல்ல வேண்டாம்மா.காஃபி எனக்கு செட் ஆகாது.வயித்தைப் புரட்டும்.தலை சுத்தும்.டீ கொடுத்துடுங்களன்”.
அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது.அநேகமாக உணவு தயாரிப்பதில் புதிதாக பயிற்சி எடுப்பவளாக இருக்கக் கூடும்.காஃபியை விட டீ தயாரிப்பது எளிது.
தேனீர் உடனே வந்தது.அப்போது இருந்த பசிக்கு இதமாகவே இருந்தது.
”டீ ரொம்ப நல்லா இருந்துச்சும்மா.இந்த செக்கை வாங்கிக்கிங்க.நேரமாகுது.நான் கிளம்புறேன்’’.
அவள் செக்கை வாங்கிக் கொண்டாள்.ஏதோ கேட்க முயன்று முடியாமல் தயங்குவதாகத் தோன்றியது.
”சார்!உங்களைப் பத்தி கார்த்தி சொன்னார்.ஆக்ஸிடண்ட் நடந்தப்பறம் நீங்க தான் ஹாஸ்பிடல்-ல சேர்த்து ரொம்ப மெனக்கெட்டிங்க-ன்னு”.
”கண்ணுக்கு முன்னால ஒரு விஷயம் நடக்கும் போது எப்படி-மா வேடிக்கை பார்த்துட்டு போக முடியும்?வருஷத்தில பெரும்பாலான நாள் சொந்த வேலையைத் தான் பாக்கறோம்.என்னைக்காவது ஒரு நாள் நம்மால முடிஞ்சத செய்யலாமே!இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லம்மா”.
”சார்!எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”.
”சொல்லுமா”
”நான் பி.காம் படிச்சுருக்கேன்.எனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செஞ்சு தர முடியுமா”.
அவள் முகம் வாடியிருந்தது.தயக்கமும் கூச்சமும் அவளது குரலில் வெளிப்பட்டன.
”உன் சர்டிஃபிகேட்ஸைக் காட்டும்மா.பாக்கறேன்”.
கொண்டு வந்து தந்தாள்.எல்லா பாடத்திலும் எண்பதுக்கு மேல் எடுத்திருந்தாள்.சான்றிதழ்களில் அவளது பெயர் இருந்தது.
”டைப்-ரைட்டிங்,ஷார்ட் ஹேண்ட்,டேலி எதாவது படிச்சிருக்கயா”
”இல்லை சார்”
எனது நண்பரான ஆடிட்டர் விக்னேஸ்வரனுக்கு ஃபோன் செய்தேன்.விபரம் சொன்னேன்.அவர் கம்பெனிக்கு ஆள் தேவை என்று சொன்னார்.நான் நாளையே வந்து சந்திக்கச் சொல்வதாக சொன்னேன்.நன்றி சொல்லி அலைபேசியைத் துண்டித்தேன்.
“அம்மா!சார்ட்ட பேசிட்டன்.சார் பேரு விக்னேஸ்வரன்.ஆடிட்டர்.அவர் ஒய்ஃபும் ஆடிட்டர்.அவங்க பேரு வாணி.வி.வி அண்ட் கோ-ங்கறது அவங்க கம்பெனி.அவங்க ஆஃபிஸ்-ல ஒரு வேலை காலி இருக்காம்.பி.காம் கிராஜுவேட்டுக்காக பார்த்துட்டு இருக்கறதா சார் சொல்றார்.காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு பக்கத்தில் சாரோட ஆஃபிஸ்.நாளைக்கு போய் பாரு.சார் நிச்சயம் ஹெல்ப் பண்ணுவார்.”
அவள் அலுவலக முகவரியையும் ஆடிட்டரின் ஃபோன் நம்பரையும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டாள்.நான் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
நீங்க எங்களுக்கு செஞ்சது பெரிய உதவி.எங்களை ஒரு பெரிய இக்கட்டு-ல இருந்து காப்பாத்தியிருக்கீங்க என்று அப்பெண்ணின் தாயார் சொன்னார்.நான் வணக்கம் சொல்லி விட்டு புறப்பட்டேன்.
தீபாவுக்கு ‘வேலை முடிந்தது.கிளம்பி விட்டேன்’ என குறுஞ்செய்தி அனுப்பினேன்.சில நிமிடங்களில் ஓ.கே டேக் சப்பர் என பதில் வந்தது.
ஒரு ஹோட்டலில் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு  பேருந்து நிலையத்துக்கு வந்தேன்.ஒரு பேருந்தும் இல்லை.சிதம்பரம் செல்லும் பேருந்துக்காக காத்திருக்கும்  கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.

------------

Comments