Skip to main content

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்



அழகியசிங்கர்          

                                                                               2.

மூன்றாவது கூட்டமாக விருட்சம் சார்பில் நானும் கோவிந்தராஜ÷ம் சேர்ந்து நடத்திய கூட்டம்.  23.05.2015 அன்று நடந்தது. இது விருட்சம் நடத்தும் 12வது கூட்டம்.  கூட்டத்திற்கு 40 பேர்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இக் கூட்டம் ஜெயகாந்தன் நினைவாக நடத்தப்பட்ட கூட்டம்.  கூட்டத்தில் முக்கிய பேச்சாளிகளாக அசோகமித்திரனும், ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரான கே எஸ் சுப்பிரமணியனும் கலந்து கொள்வதாக அறிவிப்பு செய்திருந்தேன்.  இதைத் தவிர உமாபாலு என்பவரும், டாக்டர் ஜெ பாஸ்கரனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  இது விருட்சம் நடத்தும் 12வது கூட்டம்.     கூட்டத்தின் ஆரம்பத்தில், திரு பெ சு மணி பாரதியார் கவிதையை ராகமிட்டு அருமையாகப் பாடினார்.  பின் ஒரு நிமிடம் ஜெயகாந்தனுக்கும், சமீபத்தில் மறைந்த குவளைக்கண்ணனுக்கும் மௌன அஞ்சலி செலுத்தினோம்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் அசோகமித்திரனை கடைசியில் பேசச் சொல்லலாம் என்று நினைத்தேன். கே எஸ் உடல்நிலை சரியில்லாததால் இக் கூட்டத்திற்கு வர முடியவில்லை.  கூட்டத்திற்கு அது பெரிய இழப்பாக எனக்குத் தோன்றியது.  உமா பாலு அவர்கள் முதன் முதலாக ஜெயகாந்தனைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.  இது மாதிரி இலக்கியக் கூட்டங்களில் அவர் பேசுவதும் இதுதான் முதல் முறை. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் உள்ள உறவைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்.  எழுத்தாளர்கள் வடிக்கும் பாத்திரங்களாகவே வாசகர்கள் மாறி விடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.  உமா அவர்கள் எழுதுவது டைரியில் குறிப்புகளாக எழுதி எழுதி கிழித்து விடுவதாகக் குறிப்பிடுகிறார்.  ஒரு பெண் வாசகியாக அவர் படிக்கும் பத்திரிகைகள், புத்தகங்களைப் பற்றி பேசுகிறார்.  எல்லோருக்கும் தெரிந்து கல்கி, ஆனந்தவிகடன் வீட்டில் படிக்க முடியும் என்று குறிப்பிடுகிறார்.  மற்றப் பத்திரிகைகளை கல்லூரி லைப்ரரியிலும், வகுப்பில் டெஸ்க் அடியில் வைத்தும் படித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.  கசடதபற, நாரதர், சதங்கை போன்ற பத்திரிகைகளை அவருடைய சித்தப்பா மகரிஷி வீட்டில் படித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உமா ஜெயகாந்தனைப் பற்றிப் பேசிய சில விஷயங்கள் ரொம்ப துணிச்சலாகப் பேசியதாக தோன்றியது.

'ஜெயகாந்தனை நான் இரண்டொருமுறை கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன்.  அவர் மீசை எனக்கு பாரதியாரை ஞாபகப் படுத்தியிருக்கிறது.  அவர் பார்வையை நோக்கும்போது அவர் மனசிலிருந்து நேரிடையாகப் பேசுபவர்போல் தோன்றும்.  அவருடைய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதையைப் படிக்கும்போது எல்லோர்போல் எனக்கு அவர் மீது கோபம.  ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியை இழிவாக சித்தரிக்கிறார் என்று.   பெண்களை பலவீனமாகக ஏன் படைத்திருக்கிறார் என்றும் தோன்றியது. இப்போதும் கங்காவை கேட்ட மாதிரி யாராவது காரில் லிப்ட் கேட்டால், தயக்கம் ஏற்படாமல் இருப்பதில்லை.  ஏன் அது மாதிரி ஒன்று நடக்கவேண்டுமென்று கேட்காமல் இருக்க முடியவில்லை.  அடுத்தது கௌரிபாட்டி.  எங்க வீட்டில் ஒரு பாட்டி இருந்தாள்.  மீனாட்சி பாட்டி என்று பெயர்.  எப்படி இந்த ஜெயகாந்தன், மீனாட்சி பாட்டி மாதிரி கௌரி பாட்டியைப் பாத்திரப் படைப்பாகக் கொண்டு வந்துள்ளார் என்பது அச்சரியமாக இருக்கிறது.
உமா இறுதியில் ஜெயகாந்தனை வாழ்த்தி ஒரு கவிதை வாசித்தார். உண்மையில் சிலநேரங்களில் சில மனிதர்கள் எழுதியதற்காக அவர் ஜெயகாந்தனை தன் பேச்சில் சாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் சாடவில்லை. 

உமா பாலுவிற்குப் பிறகு டாக்டர் பாஸ்கரன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.  ஐந்து குருடர்கள் யானையைப் பார்த்தது மாதிரி இருக்கிறது ஜெயகாந்தனைப் பற்றி பேசுவது. ஜெயகாந்தனுக்கு அரசியலில் அனுபவம் உண்டு, சினிமாத் துறையில் அனுபவம் உண்டு, பத்திரிகைத் துறையில் அனுபவம் உண்டு. இலக்கியம் சம்பந்தமான எல்லாத் துறைகளிலும் அவருக்கு அனுபவம் உண்டு.  அவரைப் பற்றி 15 நிமிடம் பேசுவது என்பது குருடர்கள் யானையைப் பார்த்த மாதிரிதான் இருக்கும்.  நான் ஜெயகாந்தனைப் பார்த்ததில்லை.

ஆனால் அவர் புத்தகங்கள் மூலமாகத்தான் அவரை நான் அறிவேன். அவருடைய  நாவலான சில நேரங்களில் சில மனிதர்களை நானும் படித்தேன்.  இரவு 12 மணிவரை படித்தேன்.   ஜெயகாந்தன் வடிவமைத்திருக்கும் பாத்திரங்கள் உங்களைத் தூங்க விடாது. அவருடைய நெருங்கிய நண்பர் கே எஸ் கணையாழியில் எழுதியிருக்கிறார்.  அவருடைய வீட்டில் மணிக்கணக்கில் ஜெயகாந்தன் பேசிக்கொண்டிருப்பார்.  ஒருநாள் ஜெயகாந்தனைப் பார்த்து அவர் அம்மா, "என் பையனை நீ பார்த்துக்கொள்," என்று சொன்னாராம்.  

அவர் அம்மா இறந்து போனபோது, ஜெயகாந்தன் துக்கம் விஜாரிக்க வந்தாராம்.   உண்மையில்  ஜெயகாந்தன் அவர் வாழ்நாளில் இறந்த யார் வீட்டிற்கும சென்று துக்கம் விஜாரிக்க மாட்டாராம். ஏனென்றால், 'உயிரோடு இருப்பவரின் நினைவுகளே எனக்குப் போதும், இறந்த பிறகு நான் பிணத்தைப் பார்க்க வரமாட்டேன்,' என்பாராம் ஜெயகாந்தன்.  சுப்பிரமணியனுக்கோ அவர் கொள்கையை விட்டு வந்திருக்கிறார் என்று தோன்றியதாம்.  ஏன் வந்திருக்கிறீர்கள் என்பதுபோல் கேட்டாரம்.  'உங்கள் தாயார் எனக்கும் தாயார் அல்லவா ' என்றாராம்.    அவருடைய அரசியலைப் பற்றி பேசப் போவதில்லை, அதேபோல் அவருடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பேசப் போவதில்லை.  நான் அவருடைய படைப்புகளைப் பற்றி பேசப் போகிறேன். 

 அதாவது நான் படித்த அவர் சிறுகதைகளைப் பற்றி பேசப் போகிறேன்.  கிட்டத்தட்ட 40 நாவல்கள், 200 சிறுகதைகள், விதம் விதமான தலைப்புகளில் சுயசரிதங்கள் என்று சாதனைப் படைத்தவர்.  பல விருதுகளைப் பெற்று கௌவரிக்கப் பட்டவர் ஜெயகாந்தன்.  சென்னை சேரி பாஷையில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி கதைகளை எழுதியவர் ஜெயகாந்தன்.  பொன்னீலன் என்ற எழுத்தளர் ஜெயகாந்தனைப் பற்றி இப்படி சொல்கிறார்,  பாரதியார் கவிதைகளில் என்ன சாதித்தாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரி சிறுகதைகளில் ஜெயகாந்தன் சாதித்துள்ளார்.  ஒரு பக்கத்தில் திராவிடக் கொள்கைகளை எதிர்த்துப் பேசியும், இன்னொரு பக்கம் சங்கர மடத்தை ஆதரித்துப் பேசும்போது, அந்த முரண் தானாக வெளிப்படும்.  வீ அரசு என்கிற விமர்சகர் ஜெயகாந்தனின் கதா மாந்தார்கள் வாசகர்களைக் கேள்வி கேட்பார்கள் என்கிறார்.  ரிஷி மூலம் என்ற கதை ஒரு பிராமணப் பெண் சோரம் போவதுபோல் ஒரு கதை. அதை வேறு எதாவது ஒரு வகுப்பை சேர்ந்தவர் அதுமாதிரி எழுதப்பட்டிருந்தால், அவர் தலை தப்பியிருக்குமா என்று காலச்சுவடு பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.  ஆனால் ஜெயகாந்தன் துணிச்சல்காரர்.  அவர் திராவிட மாயையே அவர்கள் முன் துணிச்சலாக விமர்சனம் செய்தவர்.  பிரம்ம உபதேசம் என்ற கதையில் சங்கர சர்மா என்ற ஒரு பாத்திரம்.  அவர் வேறு ஜாதி பையனை பிரம்ம உபதேசம் செய்து வைக்கிறார்.  அப்போது சங்கர சர்மாவை ஒருத்தர் கேட்கிறார்.  " ஏன் உங்க பெண்ணை அந்தப் பையனுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது?" என்று.,  சங்கர சர்மா சொல்கிறார்:  "அவனுக்கு பிரம்ம உபதேசம் செய்து வைத்துவிட்டேன்.  அவன் என் பையனாகிவிட்டான்.  அவனுக்கு எப்படி என் பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியும்?" என்று.  ஜெயகாந்தன் பிராமண பாஷையில் அவர் கதைகள் பலவற்றை எழுதி உள்ளார்.  ஏன் ஒரு பிரமான எழுத்தளார் கூட அவர் பயன் படுத்துவதுபோல் பிராமண பாஷையைக் கற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியாது.  பிரமாண பாஷையைப் பயன்படுத்த ஜெயகாந்தன், கரிச்சான் குஞ்சுவிடம் ஒரு மாசம் பயிற்சி எடுத்துக் கொண்டார். 

ஒருவன் கேள்வி கேட்கிறான் ஜெயகாந்தனைப் பார்த்து, "இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?" அதற்கு அவருடைய பதில் üயாருடைய அறிவுரையும் கேட்காதே.ý இதுதான் ஜெயகாந்தன்.

இன்னொரு கேள்வி ஒருவர் கேட்கிறார்.  அது ஒரு கூட்டத்தில் நடக்கிறது.  "1988ல் நீங்கள் கம்பன் ஒரு முட்டாள் என்று கூறி இருக்கிறீர்கள்...அதை இப்போதும் ஏற்றுக் கொள்கிறீர்களா?" எல்லோரும் ஜெயகாந்தன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவலாகப்  பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  "ஓ..  அப்படிச் சொல்லியிருந்தால் அது தப்புதான்.,"   ஜெயகாந்தனின் இந்தப் பதிலைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.  திரும்பவும் சொல்கிறார் : "ஆனால் அப்படிச் சொல்லியிருந்தால் அது ஒரு கருத்துதான்.  அதை நீங்கள் ஏற்க வேண்டுமென்பது இல்லை.  மறுக்கவும் மறுக்கலாம்," என்கிறார்.  

இப்படி சிறப்பாகப் பேசி முடித்தார் டாக்டர் பாஸ்கரன்.
                                                                                                                              (இன்னும் வரும்)

Comments