ஞானக்கூத்தன்
அன்று வேறு கிழமை
நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று
பதுங்கிப் போன நாய் வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர
மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய் ஒடுங்கி.
நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து, அவர்கள் மீண்டும்
பாடை தூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்....
Comments