Skip to main content

ஓர் நடைபயணத்தில்
லக்ஷ்மி சிவகுமார்


நடந்தாலென்ன  ?என்று
நட்புமுகம் பார்த்து வினவிய மறுகணம்
முகம் முழுக்க பச்சை சாயம்
பூசிக்காட்டினான்.

எப்போதும் நாணம் கொண்டே
வளைந்து நெளிந்தோடிக்கிடந்த
சாலைப் பயணம் .

வலப்புறம் உள்ளடங்கி
ஓங்கி வளர்ந்து நின்ற பள்ளியில்
படித்த பருவங்களை
ஏக்கத்துடன் அசைபோட்டு முடிக்கையில்
போதுமான இடைவெளியற்றிருந்த
அரசு மதுக்கடையில்
ஆடை கலைந்தவர்கள் கூட்டம்
அநாகரீக வார்த்தைகளை
அள்ளி வீசிக்கொண்டிருந்தது .
வெட்கப்பட்ட காதுகளை
மூடிக்கொள்ள உத்தரவிடாத மூளை
முந்திச்செல்ல கால்களை பணித்தது  .

அலைந்து திரிந்த கண்களுக்கு
அடுத்ததாய் அகப்பட்டது
அய்யாவு "டீ" கடையில்
வெட்டவெளியில் பிரமீடுகளாய்
தூசுதின்ற பலகாரம் .
விபரீதம் புரியாமல் பசிப்பிணி ோக்கமட்டும்
எடுத்துக்கொண்டிருந்தனர்
துப்புரவு பணியாள தோழர்கூட்டம்.

சற்றே நாணி த்திரும்பிய  சாலை முக்கில்
கணபதி மரப்பட்டறையில்
கோங்கு மரம் கூர்போட்டுக்கொண்டிருந்தான்
நாசிக்கவசம் அணியாத சுந்தரம் .

கவலை கப்பிக்கொண்டு
கடிவாளம் கட்டிக்கொண்டு நடந்த கண்களை
கடிவாளம் கிழித்த செயற்கை மின்னல் தாக்கியது !
ஆம் , “பெர்பெஃக்ட்வெல்டிங் வொர்க் ஷாப்  இல் 
பாதுகாப்புக் கண்ணாடி  அணியாமல்
சிறிதொரு பத்தவைப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தான்
தொழிலாளி சண்முகம்.
ஒய்யார நாற்காலியில் கூலிங் கிளாஸ்  அணிந்தவாறு முதலாளி .

மூன்று பேர் பயணித்த
ஒற்றை இருசக்கர வாகனத்தை மறித்த
போக்குவரத்துக் காவலர்  ஒருவர்.
அரசு விதிக்கும் அபராதத்தொகையை கட்டினாலுனக்கு
கட்டுபடியாகாதென்ற பேச்சுவார்த்தையில் சமரசம் கொண்டு
சகாயம் செய்துகொண்டிருந்தார்கள் .

இரண்டு வேலை உணவருந்தும்
தட்டுவண்டி இட்லி கடைக்காரரை
போக்குவரத்திற்கு  இடையூரென்று
திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார்
காவலரொருவர்.

தாளமுடியாத தலைவலி தளர்த்திட எண்ணி
மெடிக்கல் ஷாப்  படியேறினேன்.
தலைவலி மாத்திரை கேட்டு
தண்ணீர் எடுக்க குனிந்து திரும்பினேன் !
கண்ணாடியில் கவிந்திருந்தது

ஸ்ப்ரிட்  நனைத்த காட்டன் துணியில் 
ஃபிசிசியன் சாம்பிள் நாட்  டூ  பீ  சோல்டு  -
அழித்துக்கொண்டிருந்த முதலாளியின் முகம் .

அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில் 
கச்சிதமாய் அடைக்கப்பட்ட போதை லாகிரிகள்
பெட்டிக்கடையில் மட்டும்
பயந்து பயந்து பிரசவமாகிக்கொண்டிருந்தது!!
கூடவே கொட்டைஎழுத்தில்
புகைத்தல் உடல் நலத்திற்கு கேடென்று பதியப் பட்டிருந்த
வெண் சுருட்டும் .

போர்க்குற்ற செய்தியை
பெட்டிசெய்தியில் கூட
தேடிக்கிடைக்காத ஏமாற்றத்தில்
கார்ப்பரேட் கம்பெனி  தயாரித்திருந்த
திரைப்பட விளம்பரத்தையும் .
கொட்டை எழுத்தில் ஒட்டிக்கொண்டிருந்த
.பி .எல்  கிரிக்கெட் செய்தியையும் ,
12 -ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்த
மந்திரிகள் பட்டியலையும்.
கொடுத்த காசிற்காய் வாசித்துக் கொண்டிருந்தார்
சமூக ஆர்வலர் ஒருவர் !!

அய்யாவு "டீ" கடை பலகாரமும்
தட்டு வண்டி இட்லி கடையும்
இங்கே கொஞ்சம் முரண்பட்டே
சொல்லப்பட்டிருக்கும் .

உற்று நோக்கினால்
வாழ்தலே முரண்தான் இங்கே .

முரண்பட்டுநிற்கும் சமூகத்தில்
வாழ்தலின் கட்டாயமும் முரண்தான். .

Comments