அழகியசிங்கர்
எங்கள் அலுவலகத்தில் மதியம் ஒன்றிலிருந்து, இரண்டு மணிவரை உணவு அருந்தப் போவோம். உண்மையில் அரைமணி நேரம்தான் உணவு இடைவெளி. நாங்கள் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்வோம். இப்போது பிரபலமாக இருக்கும் யோகா வகுப்பில் என் அலுவலக நண்பர் என்னையும் சேர்த்துவிட்டார். நான் சொல்லும் இந்தக் கதை பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தது.
நான் யோகா கற்றுக்கொண்டு விட்டேன் என்ற கர்வத்தில் இருந்தேன். மதியம் சாப்பிடுவதற்கு முன் சூன்ய தியானத்தை ஆரம்பிக்க வேண்டும். ஒரு இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உட்கார வேண்டும். பின் எந்த யோசனையும் இல்லாமல் இருக்க வேண்டும். வெளியில் நடக்கும் எந்தச் சப்தமும், அசைவும் மனதில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் சூன்ய தியானம். கண்ணை மூடியவுடன் தத்ரூபமாய் ஆழ்ந்த யோக நிலையில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அலுவலகக் கட்டடத்தில் மூலையில் நான் கற்றுக்கொண்ட புதியதில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன். பெரும்பாலும் யாரும் என்னைப் பார்க்க முடியாத இடத்தில்தான் உட்கார்ந்து இருப்பேன். ஆனாலும் கடைநிலை ஊழியர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. அதுவும் கேசவன் என்பவன் பொல்லாதவன்.
"சார், என்ன பண்றீங்க?"
நான் பதில் சொல்ல மாட்டேன். தியானம் கெட்டுவிடும்.
"ஓ...தியானம் பண்றீங்களா?"
அன்று நான் கேசவன் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சூன்ய தியானத்தில் மனதை செலுத்தினேன்.
தியானம் முடிந்தவுடன், கேசவனைக் கூப்பிட்டு என்னுடைய யோக முயற்சியைப் பற்றி சொன்னேன். நான் மேற்கொள்ளும் சூன்ய தியானத்தில் மனம் ஒருமைப்பட்டு எந்தவித எண்ணமும் என்னுள் போகாமல் இருக்க வேண்டும் என்று சொன்னேன். கேசவன் தலையில் அதெல்லாம் ஏறவில்லை.
அடுத்தநாள் நான் திரும்பவும் உட்கார்ந்து சூன்ய தியானம் செய்யும்போது கேசவன் வந்துவிட்டான். ஆபத்து.
"நான் பைலைத் தேடி வந்தேன்....சார், தியானம் செய்யறாரா?"
என் மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். கேசவன் சொல்வதெல்லாம் காதில் விழக்கூடாது என்று உறுதியாக பல்லைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடியபடி உட்கார்ந்திருந்தேன்.
கேசவன் விடவில்லை..
"சார், நல்லா தோரணையாகத்தான் உட்கார்ந்திருக்கிறார்....தியானம் பண்றாரு தியானம்..."
கேசவன் சொல்வதெல்லாம் என் காதில் விழுந்தவண்ணம் இருக்கிறது. என்னை ரொம்பவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்.
கேசவன் திரும்பவும், "சார்...தியானம் பண்றதில தீவிரமா இருக்காரு,....ஆனா அவர் முகத்தில சிரிப்பு வருது...பாரு."என்று சொன்னவுடன், தாங்க முடியாமல் சிரித்துவிட்டேன்.
"கேசவா.." என்று சத்தமும் போட ஆரம்பித்தேன்.
கேசவன் இருக்கிறவரை அலுவலகத்தில் தியானம் செய்ய முடியாது என்று தீர்மானித்தேன். அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கேயும் அதுமாதிரி தியானம் செய்ய முடியாது என்று தோன்றியது.
அந்தத் தியானத்தின் ஆரம்பத்தில் வீட்டில் மொட்டை மாடிக்குச் சென்று சில யோகா பயிற்சிகளைச் காலையில் செய்வேன். அதில் ஒன்று காக்காய் மாதிரி கத்துவது. நான் அப்படிக் கத்தப் போய் பதிலுக்கு வேற இடத்தில் இன்னொரு காக்காய் குரல் கொடுக்க ஆரம்பித்தது. அது என்ன சொல்ல வருகிறது?
இதுமாதிரி யோகா கற்றுக்கொள்ள நான் வருவதற்குக் காரணம். என் அலுவலகத்தில் ஒரு அதிகாரி அவர் கீழ் பணிபுரியும் சிம்பந்தியுடன் ஏதோ தகராறு. அந்தப் பெண்மணி அவருடன் பேசவில்லை என்பதோடல்லாமல் அவரை விட்டு வேறு ஒரு அதிகாரியுடன் பணிபுரிய சென்றுவிட்டார். இதை அவரால் தாங்க முடியவில்லை. இருவரும் திருமணம் ஆனவர்கள். மன அமைதிக்கு யோகா வகுப்புக்குப் போனவர். என்னைப் போன்ற பலரை யோகா கற்றுக்கொள்ள சொல்லி இழுத்துவிட்டார். அவர் சொல்வார் : 'யோகா கற்றுக்கொண்ட பிறகு எனக்குக் கோபமே போய்விட்டது' என்று. ஆனாலும் அந்தப் பெண்ணை அவரால் மறக்க முடியவில்லை. நடித்துக்கொண்டிருந்தார்.
என்னதான் கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற நினைப்பில்தான் அங்கு சென்றேன். ஆனால் மனம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை. இதில் பைத்தியமாக பலர் ஈடுபடுவதாக அறிந்தேன். பணம் கொடுத்துதான் இதெல்லாம் கற்றுக்கொள்ள முடியும். அமைதியைக் கற்றுத் தர பெரிய கொள்ளை.
இந்த யோகா கற்றுக்கொண்டதால் எனக்கு தூக்கம் சரியில்லாமல் போய்விட்டது. தூங்க வேண்டிய நேரத்தில் சரியாக தூக்கம் வருவதில்லை. அப்படி தூங்காமல் இருப்பது அதிக ஆற்றல் என்று அவர்கள் சொன்னார்கள்.
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆழ்நிலை தியானம் என்ற ஒன்றை என் நெருங்கிய நண்பர் கற்றுக்கொண்டார். அதை நடைமுறை படுத்தும்போது அவருக்குப் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. எப்போதும் அளவாகப் பேசும் அவர், அதிகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் எண்ணுவதையும், பேசுவதையும் நிறுத்த முடியவில்லை. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தப் பிறகுதான் அவர் சாதாரண நிலைக்குத் திரும்பினார். திரும்பியவுடன் அவர் சொன்னதை என்னால் இன்னும் மறக்க முடியாது. 'வெறுமே கோயிலுக்குப் போய்க்கொண்டு சாதாரணமாக இருந்தால் போதும்.'
ஆரம்பநிலை தியானத்திலிருந்து அடுத்த நிலை தியானத்திற்கு கோயம்புத்தூர் பக்கத்திலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றேன். பெரிய சிவனை உருவாக்கியிருந்தார்கள். போய் வேண்டினால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று எழுதியிருந்தார்கள்.
நான் போவதை அறிந்து அப்பா வழக்கம்போல் தடுத்தார். எங்கே யோகா கற்றுக்கொள்ள போய் குடும்பத்தை விட்டு விட்டு துறவு பூண்டு விடுவேனோ, என்று அவருக்குப் பயம். பலர் அப்படிப் போயிருக்கிறார்கள்.
அங்கு போனபிறகுதான் தெரிந்தது மன அமைதிக்காக எத்தனைப் பேர்கள் இதுமாதிரி யோகா கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று. யோகா போகிறவர்கள் எல்லோரும் அரைகுறையாக அதைத் தொடர்கிறார்கள். அவர்களுக்கு மனநிலை, உடல்நிலையில் பல தொந்தரவுகள் இருக்கும். அதைச் சரிசெய்ய யோகா போகிறார்கள். சரியாகப் போய்விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அங்கு ஒரே கூத்தாக இருந்தது. தேவையில்லாதவற்றை யோசனை செய்ய வைக்கிறார்கள். அதனால் பலர் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அழுது கொண்டிருப்பவர்களை உடனடியாக சிரிக்கவும் வைக்கிறார்கள்.. எல்லோரையும் ஓட வைக்கிறார்கள். சினிமா பாட்டிற்கு ஏற்ப நடனமாட வைக்கிறார்கள். பின் விபரீதமான யோகா ஒன்றை சொல்லிக் கொடுக்கிறார்கள். அது ஒரு மாதிரி மூச்சுப் பயிற்சி. அதைச் செய்த பலர் மயக்க நிலையில் மாறி விடுவார்கள். அவர்களை சத்குருதான் எழுப்ப வேண்டும்.
'குரு என்பவர் யார்? இங்கு கூடியிருக்கும் கூட்டத்தில் குரு இருக்கிறார்,' என்று சொல்லி, அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து குருவாக மாற்றி விடுவார்கள். அவர் கழுத்தில் மாலையைப் போட்டு சத்குருவிலிருந்துமு எல்லோரும் நமஸ்காரம் செய்வார்கள். நான் அங்கிருந்து ஓடியே வந்துவிட்டேன்.
சிவராத்திரி அன்று டிவியில் பார்க்கும்போது அந்த இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியை ரிலே பண்ணிக் கொண்டிருந்தார்கள். பிரபல பாடகர்கள் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருசிலர் சாதாரணமாக அமராமல் சாமி வந்ததுபோல் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
ஏன்?
(அம்ருதா மே 2013 இதழில் பிரசுரமானது)
Comments