எதையாவது சொல்லட்டுமா...80
அழகியசிங்கர்
சி சு செல்லப்பாவை முதன் முதலாக நான் கநா.சு இரங்கல் கூட்டத்தில்தான் சந்தித்தேன். அக் கூட்டம் கணையாழி என்ற பத்திரிகை நடத்தியது என்பது ஞாபகம்.அவர் கொஞ்சம் சத்தமாகவும், கோபமாகவும் பேசியதாக என் நினைபபு. யாருக்குமே ஒரு புத்தகம் படிக்கிறோமென்றால் அப் புத்தகம் எழுதிய எழுத்தாளரையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுவது வழக்கம். அப்படிப் பார்க்கும்போது பெரிய ஏமாற்றமே மிஞ்சும். புத்தகத்தில் படித்த மாதிரி அந்த எழுத்தாளர் தெரிய மாட்டார்.
அதேபோல் க.நா.சுவையும் மௌனி இரங்கல் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன் மௌனியை சிதம்பரம் சென்று பார்த்துவிட்டு வந்ததை என் எழுத்தாள நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். குறிப்பாக பிரமிள் மௌனி வீட்டிற்கு சென்று பார்த்ததை புள்ளி விபரமாக கூறுவார். என்னமோ நேற்றுதான் அவரைப் போய்ப் பார்த்ததுபோல் இருக்கும் அவர் பேச்சு.
நானும் பல எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்தவித பிரமையும் இப்போது ஏற்படுவதில்லை அப்போதெல்லாம் எனக்குப் பிரமை இருந்தது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது என் உறவினர் கல்கண்டு என்ற பத்திரிகையைப் படிக்கச் சொல்வார். அந்தப் பத்திரிகையில்தான் எந்த ஆபாசமும் இருக்காது என்றும் குறிப்பிடுவார். அந்தப் பத்திரிகையைப் படிக்கும்போதுதான் எனக்கு தமிழ்வாணனைச் சந்திக்க வேண்டுமென்று தோன்றியது. நான் இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் பேச வருகிறார் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நான் முதன் முதலாக மேடையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் நிகழ்ச்சி அது.
அன்று கூட்டம் அதிகம். கருப்பு கண்ணாடி அணிந்து தமிழ்வாணன் இருந்தார். கூட்டம் முடிந்து அவர் நடந்து வரும்போது, பலர் அவரிடம் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டு நோட்டுப் புத்தகம் எல்லாம் நீட்டினார்கள் நானும் ஒரு தாளில் அவருடைய கையெழுத்தை வாங்கி வைத்துக்கொண்டேன்.
எழுத்தாளர்களை மட்டுமில்லை சினிமா நடிகர்களை, நடிகைகளைப் பார்க்க வேண்டுமென்று பலருக்குத் தோன்றும். அதேபோல் கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க ஒரு கூட்டம் நிற்கும். பிரபலமானவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் பொதுவாக ஏற்படுவது வழக்கம்.இதுமாதிரியான பிரமைகள் ஒரு கட்டத்தில் நம்மை விட்டுப் போய்விடும்.
நான் உஸ்மான் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொணடிருந்தபோது, வங்கித் தலைவரிடமிருந்து கிளை மேலாளருக்கு போன். உடனே எங்கள் கிளைக்குப் பக்கத்தில் உள்ள பிரபலமான நடிகர் என்.டி ராமராவ் வீட்டிற்குப் போகும்படி உத்தரவு. அப்போது என்.டி.ஆர் கட்சி என்று எதுவும் ஆரம்பிக்கவில்லை. அவர் புதியதாக கணக்கு ஆரம்பித்தார்.
கிளை மேலாளர் என்னை அழைத்துக்கொண்டு போனார். என்டிஆர் வீட்டிலுள்ளவர்கள் எங்களை வரவேற்று குளிர்பானம் கொடுத்தார்கள். அவரைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆந்திராவிலிருந்து ரசிகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். என்டிஆர் பால்கனியிலிருந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுத்தார்கள். இந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. ஆனால் பிரபலமானவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது. அவர்கள் சாதாரணமானவர்கள் மாதிரி அவர்கள் வசிக்கும் இடத்தில் நடந்து போக முடியாது. ரஜனிகாந்த் என்னுடன் 12 ஜி பிடித்து திருவல்லிக்கேணி வர முடியாது. அந்த சுதந்திரம் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இருக்கிறது.
கல்லூரி நாட்களில் என் கவனத்திற்கு வந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தனும் நா. பாரத்தசாரதியும். ஒருமுறை ஜெயகாந்தன் கூட்டமொன்று ஆலந்தூர் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்தது. வந்திருந்த ஜெயகாந்தன் தலையில் பாரதியார் மாதிரி முண்டாசு கட்டியிருந்தார். பின் உரத்த குரலில் கூட்டம் நடத்துபவர்களையே ஒரு சாடு சாடினார். அவர் உரத்த குரலில் பேசுவது எனக்கு ஒருவிதமாகப் பட்டது. நானும் அதுமாதிரி பேசிப் பார்க்கலாமென்று நினைத்தேன். முயற்சி செய்து பார்த்தேன். என்னால் அது முடியாது என்று தோன்றியது.
இந்தச் சமயத்தில் நகுலன் என்ற எழுத்தாளர் ஞாபகம் வருகிறது. அவரால் ஒரு கூட்டத்தில் அமர்ந்துகொண்டு உரக்கப் பேச முடியாது. யாரைப்பார்க்கிறாரோ அந்த ஒருவருடன்தான் அவர் பேச முடியும். அவர் பேசுவது அந்த ஒருவருக்குத்தான் கேட்கும்.
நா பார்த்தசாரதியை நான் இரண்டு சந்தர்ப்பத்தில் பார்த்தேன். முதல் சந்தர்ப்பத்தில் அவர் அகில பாரதிய வித்தியார்த்தி அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில தந்தை பெரியாருக்கு எதிராக ஒரு கூட்டத்தில் தலைமை தாங்க வந்தார். கம்பீரமான தோற்றம் கொண்டவர். அவரைப பார்த்தால் சினிமாவில் ஹீரோவாக நடித்திருக்கலாமென்று தோன்றும். பெரியார் கலந்துகொண்ட கடைசிக் கூட்டம் அது. பெரியார் இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் திடலிலிருந்து பெரியாரின் தொண்டர்களும், கோஷமிட்டார்கள். அவருக்கு எதிராக நாங்களும் நா பாவின் தலைமையில சத்தம் போட்டோம்
இரண்டாவது சந்தர்ப்பம் நா.பா மரணம் அடைந்தபோது. என் உறவினர் நா.பா வின் விசிறி. அவருடைய ஒரு கதையைக் கூட நா.பா மாதிரி என் உறவினர் எழுதியிருப்பார் என்பது என் எண்ணம். அவர் வற்புறுத்தலின்பேரில் நா.பா வீட்டிற்குச் சென்றோம். ஒரு அறையில் நா.பாவை படுக்க வைத்திருந்தார்கள். அந்த அறையில் அடர்த்தியான கூந்தலுடன், நல்ல உயரமான சற்று பருமனான நா.பாவின் மரணமடைந்தத் தோற்றததைப் பார்க்க நடுக்கமாகத்தான் இருந்தது. மாலை நேரத்தில் நாங்கள் பார்த்த சமயத்தில் யாரும் கூட அங்கு இல்லை.
என் பிரமையை ஒழித்துக் கட்டியவர்கள் என் வேறு சில எழுத்தாள நண்பர்கள். பலவிதங்களில் சாதனை புரிந்தவர்கள். ஆனால் அவர்கள் என்னைப்போல் சாதாரணமானவர்கள். எந்தவித பந்தா இல்லாமல் அவர்களை எளிதில் சந்தித்து உரையாட முடிந்தது.
க.நா.சுவை ஒரு சிறிய வாடகை வீட்டில் மயிலாப்பூரில் சந்தித்திருக்கிறேன். அப்படி சந்திக்கும்போது நம் வீட்டிலுள்ள பெரியவர் ஒருவரைச் சந்திப்பதுபோல் சந்தித்து உரையாடியிருககிறேன். பந்தா எதுவுமில்லாத எளிமையான மனிதர். ஒருமுறை நான், அவர், இன்னும் சில இலக்கிய நண்பர்களெல்லோரும் சேர்நது மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றிருக்கிறோம்.
எழுத்து பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திய சி.சு செல்லப்பாவை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இலக்கியச் சந்திப்பு வருடாந்திர கூட்டமொன்றில் சி சு செல்லப்பா ஒவ்வொரு பதிப்பாளரையும பார்த்து, அவர் சுதந்திர தாகம் என்ற நாவலைப பிரசுரிக்க மன்றாடியதை நான் அறிவேன். அதன்பின் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சுதந்திரதாகம் மூன்று பாகங்களையும் சி சு செல்லப்பா கொண்டு வந்தார். அதைக் கொண்டுவர நானும் அவருக்கு பக்கப்பலமாக இருந்து உதவி செய்திருக்கிறேன்.
நூறாவது ஆண்டை கடந்த க.நா.சு, சி சு செல்லப்பாவை நாம் மறக்க முடியாது. அவர்கள் பிரமையை ஏற்படுத்தாதவர்கள்.
(Appeared in Amrudha January 2013 issue)
Comments