Skip to main content
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

9.
 

நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.  யாரும் இப்படி கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  நான் யார்? அவர்கள் யார்? இந்தக் காலத்தில் உறவுமுறைகள் எல்லாம் கேலிக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
 
உற்சாகமாக எனக்கு வனஜா சமையல் செய்து போட்டதை நான் மறக்க முடியாது.  எனக்குத் தோன்றியது.  இந்த பெரியம்மா, பெரியப்பா உயிரோடு இருந்திருக்கும்போது நான் வந்திருக்கக் கூடாதா என்று.  அப்போது வந்திருந்தால் அவர்களை என் கூடவே இருந்திருக்கச் சொல்லியிருப்பேன்.

வனஜாவைப் பற்றி எப்படிச் சொன்னாலும், அவள் என்னிடம் அன்பாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் வாய்நிறைய ''அண்ணா, அண்ணா'' என்று கூப்பிடுவாள்.  என் பெரியப்பா பையன் மூர்த்தி அவ்வளவாகப் பேச மாட்டான்.  ஏன் பேசத் தெரியாது.
 
நான் பந்தநல்லூருக்கு வந்த அடுத்தநாள், மயூரநாதர்  கோயிலுக்குக் காலையில் சென்றேன்.  தனியாகத்தான்.  அந்தக் காலை நேரத்தில் அந்தக் கோயில் ஹோ என்றிருந்தது.  அம்மன் சந்நிதிக்குப் போய் நின்றேன்.  யாருமில்லை.  கோயிலின் அந்தகாரம் பயமுறுத்தியது.  அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிடலாமென்று நினைத்தேன்.  ஏன் இந்தத் தனிமையில் அம்மனைப் பார்க்கும்போது பயம் புகுந்துவிடுகிறது.
 
இது குறித்து அழகியசிங்கரிடம் பேசவேண்டுமென்று நினைத்தேன்.
 
வள்ளலார் கோயில் சந்நிதித் தெருவில் வனஜா குடியிருக்க நல்ல இடமாக வாடகைக்குப் பார்த்துக் கொடுத்தாள். அவள் முன்பு குடியிருந்த இடம்தான்.  நான் வங்கியில் பணிபுரிகிறேன் என்பதால் வாடகை கொஞ்சம் அதிகமாக கேட்டார்கள்.  நானும் சரி என்றேன்.  எனக்கு என்னமோ அந்த இடத்தை விட முடியவில்லை.  மேலும் கோயில் இருக்கும் இடத்தில் வீடு.
 
அழகியசிங்கரை ஒருமுறை வரும்படி கூப்பிட்டேன்.  பெரியப்பா பையன் வீட்டில் இருந்தபோது இரவு நேரங்களில் யூரின் போக நான் அவதிப்பட்டேன்.  மேலும் பல கதவுகளைத் திறந்துதான் பாத்ரூம் போக வேண்டும்.  இரவு நேரத்தில் கதவுகளைத் திறந்தால், பயங்கரமாக சத்தம் போடும்.  பின் நான் யூரின் போவது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.
 
 
(To be continued)

Comments

Popular posts from this blog