Skip to main content

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும் 2

நகுலன்


இலக்கிய வட்டம் 22.05.1964 இதழில் ''விமர்சனத்தின் நோக்கம்'' என்ற தலையங்கக் கட்டுரையில் வருமாறு எழுதுகிறார். ''இலக்கிய விமர்சன ரீதியாகக் கவனிக்கும்போது கூட இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட விஷய கனத்தினால்தான் ஒரு இலக்கியம், ஒரு நூல் நிலைக்கிறது என்று டி.எஸ் எலியட் போன்ற கவிஞர் விமர்சகர்கள் உணர்ந்து சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.... இந்த விஷய கனத்தை உணர்ந்துகொள்ள இந்திய சிந்தனை இந்திய விமர்சனுக்கு உதவக் கூடும் என்பது என் நம்பிக்கை.

மேலும் சொல்கிறார்: எனது அனுபவமும், அந்த அனுபவத்தில் ஆனந்தமும் எப்படி ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளச் செய்யப்படுகிற முயற்சியை இலக்கியத்திலானால் விமர்சனம் என்றும், வாழ்க்கையிலானால் தத்துவ தரிசனம் என்றும் சொல்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ கடைபிடிக்கிற தத்துவம் மனிதனாய்ப் பிறந்துவிட்ட ஒவ்வொருவனுக்கும் அவசியமாகிறது. இங்கு குறிப்பிட்ட இவ்விரு அடிப்படைகளும் க.நா.சுவின் படைப்பை நாம் சரிவர புரிந்துகொள்ள நமக்கு உதவும் என்றுதான் நினைக்கிறேன்.

இன்னும் ஒரு மேற்கோள். அவர் இலக்கிய விசாரம் என்ற நூலிலிருந்து... ''ஆனால் ஆழம் மனுஷ்யத்துவம் என்பது இலக்கியத்தின் ஆதார அடிப்படை. அது காணப்படாத இலக்கியம் எந்த அழகிய உருவம் பெற்றாலும் போதாது என்றுதான் சொல்ல வேண்டும்.''

க.நா.சுவை ஒரு அளவு ஈடுபாடுடன் படித்தவர்கள் அவர் திரும்பத் திரும்பக் கீழ்வரும் வார்த்தைகளை இலக்கிய தராசு மந்திரங்களாக உபயோகிப்பது தெரிந்திருக்கும் - ரஸனை, பூரணத்துவம், தனித்வம்.

இனி நான் அவர் நாவல் - சிறுகதை - கவிதைகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை என் அனுபவத்தை வைத்துக்கொண்டு சில சொல்ல விரும்புகிறேன். ஒரு கல்லூரி ஆசிரியர் என்ற வகையில் நான் எனக்குப் பிடித்த மாணவர்களிடம் அடிக்கடி இவ்வாறு சொல்வதுண்டு. ''நீங்கள் கூடியவரை என மன ஓட்டத்தை, என் மனம் செயல்படுவதை அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.'' இதை புரிந்து கொள்வது என்பது வெறும் வார்த்தை மூலம் ஏற்படுவதில்லை.

க.நா.சு மதிக்கும் எழுத்தாளரான ராஜாராவ் என்பவர், ''எழுத்தாளனும் வார்த்தையும்'' என்ற ஒரு கட்டுரையில் வருமாறு எழுதுகிறார். ''இன்னொருவருடன்'' ''பேச வேண்டும்'' என்ற ஒரு நிர்பந்தத்திலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொண்டாலன்றி, நாம் நம்மை மற்றொருவருக்கு சுயரூபத்தில் காண்பித்துக் கொள்ள முடியாது.''

''ஒரு உபாசகனாக இருந்துகொண்டு என்னையே நான் அனுபவிக்க முடிந்தாலன்றி (இது ரசனை) சப்தத்தின் நித்தியம் பலிப்பதில்லை. இது இல்லாவிட்டால் அனுபவமும் சரி, சொல்லும் சரி, ஒருவித உறவை ஏற்படுத்துவதில்லை. இந்த சாதனை இல்லாத இடத்தில் வார்த்தை வெறும் ஒலிக் குப்பை மாத்திரம்.''

''வார்த்தை என்பதே அடிப்படையில் சப்தம் என்பது நிசப்தத்தின் மூலமாக விளைவது,'' மேலும் அவர் வார்த்தை நம்மை மீண்டும் நிசப்தத்திற்குக் கொண்டு செல்கிறது என்கிறார். (இலக்கிய பூர்வமாக நான் இதை எழுத்தாளன் - வாசகன் இருவரையும் உறவுபடுத்துவது என்பது ஒரு மக்களின் பண்பாடு மூலம் மனம் - மனத்துடன் ஐக்கியமாவது தான் என்று நினைக்கிறேன்.)

(இன்னும் வரும்....)

Comments