Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 32

நான் கடைசியாக நாராணோ ஜெயராமனைப் பார்த்தது தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில். அப்போது அவர் எழுதுவதை almost நிறுத்திவிட்டார். பிரமிள்தான் அவர் அங்கு இருப்பதை சொல்லி என்னை நா ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் ஜெயின் கல்லூரியில் கெமிஸ்டிரி டிபார்ட்மெண்டில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நண்பருடன் சேர்ந்து பார்ட்டனராக ஒரு துணிக்கடை வைத்திருந்தார். அது அவருக்குப் பொருத்தமில்லாத பணி. மேலும் அந்த இடத்தில் எதுவும் போணி ஆகாது. சில பதிப்பாளர்கள் அங்கு புத்தகக் கடை வைத்துக்கூட போணி ஆகாமல் கடையை இழுத்து மூடி விட்டார்கள்.

வேலி மீறிய கிளை என்ற 48 கவிதைகள் கொண்ட தொகுப்பை க்ரியா 1976 நவம்பரில் நாரோணோ ஜெயராமன் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதன் பின் அவர் பெரிதாக எதுவும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எழுத முடியவில்லை என்பதற்கு சொன்ன காரணம்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

'எதற்கு எழுத வேண்டும்? ஜே கிருஷ்ணமூர்த்திதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாரே?' என்றார். 'ஏன் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் கூட எதுவும் எழுத வேண்டாம். அதுதான் ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு மாற்று மாற்றி விட்டாரே உலகத்தை.' நா ஜெயராமனின் இந்தப் பேச்சு சங்கடமாக இருந்தது. ஜெயராமன் 48 கவிதைகளுடன் நின்றுவிட்டார். குறிப்பிடும்படியாக சில கதைகளும் எழுதி உள்ளார். சா கந்தசாமி நாவல் போல் தொலைந்து போனவர்களில் ஜெயராமனும் ஒருவர்.

அவர் புத்தகம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை. க்ரியா இன்னொருமுறை அவர் கவிதைத் தொகுதியை வெளியிடுமா என்பது தெரியவில்லை. அப்படி வெளியிட்டாலும் யார் இந்த ஜெயராமன். ஜெ கிருஷ்ணமூர்த்தியை தப்பாப் புரிந்துகொண்டு பல எழுத்தாளர்கள் எழுதாமல் போய்விட்டார்கள். பிரமிளால் ஒரு நாவல் எழுத முடியவில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் உள்ளே புகுந்து எழுத்தை எழுதவிடாமல் பண்ணிவிட்டது. அல்லது எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது.

எனக்கு ஜெயராமனின் 48 கவிதைகளாவது இதைப் படிப்பவர்கள் படிக்க வேண்டுமென்ற எண்ணம். அதனால் நான் கொஞ்சம் ஜெயராமனை இதில் இயங்க வைக்கிறேன்.

1. அமிழல்

ஆடாத கிளைமேல்

கரையாமல், சிறகு பரத்தி,

தலை தாழ்த்தி, நீட்டிய அலகால்

இடம், வலமெனச் சொறிந்து நின்றது - காகம்

இருகூறு என இருபக்கம் பிரிந்த

இறகுகள் தொய்ந்து விழும்நிலை பெற்றன-

அகம் பார்க்கும் நிலை இதுவெனத் தெளிவு.


2. நிலை


அமர்ந்திருக்கும் வரப்பு.

வரப்பின் மேல் சிலுக்கும் செடி.

அரக்குச் சிவப்பாய்

ஒளிரும்

மேற்குச் சிதறல்கள்.


அண்ணாந்த கண்

தொலைவில் அதிசயிக்க

வேகம் கொள்ளும் பறவைகள்.


வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்

முயங்கிக் கிடக்கும் உருவங்கள்.

தொலைவில் மேயும் மாடு.

கன்று

எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.

எங்கோ மூலையில்

கட்டிப் போட்ட

வீட்டு நாய் மட்டும்

குரைத்துக்கொண்டே யிருக்கிறது.


3. வானளாவி நின்று


இந்த வானிற்கும்

என் முகம்தான் போலும்!

குளுமையாய் கொஞ்சம் பச்சை.

அல்லது

இள நீலம்.

நரம்பு முறுக்க செஞ்சிவப்பு.

துக்கம் முட்டச் சாம்பல்

நுரை ததும்ப வெள்ளை என

நிறம் காட்டி

வெளியாய் விரிந்து.......

(இன்னும் வரும்)

Comments

நாரணோ ஜெயராமன் அவர்களின் கவிதைகளை மீண்டும் உயிர்ப்பித்து இலக்கிய உள்ளங்களில் சமர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி
குமரி எஸ். நீலகண்டன்
நாரணோ ஜெயராமன் அவர்களின் கவிதைகளை மீண்டும் உயிர்ப்பித்து இலக்கிய உள்ளங்களில் சமர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி
குமரி எஸ். நீலகண்டன்
நாராணோ ஜெயராமனைப் பற்றி நினைவு கூறல் அவசியம். வேலி மீறிய கிளைகளின் ரசிகன் நான். மறுபதிப்பு அவசியம் வர வேண்டும். ரவிஉதயன்
ஜெ கிருஷ்ணமூர்த்தியை தப்பாப் புரிந்துகொண்டு பல எழுத்தாளர்கள் எழுதாமல் போய்விட்டார்கள். உண்மை. அதான் இந்த உலகில் நமக்கு முன் எல்லாரும் வாழ்ந்துவிட்டார்களே. நாம் எதற்கு வாழ வேண்டும் எ‌ன்று யாராவது நினைப்பார்களா? ஒவ்வொருவரது வாழக்கையிலும் மற்றவர்கள் வாழாது விட்ட அல்லது மற்றவர்களுக்கு காண கிடைக்காத அந்தரங்க அனுபவம் இருக்கும். அதை மீட்டெடுப்பதே எழுத்து. ஜெயராமன் போன்றோர் தொடர்ந்து இயங்க வேண்டும்.
Dr.Rudhran said…
எல்லாமும் போடுங்கள் என் பங்கிற்கு முகநூலில் காட்டுகிறேன்.
Chandran Rama said…
Thanks a lot sir for the article about Narano Jayaraman... it is really sad to know that he misunderstood J.K...."Veli Meeriya Kilai" is still one of the best modern poetry compilation. It is equivalent to to "Nadu Nisi Naighal" by Pasuvaiah.

Wish to meet Narano Jayaraman one of this days..sir do you have any idea about his present whereabouts?