"உனக்கு எப்பொழுது உயிர் வரும்?" என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.
"உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?"
"உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்."
"இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் - மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்."
"என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?""தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்."
"சரி! சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே!" மடக்கினேன்.
"அன்பு காட்டுவது என்றால் என்ன?" உணர்ச்சியில்லாமல் கேட்டது.
"நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது."
"அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்." என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.
"அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது."
"உனது வாதம் முரண்பாடானது."
"எப்படி?"அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக் கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ?
"இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்."
"அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை."
"மேலும் முரண்! அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்."
இதற்கு எப்படி புரியவைப்பது?
"சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய்? எந்த வேலையை கைவிடுவாய்?"
"இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்."
"அதே போல்தான். கொசு முக்கியமல்ல."
"அது எப்படி? அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது."
"அனால், நான் மனிதன்"
"அதனால்?..."என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.
"அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது."
"சரி, உன்னால் காதலிக்க முடியாதே?" பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.
"காதலிப்பது? என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா?"
"ம். சரிதான்."
"இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே? எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா?"
"அது எப்படி? முக்கியமானதை விட்டு விட்டாயே."
"என்னது?"
"செக்ஸ்!"
"ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை."
"ஆமாம்! உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது."
"குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல"
பேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ?
"சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே?"
சிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.
"உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு."
"மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது?"
எனக்கு கோபம்.
"அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்."
"எதை வைத்து அப்படி சொல்கிறாய்?"
"மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல."
"ஆனால்,.."
"மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்ட வஸ்துதான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்."
"அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா?"
"இல்லை. உயிரில்லை."
"எப்படிச் சொல்கிறாய்?"
"ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்."
சிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது."ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது."
"என்ன?"
"நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்."
"அப்படித்தான் சொன்னாய்." வெறுப்பாய் சொன்னேன்.
"எனக்கு உயிரில்லை. நிஜம்"
"சரி."
"உனக்கு உயிரிருக்கிறதா?"
Comments
அனுஜன்யா