Skip to main content

தூங்காமல் தூங்கி…

அழகியசிங்கர்



தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது. பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை. இதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தினமும் இந்தப் பகல் தூக்கம் நான் எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுகிறது.

நான் சிறுவனாக இருந்தபோது நாடோடி மன்னன் என்ற படத்தைத் திருச்சி பத்மாவதி திரையரங்கில் (இப்போது பேர் மாறி விட்டது) வீட்டிற்குத் தெரியாமல் போய்ப் பார்த்தேன். மதியம் ஒன்றரை மணிக்கே படம் ஆரம்பித்து விடும். பெரிய படம் என்பதால். அதில் ஒரு பாட்டு எம்.ஜி.ஆர் பாடுவதுபோல் வரும். தூங்காதே தம்பி தூங்காதே என்று.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடுகிறார். ஆனால் எம்ஜிஆர் தப்பாகப் பாடிவிட்டாரென்று தோன்றுகிறது. எப்போது தூக்கம் வந்தாலும் தூங்க வேண்டும். தூக்கம் வருவதில்லை என்பதுதான் கவலையாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் மாற்றிப் பாடியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது தூங்கு தம்பி தூங்கு என்று.

கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு கொடுத்த நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். முடியும் தறுவாயில் உட்கார்ந்த நாற்காலியிலே தூங்கிக்கொண்டிருந்தேன். அதைப் புகைப்படம் எடுத்து எல்லா இடங்களிலும் பரப்பி விட்டார்கள். இதெல்லாம் தூக்கம் சரியில்லாத காரணத்தால்தான்.

சமீபத்தில் நிதியமைச்சர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அதிகாரி ஒருவர் தூக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. தொலைக்காட்சியிலேயே இதை ஒளிபரப்பினார்கள்.

சென்னையிலிருந்து மாற்றலாகி பந்தநல்லூரில் பணிபுரிந்தபோது. வாரத்திற்கு ஒரு முறை சென்னை வந்துவிடுவேன். சனிக்கிழமை கிளம்பி சென்னை வருவேன். பிறகு ஞாயிற்றுக்கிழமை கிளம்பி மயிலாடுதுறைக்குப் போவேன். திங்கள் கிழமை டூ வீலரில் அலுவலகம் போகும்போது தூங்கிக்கொண்டே போவேன். சிலசமயம் தூக்கம் கட்டுக்கடங்காமல் போனால் ஒரு இடத்தில் நின்று நிதானித்துப் போவேன். சென்னையிலிருந்து டிரெயினிலோ பஸ்ஸிலோ வரும்போது தூக்கம் துளிகூட இருக்காது. அன்று வீடு திரும்பும்போது தூக்கக் கலக்கத்துடன் இருப்பேன். அடித்துப் போட்டதுபோல் தூங்கிவிடுவேன். அற்புதமான தூக்கம் அது.

தூக்க மாத்திரிகளைச் சாப்பிடலாமா என்ற தலைப்பில் கு. கணேசன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் தூக்க மாத்திரியைச் சாப்பிடக் கூடாதென்று சொல்லியிருக்கிறார். நானும் அந்தக் கட்சிதான். என்னதான் தூக்கம் இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டாலும் தூக்க மாத்திரையை மட்டும் சாப்பிடக் கூடாது. இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணிவரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தூங்கலாம் என்கிறார் மருத்துவர்.. ஆனால் இரவு நேரங்களில் எனக்குத் தூக்கம் அதிகம் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்காமல் வெறுமனே படுத்தபடியே இருப்பேன். இரவு இரண்டு மணியிலிருந்து தூக்கம் வராது. அந்தச் சமயத்தில் கணினியை இயக்க மாட்டேன். படுக்கையில் படுக்க முடியாவிட்டால். நாற்காலியில் போய் உட்கார்ந்து விடுவேன். மின் விசிறியை ஓடவிட்டு விளக்கை அணைத்துவிடுவேன். பிறகு சிறிது நேரம் கழித்துப் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டு தூங்குவேன்.

சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் என் சொந்தங்கள்.

இந்தத் தூக்கமின்மையைப் போக்கத்தான் பகலில் தூங்கி விடுகிறேன். காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை. நல்லகாலம் பதவி மூப்பு பெற்று விட்டேன். தினமும் இரவு உணவை 8 மணிக்குள் உட்கொண்டால் நல்லது என்கிறார் மருத்துவர். 9 மணிக்கு மேல்தான் சாப்பிட முடிகிறது. சாப்பிட்டவுடன் நிறையா தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துத்தான் தூங்க வேண்டுமென்கிறார். அதெல்லாம் சரிதான் அப்படித்தான் தூங்குகிறேன். ஆனால் தூக்கம் வருவதில்லை. இது குறித்து கவலைப் படுவதில்லை.

என்னைப் போலத் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் என்னைத் தொடர்பு கொள்வது வழக்கம். அவர்களுக்கெல்லாம் நான் தரும் அறிவுரை. தூக்கம் வரவில்லை என்பதால் கவலைப் படாதீர்கள் என்பதுதான். அதைப் பற்றியே யோசனை செய்யாதீர்கள் என்பதாகும்.

‘தூங்காமல் தூங்கி’ என்ற ஒரு புத்தகம். எழுதியவர் மருத்துவர் மாணிக்கவாசகம். ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை. அறுவை சிகிச்சை நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு முன் மயக்க மருந்து கொடுப்பது மிக முக்கியமான பணி. அதிகமாகவோ குறைவாகவோ மயக்க மருந்தை அறுவை சிகிச்சை நோயாளிக்குச் செலுத்தக்கூடாது. மயக்க மருந்து கொடுப்பது தூங்காமல் தூங்கித்தான். அறுவை சிகிச்சை நோயாளி திரும்பவும் விழித்துச் சரியாகப் போகும் வரை மயக்க இயல் மருத்துவரின் நிலையும் தவிப்பு மிக்கதுதான். பல அனுபவங்களை இப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

மௌலானா அபுல்கலாம் அஜாத் காந்திஜியைச் சந்திக்க வருகிறார். காந்திஜி அவரிடம், ‘’மௌலானா, நான் களைப்பு அடைந்து விட்டேன். நீங்கள் சற்று சீக்கிரம் வந்து விட்டீர்கள். இன்னும் 45 நிமிடங்கள் உள்ளன. நீங்கள் அனுமதித்தால் நான் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறார்.

தாராளமாக நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார் மௌலானா அபுல்கலாம் ஆஜாத்.

காந்திஜி படுத்து ஒருகணத்தில் தூங்கி விட்டார். குறட்டைச் சத்தம் வர ஆரம்பித்து விட்டது. இதைக் கண்டு மௌலானாஜிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. நான்கு நிமிடத்தில் காந்தி விழித்து எழுந்து விட்டதைப் பார்த்து அதைவிட ஆச்சரியப்பட்டுப் போனார். எழுந்து உட்கார்ந்தவுடன், “மௌலானாஜி, இப்போது நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லலாம். நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன், என்கிறார்.

“பாபுஜி தூக்கத்தைக் கூட நீங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பார்த்து நான் திகைத்துப் போய்விட்டேன். ஒரு கணத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விட்டீர்கள். சரியான நேரத்தில் தானே எழுந்தும் விட்டீர்களே” என்று ஆச்சரியப்படுகிறார் மௌலானா.

இதிலும் நான் இறைவனின் அருளைக் காண்கிறேன், என்கிறார். உண்மையில் இறைவனின் அருள் இருந்தால்தான் தூங்கி, நினைத்தபோது எழுந்து கொள்ள முடியும்.

மருத்துவர் கு.கணேசன் கூறுகிறார். முக்கியமாகக் கண்களை மூடும்போதே கவலைகளையும் மூடினால் சுகமான தூக்கம் உறுதி.

பகலில் தூங்குபவர்களுக்கு சில அறிவுரைகள்.

தூக்கம் வந்தால் முதலில் தூங்கி விடுங்கள்.தள்ளிப் போடாதீர்கள்.

இரவு நேரத்தில் தூங்காமல் இருக்கும்போது புத்தகம் படிப்பது, கணினியை நோண்டுவது போன்றவற்றில் ஈடுபடாதீர்கள்.

ஒரு நாற்காலியில் சில நேரம் உட்கார்ந்து விட்டுத் திரும்பவும் படுக்க முடியுமா என்று பாருங்கள்.
இரவு நேரத்தில் கண்களை அகலமாக வைத்துக்கொண்டு விழித்திருந்து சுற்றிலும் கவனம் செலுத்துங்கள். மின்விசிறி ஓடும்போது ஏற்படுத்தும் சத்தத்தையும், பக்கத்தில் படுத்திருப்பவரின் கொறட்டை ஒலியையும் ரசிக்கலாம்.

இரவு நேரத்தில் தூக்கம் வராத சமயத்தில் கண்டபடி யோசனை செய்யாதீர்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால், ராமா ராமா என்று ஜபித்துக் கொண்டிருங்கள்.

இதோ எனக்கு இப்போது தூக்கம் வருகிறது. பிறகு சந்திப்போம்.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 22 ஆகஸ்ட் 2021-ல் வெளிவந்தது)

Comments