Skip to main content

சில குறிப்புகள்....

 11.08.2021


அழகியசிங்கர்






சமீபத்தில் சிறுபத்திரிக்கைகள் பற்றி ஒரு கூட்டத்திற்குத் தயாராக இருந்தேன். என் கையில் மணிக்கொடி காலம் என்ற பி.எஸ் ராமையாவின் புத்தகம் இருந்தது. அதை எடுத்துப் படித்து சில குறிப்புகள் எடுத்தேன்.

அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. ஆனால் அற்புதமான புத்தகம். புத்தகத்தில் உள்ளக் குறிப்புகள் இதோ:

- பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில்தான் தமிழில் நடை, பொருள், அமைப்பு ஆகியவற்றில் புதுயுக இலக்கியம் தோன்றியது.

- வேதநாயகம் பிள்ளை, ராஜம் அய்யர், மாதவ அய்யர் மூவரும் தமிழ் இயக்கத்தை உலக இலக்கிய உருவ ஒற்றுமை இயக்கத்துடன் இணைத்து வைத்த முன்னோடிகள் என்று சொல்வது பொருந்தும்.

- இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி காலத்தில் தமிழில் ஆங்கிலத்திலிருந்து மறந்த துப்பறியும் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டும், உள்ளூர் ஆடை மாற்றம் மட்டும் செய்விக்கப்பட்டும், தழுவியும் ஏராளமாக வெளிவந்தன.

அந்தப் பொழுதில்தான் பாரதியார் கவிதை அமைப்பில் புதிய வடிவங்களையும் தோற்றுவித்தார்.

- அதே நேரத்தில் வ.வே.சு அய்யர் மற்ற நாடுகளில் பரவி வளர்ந்து கொண்டிருந்த சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைத் தொட்டுக் காட்டித் தமிழில் புதிய இலக்கியம் பெருகி வளருவதற்குச் சிறுகதை வடிவம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் விளக்கினார்.

- சுதேசமித்திரன் பத்திரிகையில் புதிய வடிவ எழுத்துக்கு புதிய வடிக எழுத்துக்கு இடம் கிடைத்தது.
- 1932-33 ம் ஆண்டுகளில் சென்னையில் மேல் நாட்டு இலக்கியங்களையும் சுவைத்து, பழைய இலக்கியங்களிலும் திளைத்த சிலர் கூடி இருவகைச் சுவைகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் ஒரு வட்டம் தோன்றிச் சிறிது சிறிதாக விரிவடைந்து கொண்டிருந்தது.

1933ல் ஆனந்தவிகடன் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த முன் வந்தது. போட்டியின் விளைவாக அரசியலுக்காகப் பத்திரிகை படித்தவர்கள் கவனம் இலக்கியத் துறையின் புறம் திரும்பியது.

- 1933ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த வட்டத்தினரின் முயற்சியாகச் சென்னையில் தமிழ் அன்பர் மாநாடு நடந்தது. மாநாட்டில் உ.வே.சாமிநாத அய்யர், திருவிக, வையாபுரிப்பிள்ளை முதலியவர்களும் கலந்து கொண்டார்கள்.

- இந்தக் காலத்தில்தான் மணிக்கொடி பத்திரிகை தொடங்கியது.

- 75 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விவேக சிந்தாமணி என்று ஒரு தமிழ் மாதப் பத்திரிகை நடந்து சொண்டிருந்தது. அதில்தான் பி ஆர் ராஜம் அய்யர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைத் தொடர்கதையாக எழுதினார்.

- ஸண்டே அப்சர்வார் என்ற பத்திரிகை உலக முழுவதுமிலிருந்த தந்திச் செய்திகள் யாவும் இருக்கும். அதோடு, கலை, இலக்கியம் போன்ற சிறப்புப் பகுதிகளும் இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்திப் பத்திரிகையாகவும் கட்டுரைகள், கதைகள், வாழ்க்கைப் போக்குகள், சிந்தனையாளர்களின் கருத்துக்கள் யாவும் கொண்ட ஒரு வார இதழாகவும் இருந்தது.

- மணிக்கொடி பத்திரிகை அந்த நேரத்தில் தமிழ்ப் பத்திரிகைகளைப் படிக்கும் எல்லா மக்களுக்கும் சுவைக்காது என்பது அதைத் தொடங்கியிருப்பவர்களுக்கும் தெரியும். மணிக்கொடி தரத்தைச் சுவைத்து வரவேற்பவர்கள் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம்
இருப்பார்கள் என்று எதிர்பார்த்ததன் அது தொடங்கப்பட்டது. பன்னிரண்டு இதழ்கள் வெளிவந்த பிறகும் அந்தத் தரத்து வாசகர்கள் ஒரு ஆயிரம் பேர்கள்கூட கிடைக்கவில்லை என்ற நிலைமைதான் இருந்தது.

- அரசின் ஆதரவில் நடந்த சென்னை நூலகம் அசோஸியேஷன் என்ற புத்தகாலயச் சங்கத்தின் முந்நூற்றைம்பது உறுப்பினர்களுக்கும் மணிக்கொடி இதழ்கள் இலவசமாக அனுப்பப்பட்டன.

ஒரே ஒருவர்தான் மணிக்கொடிக்கு ஒரு வருடச் சந்தா அனுப்பி ஆதரவு காட்டினார். நமது உலகறிந்த விஞ்ஞான மேதை சர் ஸிவி ராமன் அவர்களின் மனைவியர் திருமதி லோககூந்தரி ராமன்தான் ஆதரவளித்த அந்த ஒரே ஒருவர்.

- விற்பனையாளர்கள் பத்திரிகை உருவத்தை மாற்ற வேண்டுமென்றார்கள்.

உண்மையில் பத்திரிகை உருவத்தை மாற்றினார்கள். அதனால் விற்பனை கூடவில்லை என்பது உண்மை.



Comments