அழகியசிங்கர் இது என் 22வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு மேல் முடிந்து விட்டது. எல்லாம் சரி இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு என்று தெரியாமலிருந்தேன். சமீப காலத்தில் அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஏன்? நானும் அவளும் ஒரே கல்லூரியில் படித்தாலும் எனக்கு முன்னாலேயே அவளுக்கு வேலை கிடைத்து விட்டது. அதன்பின்தான் எனக்கும் கிடைத்தது. நானும் அவளும் கல்லூரி காலத்திலிருந்து ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். இருவரும் மேற்கு மாம்பலத்தில் பக்கத்துப் பக்கத்துத் தெருவிலே குடியிருக்கிறோம். இரண்டுபேர் குடும்பமும் சாதாரண குடும்பம். வாடகை வீடுகளில்தான் வாசம். கடந்த சில மாதங்களாக அவள் என்னுடன் பழகும்போது அலட்சியம் காட்டுவதுபோல் தோன்றுகிறது. இதை நேரிடையாக அவளிடம் போட்டு உடைத்து விடலாம். ஆனால் அதெல்லாம் சரி வராது. நான் இந்த விஷயத்தில் அவளுடைய உரிமையை முக்கியமாகக் கருதுகிறேன். ஒருவர் யாருடன் பேச வேண...