Skip to main content

துளி - 85- வீட்டில் காலியாக இருக்கின்றன நாற்காலிகள்


அழகியசிங்கர்





புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வரும் என்னுடைய 3வது புத்தகம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக குமுதம் தீராநதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஐந்தாண்டுகளுக்கு முன் அம்ருதா  பத்திரிகையில் எதையாவது சொல்லட்டுமா என்ற தலைப்பில் கடைசிப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் போன ஆண்டு எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.
இத் தொகுப்பு தீராநதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தொடர்ந்து ஒரு பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் கட்டுரை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  புதுசு புதுசாக கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.  சொன்னதையே சொல்லக் கூடாது. இந்த ஆபத்து நம்மை அறியாமல் ஏற்பட்டு விடும்.
நான் சமாளித்துக்கொண்டு 15 மாதங்கள் கட்டுரைகள் எழுதினேன்.  ரா.கி டைம்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். ரா.கி ரங்கராஜன் அண்ணாநகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் அதைப் படிக்க முடிந்ததால் அவர் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.  
இதில் பெரும்பாலான கட்டுரைகள் எல்லாம் படித்த புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதப்பட்டவை.  ஒருவர் இதை வாசிக்க ஆரம்பித்தால் விறு விறு என்று வாசித்து விடலாம்.
முடியாத யாத்திரையா முடிந்த யாத்திரையா என்ற கட்டுரை எழுதி அனுப்பியபோது ரொம்ப நாட்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  இது மாதிரி எழுதியது சரியா என்றுதான்.  அப்படி சில சந்தேகங்களும் வந்து விடும்.  எழுத்தாளர் நண்பர் காசியபனின் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்திருந்தேன்.  அந்தப் புத்தகம் பெயர் முடியாத யாத்திரை.   அவர கவிதைத் தொகுப்பு இன்னும் விற்றுத் தீரவில்லை.  ஆனால் அவர் யாத்திரை என்னமோ முடிந்து விட்டது என்று எழுதியிருந்தேன். 
இன்னும் சில விஷயங்களையும் வேடிக்கையாக அந்தக் கட்டுரையில் சேர்த்திருந்தேன்.
திருவனந்தபுரத்தில் காசியபன், நகுலன், ஷண்முக சுப்பையா மூவரும் பலமுறை சந்தித்து கவிதைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.
நகுலனுக்கு பதில் கூறவதாக கவிதையைக் குறித்து கவிதை எழுதி உள்ளார்.
சொல்நயமும் பொருள்நயமும்
நன்றாக வந்துவிட்டால்
சித்திரப் படிமங்கள்
சீராக வீழ்ந்துவிட்டால்
மெத்த நல்ல கவிதையென்று
முரசு அடிக்கின்றீர்...

முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியை நான் டிசம்பர் 2012ல் கொண்டு வந்துள்ளேன்.  மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்தேன்.  இதே 2017 என்று இருந்தால் 32 பிரதிகள்தான் அடித்திருப்பேன்.  இந்த 300 பிரதிகள் கொஞ்சங்கூட என்னால் விற்க முடியவில்லை. இன்னும் இந்தப் பிரதிகள் என்னிடம் உள்ளன.  
என் வீட்டில் இப் புத்தகப் பிரதிகள் வீட்டின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.  அதனால் கீழ்க்கண்டவாறு இப்புத்தகத்தை அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளேன். 
1. பேப்பர் கடையில் எடைக்குப் போடுவது
2. விருட்சம் என்ற பத்திரிகை சந்தாதாரர்களுக்கு இலவசமாக பத்திரிகையுடன் அனுப்பி விடுவது
3. என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.  அங்கு ஒரு முறை சுந்தர காண்டம் என்ற ராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார்கள்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம். அதுமாதிரி காசியபனின் üமுடியாத யாத்திரைý புத்தகத்தையும் வைத்து விடலாம் என்று நினைக்கிறேன்
4. ஒவ்வொரு முறை வரும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்க வருபவரிடம் இலவசமாகக் கொடுத்து விடலாம்
5. புத்தகம் விலை ரூ.60.  புத்தகத்திற்காக ரூ. 10 அனுப்புங்கள் புத்தகம் அனுப்புகிறேன் என்று அனுப்பி விடலாம்.
காசியபனின் கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி தன் யாத்திரையைத் தொடங்காமல் இருக்கிறது.  ஆனால் காசியபன் என்ற மகத்தான எழுத்தாளரின் யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது. 
                                                                                               20.08.2017

Comments