அழகியசிங்கர் தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பின் கீழ் 24.07.2019 வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழ்வாணனைப் பற்றி கூட்டம். வவேசுவும், லேனா தமிழ்வாணனும். நான் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது (அறுபதுகளில்) எனக்கு கல்கண்டு என்ற பத்திரிகை அறிமுகமாயிற்று. அதன் ஆசிரியர் தமிழ்வாணன். கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்துகொண்டு பத்திரிகையில் போஸ் கொடுப்பவர். துணிவே துணை என்ற தாரக மந்திரத்தை பத்திரிகை மூலம் உச்சரித்துக் கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கிருஷ்ணா குளம் கிரவுண்டில்(சென்னை 1 ல் உள்ளது) பேச வருகிறார் என்று விளம்பரப்படுத்தினார்கள். நான் சிறுவன். எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். தமிழ்வாணன் கூட்டத்திற்குப் போனேன். இப்போது அவர் என்ன பேசினார் என்று ஞாபகமில்லை, எப்படி இருந்தார் என்று ஞாபகமில்லை. ஆனால் அவர் பேசி முடித்தவுடன், அவர் இறங்கி வரும்போது, என் கையில் உள்ள காகிதத்தில் அவருடைய கையெழுத்தை வாங்கியது ஞாபகத்திலிருக்கிறது. இப்போது அந்தத் தாள் இல்லை. என் மாமாதான் கல்கண்டு பத்திரிக...