Skip to main content

விருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை

அழகியசிங்கர்






ஆரம்பத்தில் விருட்சம் இதழில் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் அதிகமாக வரும்.  பலர் பல மொழிகளிலிருந்து மொழிப்பெயர்த்து விருட்சத்திற்கு அளித்துள்ளார்கள்.
ü முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பேயி கவிதைகளை சௌரி அவர்கள் ஹிந்தியிலிருந்து  நேரிடையாக மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார்.  அதுவரை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவிதைகள் எழுதுவார்கள் என்பதை நான் நம்பாமல் இருந்தேன்.
வாஜ்பேயி கவிதையைப் படித்ததும் அசந்து விட்டேன்  அக் கவிதையை நான் திரும்பவும் இங்கு அளிக்க விரும்புகிறேன்.
'உயரத்தில்" என்ற வாஜ் பேயி இந்தக் கவிதை அக்டோபர்-டிசம்பர் 1991ஆம் ஆண்டு பிரசுரமாகியிருந்தது.  அதை இங்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.



உயரத்தில்

தமிழில் - செளரி

மகோன்னத இமயமலை முகட்டில்
மரம் செடி கொடிகள் வேரூன்றுவதில்லை
சவச் செல்லாபோல் சரிந்து பரவிய
சாவைப்போல் குளிர்ந்தடங்கிய
பனிப்படலம் மட்டும்
படிந்து பரவிக்கிடக்கும்;
அந்த உன்னத உயரம்
நீரைப் பனிக்கட்டியாக்கும்
நிமிர்ந்து நோக்குபவர் உள்ளம் குறுகும்
பயபக்தியுடன் பணிவு கொள்ள
உரிமையுடன் உத்தரவிடும்.

மலையேறிகளை வரவேற்கும்
தன் மீது கொடிக்கம்பம் நாட்டலாம்,
ஒரு குருவிகூட கூடுகட்டாது
களைத்துச் சோர்ந்த யாத்திரிகன்
களைப்பாற. கண்ணயற அங்கு இடமில்லை;

உண்மை இதுதான்
உயர்ந்திருப்பது போதாது.
தனியாக விலகி எழும்பி
சூனியத்தில் நிமிர்ந்துயர்ந்து
தம்மவர்களையும் தவிர்த்து
ஒதுங்கி உன்னதமாய் நிற்பதில்
மன்னும் மாமலைக்குப் பெருமையில்லை
பலவீனம், வலுக்கட்டாயம்,
பிரிந்து விலகிப் போனதும் இங்குதான்;

உயர்ந்து வளர்ந்து
காலடியில் புல் பூண்டு படாமல்
 கல்லும் முள்ளும் தைக்காமல்
 சிறுமலரும் முகிழ்த்து மலராமல்
இள-முது வேனில்களும் இலையுதிர் பருவமும்
காணாமல் தனித்து நிற்பானேன்?

உயர் உயர் ஒருவன்
தனியனாகிறான்
சுமைகளைத் தானே சுமக்கிறான்
போலிப் புன்னகை புலர்த்தி
மனத்துள் புலம்பி அழுகிறான்;

உயரத்துடன் பரப்பும் விரிவும்
கூடிக்குலாவ வேண்டும்
மனிதன் தனித்து, தவித்து
'மரக்கொம்பாய் வாழவேண்டாம்
பிறருடன் கூடி வாழ்ந்து
பிறரோடு இணைந்து செயல் பட்டு
பலரையும் உடனழைத்துச் சென்று
உள்ளத்தால் உயர்ந்து
உணர்வில் பரந்து
உயரத்தில் நிமிர்ந்து வாழட்டும்.

[ அடல் பிஹாரி வாஜ்பேயி சிறந்த கவிஞர், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர். ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர். 'ராஷ்டிரா தர்ம' என்றும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தவர். தலைசிறந்த பேச்சாளர். இதுவரை இரு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள் ளன).

Comments