Skip to main content

திருக்குறள் சிந்தனை 26


அழகியசிங்கர் 



சில தினங்களாக திரும்பவும் திருக்குறளைப் படிக்க மறந்து விட்டேன். இன்று ஞாபகம் வந்தது.  விருட்சம் நூலகத்தில் இருந்தபோது (நான் மட்டும்தான் நூலகத்தைப் பயன்படுத்துகிறேன்) என் கண்ணில் ஒரு புத்தகம் தட்டுப்பட்டது. ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் என்ற புத்தகம்.  முனைவர் யு ஜெயபாரதி, முனைவர் ந தேவி, திருமதி சுபாஷிணி தயாரித்தப் புத்தகம்.

என்னடா இது என்று தோன்றியது.  ஏற்கனவே எளிய வடிவில் திருக்குறள் இருக்கிறது.  அதையும் தாண்டி இன்னும் எளிய வடிவில் ஒரு புத்தகமா?  

சரி நான் பேசப்போகிற குறளுக்கு ஐக்கூ வடிவில் திருக்குறள் எப்படி இருக்கிறது என்று புரட்டிப் பார்த்தேன். 


அரிய செயல்
செய்பவர் -
பெரியோர்!

அவ்வளவுதான்.  ரொம்ப சுலபமாக ஐக்கூ எழுதி விட்டார்கள்.  ஆனால் குறள் இப்படி இருக்கிறது.

செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பலராலும் செய்வதற்கு அரியனவாகும் செயல்களைச் செய்பவர் பெரியார் என்றும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் இக் குறள் கூறுகிறது.  இதை இன்னும் குறுகலாக ஐக்கூ வடிவில் கவிதை அமைக்கப் பட்டுள்ளது.  முதலில் அரிய  செயல் என்றால் என்ன?  எந்த ஒரு செயலும் ஒருவரால் செய்யக் கூடியதாக இல்லை.  பலர் முயற்சி செய்தால்தான் ஒரு செயல் உருவாகும்.  நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும் பூங்காவில் சிலர் சேர்ந்து ஒரு செயலை செய்கிறார்கள்.  பூங்காவில் போடப்பட்டுள்ள குப்பைகளை எல்லாம் திரட்டுகிறார்கள்.  அஙகுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.  இதைச் செயல்படுத்துகிறவர்களை அரியச் செயலை செய்பவர்களாக நான் கருதுகிறேன். 
சரி நவீன கவிதை எதாவது தட்டுப்படுகிறதா என்று பார்ப்போம் என்று யோசித்தபோது நான் எழுதிய கவிதை ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
செயல் என்பதை காரியம் என்று நான் எழுதியிருக்கிறேன்.  1992ல் எழுதிய கவிதை இது.  கவிதையின் தலைப்பு 'பெரிய காரியங்களும்  சிறிய காரியங்களும்.'

சிறு வயதிலிருந்து பெரிய காரியங்கள்
செய்யவேண்டுமென்று நினைப்பதுண்டு
பெரிய காரியங்கள் எதுவென்று தீர்மானிப்பதற்குள்
ஆண்டுகள் ஓடின பல
தீர்மானித்த காரியங்கள் பெரிய காரியங்களாக
இருந்ததால்
நிறைவேற்றுவது எப்படியென்று யோசித்தேன்
இன்னும் சில ஆண்டுகள் ஓடின
காரியத்தை நினைத்துக்கொண்டு
காரியம் சித்தியாவதற்குள் வயதும் ஓடின
இனி ஓடி ஆடி எதுவும் செய்யமுடியாது என்றும் பட்டது
பெரிய காரியங்களைச் செய்த துணிந்ததால்
தடைகளும் கூடி வருகின்றன
பெரிய காரியம் ஒன்றும் வேண்டாமென்ற நிலைக்குத்
தள்ளப்பட்டேன் 
இப்போதோ சிறிய காரியங்களே போதும்
அதுவே பெரிய காரியங்களாகப் பயமுறுத்துகின்றன


Comments