Skip to main content

புத்தக விமர்சனம் 16

அழகியசிங்கர்

சுருதி என்கிற நகுலனின் கவிதைத் தொகுதி ஏனோ என் புத்தகக் குவியலில் கண்ணில் பட்டது.  எடுத்து வைத்துக் கொண்டேன்.  தாரணி பதிப்பகமாக இப் புத்தகம் 1987ஆம் ஆண்டு வந்துள்ளது.  அப்போது இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 10/-.  உடனே இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  மொத்தம் 42 பக்கங்கள். 
ஆரம்பத்திலிருந்து நகுலனின் என்ற எழுத்துகளின் வாசகன் நான். தொடர்ந்து நகுலன் நாவல்களைப் படித்து வந்தால், ஒருவித குழப்பம் ஏற்படும். எல்லா நாவல்களிலும் ஒருவிதத் தொடர்ச்சி இருப்பதுபோல் படும்.  அவருடைய எழுத்து எளிமையான எழுத்து.  நினைவோடை தன்மை கொண்ட எழுத்து.  அவருடைய படைப்புகளைப் படிக்கத் தொடங்கும்போது நம்மிடம் நகுலன் நேரிடையாகவே பேசுவதுபோல் தோன்றும்.  நகுலன் எழுத்தில் காணப்படும் குழப்பம் அல்லது படிப்பவர்களுக்கு ஏற்படும் மன சஞ்சலம் அசோகமித்திரன் எழுத்தில் காணப்படுவதில்லை.  அசோகமித்திரன் எல்லாவற்றையும் தெளிவாக சொல்ல வல்லவர்.  
சுருதி என்ற இக் கவிதைத் தொகுதியைப் படிக்கும் போது, திரும்பவும் இன்னொரு முறை இன்னொரு முறை என்று படிக்கத் தூண்டுகிறது. பத்திரமாக இப் புத்தகத்தை வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.
இக் கவிதைத் தொகுதி பற்றி...பின்னால் நகுலன் எழுதியிருக்கிறார்.  இந்தத் தொகுதியில் மொத்தம் 36 கவிதைகள்.  நகுலன் இப்படி எழுதுகிறார் :
'சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாக கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன்,' என்று எழுதுகிறார்.
பொதுவாக நகுலன் புத்தகத்தை யாரும் வாங்கிப் படிக்க மாட்டார்கள்.  இதைக் குறித்து அவர் பேசும்போது üஎன் புததகத்தை 50 பிரதிகள் அடியுங்கள்.  50 பேர்கள் தான் இருப்பார்கள் படிக்க.  அவர்களிடம் கொடுத்து விடுங்கள்,ýý  என்பார்.
நகுலனின் கவிதைகளை வாசிப்பவர்கள் தரமான வாசகர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இத் தொகுதியைப் பற்றி பேசும்போது, வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்வார்கள் என்கிறார்.
உண்மைதான் நகுலனைப் படிக்க அலாதியான மனநிலை வேண்டும்.  
மேலும் அவர் கவிதைகளைப் படிக்கும்போது எளிமையான அனுபவம் நமக்குக் கிட்டினாலும், நம்மை அவருடைய வரிகள் திரும்ப திரும்ப யோசிக்க வைக்கும்.
உதாரணமாக,
தேடல் என்ற தலைப்பிட்ட கவிதையைப் படிக்கவும்.

எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று 
எதை எதையோ
திறந்துகொண்டே 
இருக்கிறார்கள்.

மிகச் சில வரிகளைக் கொண்ட இக் கவிதை, படிக்க சுலபமாக இருப்பதோடல்லாமல், நம் மனதை விட்டு இக் கவிதை அவ்வளவு எளிதாக போக விரும்புவதில்லை.  இக் கவிதையை நாம் படித்தது ஒரு முறை என்றாலும் திரும்ப திரும்ப நம்மை யோசிக்க வைக்கிறது ஏன்? 
நகுலன் அவர் கவிதைகளை மனதிலிருந்து எழுதுகிறார்.  புறவயமான தன்மையைக் கூட அகவயமான பார்பையுடன் பார்க்கிறார். அதனால்தான் அவர் கவிதைகளை ஒரு முறை நாம் படித்தாலும் பலமுறை நம்மை யோசிக்க வைக்கிறது.  
குழப்பம் என்ற இன்னொரு கவிதையைப் படியுங்கள்.

பார்த்துக்கொண்டே
நின்றேன்
மண்டை உடையாமலிருக்க
விநாயகர் சிலை முன்
ஒரு தேங்காய்
உடைந்தது
யாருடைய குரூரம
அல்லது நகைச்சுவை 
என்று 
மனம் குழம்பினேன்.

ஏன் இப்படி கூறுகிறார்?  தேங்காயை உடைப்பது பக்தி பெருக்கால் என்று சொல்லாமல் யாருடைய குரூரம் அல்லது நகைச் சுவை என்று ஏன் கூறுகிறார்.  இதுதான் நகுலன்.  படிப்பவரை பலவிதமாக யோசிக்க வைக்கிறார்.  இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்று தூண்டுகிறார்.

சுருதி என்கிற கவிதையில்,

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா 
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

இவ்வளவு சொன்ன நகுலன், ஏன் சாவிலும் ஒரு சுகம் உண்டு என்கிறார். ஏன் அப்படி சொல்கிறார்?  இதுதான் நகுலன்.  வாசகனை யோசிக்க வைக்கிறார்.  மேலும் இவர் கவிதைகள் எல்லாம் மரணத்தைச் சுற்றி சுற்றி வருகிறது.  அதனால்தான் இவர் கவிதைகள் வசீகரமாகத் தோன்றுகின்றனவோ என்று நினைக்க வைக்கிறது.

இன்னொரு விஷயமும் இவரிடம் உண்டு.  இவர் கவிதைகளை வாசிக்கும் சிலர் இதெல்லாம் கவிதையா என்று கூட சொல்லக்கூடும்.
நான் என்ற கவிதை
நான்
சரி
நான் மாத்திரம்
சரியே சரி.

ஆனால் நான் அவர் கவிதைகளைப் படிக்கும்போது,  அதில்தான் பல அர்த்தங்களைக் கொண்ட தளங்களை உருவாக்குவதுபோல் தோன்றும்.  
உண்மையில் அவர் கவிதைகளைப் படிக்கும் நானும் சரி, நீங்களும் சரி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சுருதி - கவிதைகள் - நகுலன் - முதல் பதிப்பு - 1987 - மொத்தப் பக்கங்கள் : 42 - விலை ரு.10 - தாரணி பதிப்பகம்- ட்டி எம் நந்தலாலா, 476 கேசவலு நகர், கள்ளக்குறிச்சி 606 202
  


Comments