Skip to main content

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்



ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி



ஐராவதம்


என் இடம், உன் இடம், நோக்ஷல்பாரி
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா
இன்னும் ஒருநாள் என் வசமில்லை
சோறும் குழம்பும் ஆக்குவதற்குப்
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா

வேலையற்று வெறித்து நோக்கு.
நகரத் தெருக்களில் பிரமாதங்கள்
விரைந்து போகும் ; விரைந்து வரும்

உன்னுடைய பட்டினி
குழிந்த
உன் தலையினுள் இன்னும் தொடரும்.

உன்னுடைய இதயத்தின்
இடையறா ஓசை
ஓயத் தொடங்கும்.
உன்னுடைய சாமான்
சலித்துத் தொங்கும்

அசைவற்று, பசியுடன்
அழுக்காய் இருக்கும் நீ
பிறப்பு என்ற, சாவு என்ற
இரு பெரும் எல்லைகளை
மீறத் துணிந்தாய்.
உன்னுடைய சட்டைப் பையில்
காகிதத் துண்டுகள்,
ஆணிகள்,
தீப் பெட்டி.
சிலுவையில் அறையவோ?
சிதையில் வைக்கவோ?

ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி


Comments