அழகியசிங்கர் ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயகாந்தன் சிறுகதை வெளியீடு கூட்டத்திற்கு சென்றேன். இதற்கு முன் ஜெயகாந்தன் என்ற பெயரையே மறந்து விட்டேன். சமீப காலத்தில் யாரும் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் பெயரை யாரும் உச்சரிப்பதில்லை. அவர் மீது யாருக்கும் எந்தக் கோபமும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் எழுதுவதை நிறுத்தி விட்டார். பத்திரிகைகளில் கூட அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வருவதில்லை. ஒருமுறை அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரைப் பற்றி பேச்சு வந்தது. அவர் நலமாக வீடு வந்து சேர்ந்துவிட்டார் என்ற செய்தியுடன் அவரைப் பற்றி பேச்சு நின்று விட்டது. அவர் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டார். சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிக் குவித்தவர். அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய பெரிய பத்திரிகைகள் காத்துக்கொண்டிருந்தன. குறிப்பாக விகடன் அவர் எழுத்தை பிரசுரம் செய்ய காத்துக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் தமிழ் எழுத்தாளர்களிடையே ...