அழகியசிங்கர்
என் நண்பர் ஒருவர், 'யாருக்கு உங்கள் ஓட்டு?' என்று கேட்டார். அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஓட்டுப் போய் போட வேண்டும் என்பது. நான் யாருக்கு ஓட்டுப் போடுவேன் என்பதையே நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு இந்த அரசியல் போரடித்து விட்டது. இவ்வளவு பெரிய நாட்டை ஏதோ ஒரு கட்சி ஆளப் போகிறது. அது எளிதான விஷயம் அல்ல. ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மக்களும் மாற்றி மாற்றித்தான் ஆட்சியைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த நாட்டின் பிரச்சினை அவ்வளவு எளிதில் தீர்ந்து விடாது.
ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் மோடிக்குத்தான் என் ஆதரவு என்று கூறியது. பெரிய பிரச்சினையாகி அவருடைய நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிவர வேண்டியது நின்று விட்டது. தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரின் கருத்தை வெளியிடுவது கூட தவறாகப் படுகிறது. உண்மையில் ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் சொல்வதால்தான் அப்படி ஆகிவிட்டது. அதையே வேறு எதாவது எழுத்தாளர் சொன்னால் அது ஒரு விஷயமாகவே மாறிவிடாது.
நல்லகாலம் சாகித்திய அக்காதெமி பரிசு வாங்கும் சமயத்தில்
ஜோ டி குரூஸ் இந்தக் கருத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். அப்போது சொல்லியிருந்தால் அவருக்கு அந்தப் பரிசும் கிடைக்காமல் கூட போயிருக்கும்.
எனக்கு இப்போதுதான் ஞாபகம் வருகிறது. இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்கு ஆதரவு கொடுத்து நாவலாசிரியர் நா பார்த்தசாரதி பேசியது. அந்த சமயத்தில் அவர் தப்பிப்பதற்கான வழியாக அது இருந்திருக்கும்.
சமீபத்தில் ஒரு நடுத்தரப் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினேன். பாதி பத்திரிகை முழுவதும் மோடியை எதிர்த்து பலவிதமான கட்டுரைகள்.
நடிகர் ரஜினிகாந்தை மோடி போய் சந்திக்கிறார். ஆனால் வெளிப்படையாக அவர் யாரை ஆதரிக்கிறார் என்பதை சொல்லக் கூட முடியாத நிலையில் அவதிப்படுகிறார். அவருடைய கோச்சடையான் படம் கூடிய சீக்கிரத்தில் வெளிவர உள்ளது.
ஜோ டி குரூஸ் ஏன் அவர் உணர்வுகளை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்ள தெரியவில்லை.
Comments