Skip to main content

ஐராவதம்

ஐராவதம் பக்கங்கள்    பிப்ரவரி 4 ஆம்தேதி ஐராவதம் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்துவிட்டார்.  ஆனால் அவர் என்னிடம் அவர் படித்தப் புத்தகங்கள் பற்றி குறிப்புகள், விமர்சனங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.  அவற்றை முடிந்தவரை கொண்டு வருவதுதான் என் நோக்கம்.

    திசை காட்டி என்கிற எஸ் வைதீஸ்வரன் புத்தகம் பற்றி 22.06.2013 அன்று ஐராவதம் எழுதியதை இங்கே அப்படியே பிரசுரம் செய்கிறேன்.

(திசை காட்டி - கட்டுரைகள் - எஸ் வைதீஸ்வரன் - நிவேதிதா புத்தகப் பூங்கா - விலை ரூ.75)

    பிரெஞ்சுக்கவிஞர் 'சார்லஸ் போதலர்' முழு நேரக் கவிஞராக தன்னைக் காட்டிக் கொண்டவர்.  ஒரேயொரு உரைநடை நூல் எழுதினார். ஜெர்மன் கவிஞர் 'ரெயின் மேரி ரில்கே' இவரும் ஒரே ஒரு உரைநடை நூல் எழுதினார்.  அந்த வகையில் எஸ் வைதீஸ்வரனின் 'திசை காட்டியை'க் குறிப்பிடலாம் என்றால் ஒரு விஷயம் உதைக்கிறது.  இவர் இதற்கு முன்னமே 'கால் முளைத்த மனம்' என்ற தலைப்பில் விருட்சம் வெளியீடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார்.  அந்த நூல் முதல் பதிப்பு விற்று இரண்டாம் பதிப்பாக கிழக்குப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

    திசை காட்டிக்கு முன்னுரை எழுதியுள்ள இந்திராபார்த்தசாரதி, 'இத் தொகுப்பில் கட்டுரை இருக்கிறது.  கவிதை இருக்கிறது.  கதை இருக்கிறது.  தன்வயப்பார்வையாக விமர்சனம் இருக்கிறது,' என்று அடுக்கிக்கொண்டு போகிறார்.  ஆனால் நூலின் பதிப்பாளர்களோ இந்த நூலை கட்டுரைகள் என்ற வகையில்தான் சேர்த்துள்ளார்கள்.  இந்திரா பார்த்தசாரதி என்ற யானைக்கும் அடி சறுக்கியிருக்கிறது.  ஆலிவர் கோல்ட்ஸ்மித், சார்லஸ் லாம்ப் பதினெட்டு பத்தொன்பது நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டும் இவர் ஜி கே செஸ்டர்டனையும் (இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) அந்த வரிசையில் சேர்த்துள்ளார்.

    'ஒரு கொத்துப்புல்' (பக்.43), 'மரத்தில் வாழ்ந்தவன்' (பக் 50) இரண்டும் சிறுகதைகள்.  கால் முளைத்த மனம் மூன்றாம் பதிப்பில் ஆசிரியர் இவற்றை தைரியமாக சேர்க்கலாம்.

    ஸஹாரா பாலைவனம் பற்றி ஐந்து பக்கக் கட்டுரை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி நிறையவே சிந்திக்கிறவர் இவர்.  முன்னரே தீபம் பத்திரிகையில் (மலைகள் என்ற தலைப்பில் என்று நினைக்கிறேன்) பல்லாவரம் திரிசூலம் மலைகள் பெயர்க்கப்பட்டடு கல்லுடைப்பதைப் பற்றி அருமையான கதை ஒன்றை எழுதியிருக்கிறார்.  இது கால் முளைத்த மனம் தொகுப்பில் வெளியாகி உள்ளது.  நான் இந்தக் கதையை என் நண்பரும் தெலுங்கு எழுத்தாளருமான சிரஞ்சீவி என்பவரிடம் கொடுத்து தெலுங்கில் மொழி பெயர்க்கச் செய்தேன்.  அவர் அந்த கதையை தெலுங்கில் மொழி பெயர்த்து தெலுங்கு பத்திரிகை ஒன்றில் பிரசுரம் செய்தார். 

    ஞானத் தேநீர் என்ற கவிதை (பக்கம் 76-78) என்னை வெகுவாகக் கவர்ந்தது.
        அவளுள் ஊறும்
        பிரியமோ
        மலர்ந்து பரவும்
        மனோரஞ்சிதம்.

        காமம் காலத்தின்
        மாயப்பூச்சழிந்து
        கருணை பரவுகிறது
        காதலாக...

    இந்த வரிகள் நினைவில் நிற்கக் கூடிய வரிகள்.  ஹைக்கூ பற்றிய குறிப்புகள், ELIE WIESEL,  Katznelson,   Arnost lustig   போன்ற யூத எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் இணையத் தளத்திலிருந்து டௌன்லோட் செய்யப்பட்டவைதானே என்று சிலர் கிண்டல் அடிக்கக் கூடும்.  ஆனால் தமிழ் வாசகனுக்கு தேவையான விஷயங்களே.

    மரணம் ஒரு கற்பிதம் என்ற கட்டுரையில் கடைசியில் ஒரு கவிதை.:

        மரத்தை விட்டுப்பிரிந்தது
        மலர்கள்
        மண்ணில் மெத்தென்று விழுகின்றன
        சாவிலிருந்து துக்கத்தை
        சத்தமில்லாமல் பிரித்தவாறு.

    விட்டுப் பிரிந்து என்ற வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன்.  மலர்கள் தன்னிட்சையாக தீர்மானம் போட்டா கீழே விழுகின்றன?  காற்று சலசலக்கிறது. மலர்காம்பு நெகிழ்ந்து மரத்திலிருந்து கீழே விழுகிறது.  அது எப்படி மலருக்கு சாவாகும்?  யார் கால்பட்டும் கசங்காமல் மண்ணில் கிடந்தால் சாலை பூப்பறிக்க வரும் சிறுமி அதைத் தன் பூக்குடலையில் சேர்த்து சாமிக்கு மாலையாக சூட்டலாம்.  மங்கையின் தலையில் பூச்சூடலாம்.

    வ.ரா நினைவுகள் கட்டுரையிலும் எனக்கு இரு ஆட்சேபங்கள்.  வ.ரா வைத்தீஸ்வரன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறார்.  அது அவ்வப்போது எனக்குள் ஒரு அற்ப சந்தோஷத்தை ஏற்படுத்துவதுண்டு.  ஏன் இந்த சந்தோஷம் ஆசிரியருக்கு அற்பமாகத் தோன்றுகிறது?  அதைவிட இன்னும் இரண்டு வரிகள்.  ஆனால் பெரியவர்கள் என்னதான் தட்டிக் கொடுத்தாலும் வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்கள் நம் கைகளைத்தான் நம்பி இருக்கின்றன.  இந்த வரிகள் என்னை உசுப்பிவிட்டன.  இரண்டு சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

    வருஷம் 1965.  நான் பட்டப்படிப்பு முடித்து சென்னையில் வேலையாயிருந்தேன்.  இலக்கிய ஆர்வம் உண்டு எனக்கு.  தேவன், த.நா.குமாரஸ்வாமி படித்துக் கொண்டிருந்தவன்.  கல்லூரி நாட்களில் ஆல்டாஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், பெர்னார்ட் ஷா என்று படிக்கத் துவங்கி க.நா,சு, செல்லப்பா வரை வந்துவிட்டேன்.  செல்லப்பாவின் எழுத்து பத்திரிகைப் பற்றி கேள்விப்பட்டு அதற்கு வருடச் சந்தாவாக ஆறு ரூபாயை எடுத்துக்கொண்டு தியாகராய நகரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு பதின் மூன்றாம் நம்பர் பஸ்ஸில் ஏறி பிள்ளையார் கோயில் தெரு முதல்மாடிக்கு வந்துவிட்டேன்.  என்னுடன் நண்பன் ஒருவனும் வந்தான்.  இவன் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவன்.  கல்கி, லட்சுமி படித்துக்கொண்டிருந்தவன் லா.ச.ரா, தி ஜானகிராமன் படிக்கிற அளவிற்கு முன்னேறியிருந்தான்.  இவன் எழுத்து பத்திரிகைக்கு நான் சந்தா தரப்போகிறேன் என்று தெரிந்ததும் எழுத்து பத்திரிகையில் புகுத்திவிடலாம் என்ற அசட்டு தைரியத்தில் ஒரு ஆறுவரிக் கவிதை (கருத்து சிதறல்) தயார் பண்ணி சட்டைப் பையில் தயாராக வைத்திருந்தான்.  நான் படைப்பு எதுவும் படைக்கவில்லை.  எழுத்துக்கு  சந்தா செலுத்துவதே என் நோக்கம்.

    அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணி இருக்கும். சிசு செல்லப்பா காலையில் விளக்கெண்ணை சாப்பிட்டிருந்தார்.  எங்களை தரையில்தான் உட்கார வைத்தார்.  தானும் தரையில் எதிரே அமர்ந்தார். காலையில் விளக்கெண்ணை சாப்பிடுகிறவர்கள் பகல் ஒரு மணி வரை ஆகாரம் எதுவும் உட்கொள்ள மாட்டார்கள்.  நாலைந்து முறை பாத்ரூம் போய் வருவார்கள்.   வயிறு காலியானதும், பருப்புத் துவையல், மிளகுரசம், இட்டு சாதம் சாப்பிடுவார்கள்.  செல்லப்பா என்னிடம் சந்தாவைப் பெற்றுக்கொண்டு உற்சாகமாகவே பேசினார்.  ஒரு தருணத்தில் என் நண்பன் அவன் கவிதையை நீட்டினான்.  அவர் அதைப் படித்துப் பார்க்க முற்படவில்லை.  பக்கத்தில் காகிதங்களோடு வைத்தார். 

    திடீரென்று எழுந்து தலைக்குப் பின்னாலிருந்த அலமாரியிலிருந்து பிரெஞ்சு நாவலாசிரியர் மார்வெல் ப்ரூஸ்ட் நாவலிலிருந்து ஓரிரண்டு பத்திகள் படித்தார்.  பிறகு அமெரிக்க நூலகத்திலிருந்து வாங்கி வந்திருந்த ஹென்றி ஜேம்ஸ் விமர்சனக் கட்டுரையை உரக்கப் படித்தார்.  இதுபோல் எல்லாம் தமிழில் எழுத வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.  நாங்கள் விடைபெற்று போகும்போது கவனமாக என் நண்பன் கொடுத்த கவிதை காகிதத்தை அவன் கையில் திணித்தார்.  என் நண்பனுக்கு அவமானம்தான்.  வெளியே வந்த நான் சமாதானமாக ஒரு வார்த்தை சொன்னேன்.  'நண்பனே நீயும் உன் சந்தாவாக ஒரு ஆறு ரூபாயைக் கொடுத்து இந்தக் கவிதையைக் கொடுத்திருந்தால் அது அச்சேறியிருக்கும்.'

    காலச்சக்கரம் சுழல்கிறது.  வருடம் 1975.  என் தம்பியும், அவன் நண்பர்களுமாக பிரஞ்ஞை என்ற பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள்.  கசடதபற, நடை, இதன் முன்னோடிகள்.  என் தம்பி கல்கத்தாவிலிருந்தான்.  பிரக்ஞை நண்பர்கள் என்னை விட ஐந்து ஆறு வயது இளையவர்கள்.  சுயலாபமோ, சுய நோக்கமோ அற்றவர்கள்.  ஆனால் இவர்களைப் பற்றி என் சக எழுத்தாளர் ஒருவர்அப்பொழுது சொன்ன வார்த்தைகள் இப்பொழுதும் என் நெஞ்சை உறுத்துகின்றன.  அவர் திமுக அனுதாபி.  பிரமாணத் துவேஷி. பிரக்ஞை நண்பர்கள் பெரும்பாலும் பிராமண இளைஞர்கள்.  அவர் சொன்னார் : 'இவன் எல்லாம் படித்து பாஸ் பண்ணிவிட்டு நல்ல உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.  குடி, குட்டி, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்ற வழிகளில் பணம் செலவழிக்க பயப்படுகிறவர்கள்.  இலக்கியம் பண்ணுகிறார்களாம்.  இலக்கியம்,' அந்த வார்த்தையின் அர்த்தம், ஆழம், விஷம், வீர்யம் இப்பொழுதும் எனக்கு உறுத்துகிறது.

    நான் பிரக்ஞை ஆபீஸ் போனேன்.  என் நண்பன் உடன் வந்தான்.  இப்பொழுது என் இலக்கிய அந்தஸ்து உயர்ந்திருந்தது.  நான் கசடதபறவில் பங்கு பெற்றவன்.  தீபம், கணையாழி பத்திரிகைகளில் என் கதைகள் பிரசுரமாகி இருந்தன.  பிரக்ஞை ஆபீஸ் போனபோது நான் சந்தா எடுத்துப் போகவில்லை.  ஆனால் என் நண்பனோ ஏழெட்டு கவிதைகள் (நாலுவரி, ஆறு வரி, எட்டுவரி, பத்து வரிகள்) எழுதி தன் சட்டைப் பையில் வைத்திருந்தான்.  பிரக்ஞை நண்பர்கள் என்னை உபகுருவாக ஏற்றுக்கொண்டார்கள்.  நானும் அவர்களுக்கு அருளாசி வழங்கினேன். 

    என் நண்பன் கவிதைகளை நீட்டினான்.  பிரக்ஞைக்கு ஆசிரியர் என்று ஒரு பெயர் போடப்பட்டிருந்தாலும் அது நாலைந்து பேரின் கூட்டு முயற்சி என்பதால் நண்பனின் கவிதைகளை பிரசுரிப்பீர்களா இல்லையா என்று நாங்கள் கேட்கவில்லை.  அடுத்தடுத்த பிரக்ஞை இதழ்களில் என் நண்பன் கொடுத்த கவிதைகள் அத்தனையும் பிரசுரமாகின.  அவன் உடனே நாற்பத்தெட்டு கவிதைகளோ அறுபத்து நாலு கவிதைகளோ எழுதி அதை அறுபது பக்க நூலாக அச்சிட்டு தமிழ் வாசகர்களை குளிர்விக்கவில்லை.  பிரக்ஞையில் தன் கவிதைகள் வெளிவந்த மகிழ்ச்சியோடு அவன் கவிதைத் தயாரிப்பு முடிவுற்றது.

    இப்பவும் ஜெயமோகன், இரா முருகனை  ரசிக்கிற வாசகனாக அவன் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளான். 

    எஸ் வைதீஸ்வரனின் வ ரா கட்டுரையில் எழுதிய கடைசி வரிகளை நினைவுப் படுத்துகிறேன்.  வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்கள் நம் கைகளைத்தான் நம்பி இருக்கின்றன.  எழுத்து செல்லப்பா தன் கவிதையை நிராகரித்ததால் என் நண்பன் பத்து ஆண்டுகள் கவிதை முயற்சியில் ஈடுபடவில்லை.  பிரக்ஞை அவனுடைய ஏழெட்டுக் கவிதைகளை பிரசுரித்து மகிழ்ந்தும் அவனால் தொடர்ந்து கவிதை முயற்சியில் ஈடுபட முடியவில்லை. 
                                                                                                                                        (22.06.2013)
   
   

Comments

Popular posts from this blog