தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில்
சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல்
மொத்தத்தில் அது ஒரு ஆற்றல்
அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில்.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக
எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக.
தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன
முரட்டுத்தனமும், சுயநலமும்,
நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும்.
நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை?
எதுவும் செய்ய முடியாது.
முடிந்தவரை விலகி இருப்போம்
துஷ்டரை, விஷமிகளை, முட்டாள்களைக் கண்டது போல்.
ஆனால் ஜாக்கிரதை, நம்மிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள
சட்டங்கள் இயற்றியிருக்கிறது மனிதம்
எந்தக் காரணமும் இல்லாமல் அது நம்மைக் கொல்லக் கூடும்
அதனிடமிருந்து தப்பிக்க சூட்சமம் வேண்டும்
தப்பிக்கிறார்கள் வெகு சிலர்
நாம் தப்பிப்பது நம் கையில்
சரியான திட்டம் வேண்டும்
தப்பித்த எவரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை
உயர்ந்த, புகழ்பெற்ற மனிதர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன்
அவர்களாலும் தப்பிக்க முடியவில்லை
மனிதத்துக்கு மட்டுமே அவர்கள்
உயர்ந்தவர்களாய் புகழ் பெற்றவர்களாய் இருக்கிறபடியால்.
என்னாலும் தப்பிக்க முடியவில்லை
ஆனால் மறுபடி மறுபடி முயன்று கொண்டே இருப்பதில்
நான் தோற்றுப் போகவில்லை.
நம்புகிறேன் என் மரணத்துக்கு முன்னால்
அடைந்து விடுவேன் என் வாழ்க்கையை.
**
மூலம்:
What can we do?
by
Charles Bukowski
***
Comments