Skip to main content

சில குறிப்புகள்


    அழகியசிங்கர்

    நேற்று காலையில் வழக்கம்போல் (சமீப காலமாய்) நடை பயிற்சி செய்துவிட்டு ராஜாமணி வீட்டிற்குச் சென்றேன்.  என்னைப் பார்த்தவுடன் ராஜாமணி, üதி.க.சி இறந்துவிட்டார்,ý என்ற செய்தியைச் சொன்னார். 

    எனக்கு தி.க.சியைப் பற்றிய எண்ணம் ஓடிற்று.  காலையில் இந்தச் செய்தியைச் சொன்ன ராஜாமணியிடம் கோபம்.  பின் நான் வீட்டிற்கு வந்து, தினமணியைப் பார்த்தபோது அதில் செய்தி வந்திருந்தது.

    எனக்கு தி.க.சியை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும்.  நவீன விருட்சம் ஆரம்ப காலத்திலிருந்து அவர் என் நண்பர்.  வல்லிக்கண்ணனும், தி.க.சியும் நவீன விருட்சத்திற்குக் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  நான் முதல் தடவை திகசியை அசோக மித்திரன் வீட்டில்தான் சந்தித்தேன். 

    எந்தப் பத்திரிகையும், புத்தகத்தையும் விடாமல் படிப்பார்.  படித்தவுடன் ஒரு கார்டில் அழகான கையெழுத்தில் தன் அபிப்பிராயத்தை எழுதாமல் இருக்க மாட்டார். வல்லிக்கண்ணனும் அப்படித்தான்.

    இருவர் கையெழுத்தும் அழகாக இருக்கும்.  சிறுபத்திரிகையின் நண்பர்கள் இருவரும்.  பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.  எனக்கு அவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபிறகுதான் நிம்மதியாக இருக்கும். ஏனென்றால் நான் அனுப்பிய பத்திரிகை போய் சேர்ந்ததற்கான அறிகுறி அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள்தான்.

    வெங்கட் சாமிநாதன் வல்லிக்கண்ணனை டெச்பேட்ச் க்ளார்க் என்று கிண்டல் செய்திருக்கிறார்.  ஆனால் எனக்கு அப்படித் தோன்றாது.  இன்று ஒருவரைப் பாராட்டுவது என்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயமாகத் தோன்றுவதில்லை.  அதை முழு மூச்சுடன் செய்பவர்கள் தி.க.சியும் வலலிக்கண்ணனும்தான்.

    சென்னையில் நான் குடியிருந்த தெருவில் தி.க.சியும் அவர் புதல்வர் வண்ணதாசன் வீட்டில் தங்கியிருந்தார்.  நான் அவரைப் பார்க்கச் செல்வேன்.  வண்ணதாசனிடம் பேசுவதை விட தி.க.சியிடம் பேசிவிட்டுச் சென்று விடுவேன்.  வண்ணதாசன் நண்பர்களான வண்ணநிலவன். விக்கிரமாதித்யன் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள்.  வண்ணதாசன் அப்படி அல்ல. 

    வண்ணதாசன் வீட்டிற்குச் சென்று திகசியிடம் மட்டும்தான் பேசுவேன்.  என் 94வது இதழ் விருட்சத்திற்குக்கூட அவர் கடிதம் எழுதியிருந்தார். 

    05.08.2013 அன்று நவீன விருட்சம் 93வது இதழைப் படித்துவிட்டு எழுதிய கடிதம்.

    அன்பு நண்பர் அழகியசிங்கர் அவர்களுக்கு,

    வணக்கம்.  நவீன விருட்சம் 93வது இதழ் பார்த்தேன்.  மிக்க நன்றி.  1988 ஜøலையில் தோன்றிய நவீன விருட்சம்.  25ஆம் ஆண்டு நிறைவைத் தாண்டி, 26ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது எனக்குபெரும் மகிழ்வும், மனநிறைவும் தந்துள்ளது.  தங்கள் நவீன இலக்கியத் தொண்டு போற்றத்தக்கது; அது மேன் மேலும் தொடர்வதாக.  என் நெஞ்சம் நிறை நல்வாழ்த்துக்கள்.  தமிழில் தற்காலத் தோரணை - பாரதியின் கவிதை எனும் சி கனகசபாபதியின் கட்டுரையை (மே 1965இல் எழுத்து இதழில் வெளிவந்தது).  இப்போது மீண்டும் படித்தேன்.  இன்று புதுப்பார்வையில் இலக்கிய ரசனையை வளர்க்கும் பணியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

    என்றும் அன்புடன்,
    தி.க.சி.

    அவர் இனி இல்லை என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது. அவரை இழந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
   

Comments

திருநெல்வேலியைச் சார்ந்த பழைய தலைமுறை எழுத்தாளர்களில் இவர்தான் கடைசி என்று நினைக்கிறேன். சிறந்த இலக்கிய விமர்சகர். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக.-இராய.செல்லப்பா, சென்னை.