மக்கானாபேட்டை வருமான வரி அலுவலக பின்புறத்தில் ஒரு குறுக்குச் சந்து உள்ளது. அது, இரண்டு அடுக்கு மாடி ஒன்றில் சென்று முடியும். அதன் ஒரு பகுதி மேன்ஷனாக இயங்கி வந்த காலத்தில் வினயும், மீரானும் எனக்கு அறிமுகமானார்கள். வினய், அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். மீரானுக்கு, வங்கியில் லோன் வாங்கித் தரும் பணி. பழகியிருந்த குறைவான நாட்களிலேயே இயல்பில் வினயுன், மீரானும் இரண்டு எதிர் நிலை மனிதர்கள் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனா, நான் அதில் நடுவன். மீரான் எங்களிருவரை விட வயதில் ஒன்றரை மடங்கு மூத்தவந்தான் என்றாலும், "அண்ணன்-னு எல்லாம் சொல்லாதே, பேர் சொல்லியே கூப்பிடு." என்பான். ஆந்திராவிலிருந்து வந்திருந்த வினய், ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடத்தில் பேசாத நாட்களை எண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கும். தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது பேசினாலொழிய தூங்கமாட்டான். எனக்கும் பெற்றோரிடம் பேசுகின்ற வழக்கம் இருந்தாலும் வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்தில் ஒரு தடவையோ மட்டுமே பேசுபவன். அதுவும் சிரத்தையில்லாமல் (எப்போது நீ சிவப்பு பொத்தானை அழுத்துவாய்) ஓரிரு நிமிடங்கள் ப...