Skip to main content

ஐராவதம் பக்கங்கள்....


ஐராவதம் பக்கங்கள்....

நான்காவது சிங்கம் - செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகள் - பக்கம் 71 - விலை ரூ.60 - பிரதிகள் 600 - காலச்சுவடு பதிப்பகம்

இது கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு.  முன்னரே 'அந்தரங்கம் (2008)', 'இன்னபிறவும்' (2009), 'ஞாபகம் இல்லாது போகுமொரு நாளில்' (2010) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாராம் ஆசிரியர்.

தமிழ்ப்பட உலகில் ஒரு படம் எடுத்துவிட்டு ஓய்ந்துபோன இயக்குநர்கள் இருநூறுக்குமேல் உள்ளனராம்.  

அதேபோலவே கைக்காசு போட்டு ஒரு புத்தகம் எழுதி ஓய்ந்துபோன கவிஞர்களும் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும்.  இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர் காலச்சுவடு போன்ற பிரசித்துப் பெற்ற பதிப்பகம் மூலம் நாலாவது புத்தகம் வெளியிட முடிந்திருப்பது அவருக்கு கவிதைத் துறையில் உள்ள தொடர்ந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.  ஆனால் பதிப்பாளர்களும் ஏமாந்தவர்கள் அல்ல.  அறுநூறு பிரதிகள்தான் அச்சிட்டு உள்ளார்கள்.  2009க்குப் பிறகு தமிழக நூலக துறையினர் புத்தகங்கள் எதுவும் வாங்காத சூழ்நிலையில் இதுவே அதிகம்.

'எப்போதும்போல' (பக்கம் 68) என்ற கவிதை 6 வரிகள் கொண்டது.  'இப்படியே' (பக்கம் 65) என்ற கவிதை 7 வரிகள்.  'என்ன சொல்ல' (பக்கம் 59) 5 வரி கவிதை, 'சலனம்' (பக்கம் 57) என்ற கவிதை இரண்டே வார்த்தைகள் கொண்டது.  படிப்பதா? ஒரு வரி. படைப்பதா? ஒரு வரி.  இந்தக் கவிதை படிக்கும்போது எனக்கு அத்தனைப் படைப்புகளையும் - 'நாவல், சிறுகதை, கவிதை உட்பட படிக்க வேண்டும்,' என்பான் என் காலஞ்சென்ற நண்பன் 'இடைவெளி' நாவலாசிரியன் சம்பத்.  'நீங்கள் அதிகமாக தொடர்ந்து படித்த வண்ணம் இருக்கிறீர்கள்.  படிப்பதை நிறுத்த வேண்டும். எழுத நேரம் ஒதுக்க வேண்டும்,'  என்பார் மற்றொரு காலஞ்சென்ற நண்பர் எழுத்தாளர் ஆதவன் அவர்கள்.

சாந்தி என்ற மற்றொரு கவிதை 6 வரிகள் கொண்டது (பக்கம் 48). குறுங்கவிதைகள் என்று தலைப்பிட்டு பக்கம் 34-35ல் 5 கவிதைகளைத் தந்திருக்கிறார் ஆசிரியர்.  இதே உறுதியை மேற்குறிப்பிட்ட கவிதைகளுக்கும் பயன்படுத்தியிருந்தால் புத்தகம் 50 பக்கங்களில் அடங்கியிருக்கும்.  நூலகத் துறையினர் பக்கத்திற்கு 2 வரி, 3 வரிகள் கொண்ட புதுக்கவிதைகள் அடங்கிய புத்தகங்களை  வாங்குவதற்கு சிபாரிசு செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன்.  திருக்குறள் 2 வரிகள் கொண்டதுதான்.  பத்து குறள்கள் ஒரு பக்கத்தில், அதன் அர்த்தம் எதிர் பக்கத்தில்.  இப்படி புத்தகம் வெளியிடுகிற சிக்கனப் பேர்வழிகள் நிரம்பிய தமிழகத்தில் அபு தாபியில் பணம் சம்பாதித்து பக்கத்திற்கு நாலு வரிகள் கவிதைகளாக எழுதித் தள்ளுகிற செல்வராஜ் ஜெகதீசனை தமிழக நூலகத் துறையினர் கண்டு கொள்ள மாட்டார்கள்.

விமர்சனங்களைத் தாங்காத கலைஞன் என்ன கலைஞன் என்று கவிஞர் பக்கம் 7ல் வினவுகிறார்.

எனவே சில விமர்சனங்கள்.
  
கவி சாம்ரெட் என்ற பக்கம் 47ல் வெளியான கவிதையை உதறித் தள்ளுகிறார் கவிஞர் கலாப்பிரியா தன் முன்னுரையில்.  நான் இந்தக் கவிதையை சற்று மாற்றி எழுதி இருப்பேன்.

வெகு எளிதாகப்
போய் வருகிறான்
வெளிநாடுகளுக்கு
வெற்று எழுத்தாளன்
கடைபாக்கிற்காகக்
கணக்கு எழுதிக்
கொண்டிருக்கிறான்
கவி சாம்ராட்

சகவை வெற்று ஆக்கியுள்ளேன். கவிதையை கணக்கு ஆக்கி உள்ளேன்.

சூடாப்பு என்ற (பக்கம் 46) என்ற கவிதையையும் ஒதுக்கித் தள்ளுகிறார் கலாப்ரியா.  இதன் கடைசி 6 வரிகள் கவித்துவமானவை.  முதல் 19 வரிகள் பூர்வாங்கம், நிலைக்களனை உருவாக்குபவை.  அவற்றை ஆசிரியர் உதறித் தள்ளியிருக்கலாம்.

சுப்ரமணியின் கேள்விகள் (பக்கம் 42) என்ற கவிதையில் 5வது வரியில் கமிட்மெண்ட் என்ற வார்த்தை விழுகிறது.  நான் இதை கட்டளைகள் என்றோ கட்டாயங்கள் என்றோ மாற்றி எழுதியிருப்பேன்.  இழைபிரிதல் (பக்கம் 43) கவிதையில் ஹெலிகாப்டர் பொம்மையை நான் ஆகாயவிமான பொம்மையாக மாற்றி இருப்பேன்.  எவ்வளவு தூரத்தையும் (பக்கம் 41) கவிதையில் அப்பாயின்ட்மெண்ட என்ற வார்த்தைக்குப் பதில் முன்பதிவு என்று மாற்றி இருப்பேன்.

பக்கம் 35 கவிதையில் முகம் வருகிறது.  பக்கம் 36 கவிதையிலும் முகம் வருகிறது.  பக்கம் 37 கவிதையிலும் மீண்டும் முகம்.  காலச்சுவடு பதிப்பகத்தில் கவிதை நூல்களுக்கு பதிப்பு ஆசிரியர் ஒருவர் இருந்திருந்தால் இந்தச் சொல்தொடர் மீண்டும் மீண்டும் வருவதை சுட்டிக்காட்டி தவிர்த்திருப்பார்.

திரும்பத் திரும்ப என்ற கவிதையில் (பக்கம் 27) சாலையைக் கடக்கக் காத்திருந்த சிறுவன் ஒற்றைச் சிறுவன் அல்ல.  ஓராயிரம் சிறுவர்கள்.  அதுதானே தலைப்பு தரும் செய்தி? அப்பொழுது கடைசி வரிகள் வேறுவிதமாக அமைந்திருக்க வேண்டும்.

காணக்கிடக்கிறான்
ஒவ்வொரு தெருமுனையிலும்

என்று வந்திருக்க வேண்டும்.  கடைசி வரிகள் சிக்னல் என்ற ஆங்கிலப்பதத்தையும் வெகு சுலபமாக அகற்றி விட்டேன் பாருங்கள்.

ஒரு தொகுப்பு என்று வருகிறபோது சில கவிதைகள் போலுள்ள கவிதையாய் இல்லாதவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று முன் பத்தியில் எழுதுகிற கலாப்பிரியா, கடைசியில் நீங்கள் தொடர்ந்து கவிதைகள் தருவீர்கள் என வாழ்த்துகிறார்.  நானும் ததாஸ்து சொல்கிறேன்.  
 

Comments

Popular posts from this blog