Skip to main content

Posts

Showing posts from January, 2011

எதையாவது சொல்லட்டுமா........36

மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி பஸ்ஸில் செல்லும்போதெல்லாம் என் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது திருக்குறள். பெரும்பாலான குறலுடன் நான் ஒத்துப் போயிருக்கிறேன். சில குறள்களை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனாலும் போதனை செய்வது எனக்குப்பிடிக்காத ஒன்று. உலகத்தில் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குப் போதனை செய்வதைத்தான் விரும்புவார்கள். பதவி மமதைப் பிடித்தவர்களுக்குத் தன்னடக்கம் என்பது தெரியாது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி சுற்றித் திரிவார்கள். ரோடில் நடந்துசென்றால் எல்லோரும் ஒன்றுதான். நான் சமீபத்தில் படித்த ஒரு குறள். தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. எனக்கு என்னமோ இந்தக் குறளைப் படிக்கும்போது வள்ளூவர் தெரியாமல் எதையோ சொல்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. வள்ளுவரை இழிவுப் படுத்துவதாக யாரும் நினைக்கக் கூடாது. எனக்கு அந்தத் தகுதியும் கிடையாது. ஆனால் இந்தக் குறளைப் படித்ததிலிருந்து எனக்கு என்னமோ உறுத்திக்கொண்டே இருக்கிறது. முதலில் இந்த உலகத்தில் தோன்றுவது என்பதே நம் கையில் இல்லை. ஒரு அணும் பெண்ணும் உள்ள இச்சையில் ஒவ்வொருவரும் பூமியில் அவதரிக்கிறோம். அ...

எதையாவது சொல்லட்டுமா 35

சிறிது நேரத்திற்குமுன் லட்சுமிபதி போன் செய்தார். 31.1.2011லிருந்து இந்த ஆண்டு முடியும்வரை க.நா.சு நூற்றாண்டு. நாம் அவர் நினைவாக எதாவது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். நான் சீகாழியில் இருப்பது ஒரு குறையாகப் பட்டாலும், க.நா.சு விஷயமாக எதாவது செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை கூட்டம் போடலாம் என்று அவரிடம் குறிப்பிட்டேன். பின் அவருடைய புத்தகங்கள் எதாவது கொண்டு வரலாம். அதற்கு இப்போது எந்தத் தடையும் கிடையாது. நான் ஏற்கனவே மையம் வெளியீடாக வந்திருந்த க.நா.சு கவிதைகள் சிலவற்றை திரும்பவும் அச்சடிக்க வைத்திருக்கிறேன். உண்மையில் புத்தகக் காட்சியின்போது அதை இலவசமாக அளிக்க தயாரித்துக் கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. க.நா.சுவை அவருடைய கடைசிக் கால கட்டத்தில்தான் சந்தித்தேன். புத்தகம் படிப்பது எழுதுவது இதைத் தவிர வேறு எதையாவது சிந்தித்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஒருமுறை நான், நகுலன், வைத்தியநாதன், ராஜகோபாலன், ஞானக்கூத்தன், ஸ்ரீனிவாஸன் என்று அத்தனைப் பேர்களும் க.நா.சுவை அவருடைய மைலாப்பூர் வீட்டில் சந்தித்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் மைலாப்...

எதையாவது சொல்லட்டுமா - 34

இந்த ஆண்டில் பரிசுப் பெற்ற மூன்று படைப்பாளிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். சாரல் பரிசு பெற்ற அசோகமித்திரனுக்கு, விளக்கு பரிசு பெற்ற திலீப்குமாருக்கு, சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாஞ்சில் நாடனுக்கு. வாழ்த்துகிறேன். கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து ஒரு வித பரபரப்பு. அந்தப் பரபரப்பில் நான் வழக்கமாகச் செயல்படுவதிலிருந்து பெரிதும் விலகிவிட்டேன். என் பெண்ணின் இரண்டாவது பிரசவத்தின் போது நான் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருந்தேன். மதியம் ஒன்றரையிலிருந்து 2 மணிவரை பயம். பையன் பிறந்துவிட்டான் என்று வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம். இந்த முறை நான் புத்தகக் காட்சியில் பங்கேற்பதை வீட்டிலுள்ளவர்கள் விரும்பவில்லை. சரியாக புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போதுதான் பெண் பிரசவிப்பாள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனாலும் இதை விடக்கூடாது என்று தோன்றியது. நான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் விருட்சம் பத்திரிகைக் கொண்டு வரமுடியவில்லை. புத்தகங்கள் கொண்டு வரமுடியவில்லை. இந்த இரண்டுமே இல்லாமல் புத்தகக் காட்சியா என்று தோன்றியது. ஸ்டாலைப் பார்த்துக்கொள்ள 2 பேர்கள் தேவை. மற்றபடி வி...

சொல்லில் முடிவதில்லை என்ற ஒரு ஆதங்கம்

என்னைப் பொறுத்தவரை கவிதைகள் கவிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு. அந்த சிந்தனைகளோடு உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அந்த சிந்தனைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் கலந்து அவர்களை சிந்திக்க வைத்து அதன் மூலம் ஒரு செயல்திறனை உருவாக்க வைப்பதே கவிதையின் குறிக்கோளாக இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது. ஒரு கவிதையின் மையப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிஞர் காதலைப்பற்றியோ, காட்சியைப் பற்றியோ, வீரத்தைப்பற்றியோ, சமூக உணர்வுகள் பற்றியோ, நாட்டுப்பற்று பற்றியோ அல்லது நகைச்சுவையாகவோ கவிதைகளை வெளிப்படுத்தலாம். அப்படி தோற்றுவித்த கவிதைகளுக்கு ஜீவனாக ஒரு காரணம் இருக்கும். அந்த ஜீவன், கவிதை படிப்பவர்களின் உணர்வில், அனுபவத்தில், சிந்தனையில் காணாமல் போயிருக்கக்கூடிய ஒரு நூலிழையை பிரித்து 'இதுதான் ' என்று தெளியவைத்து, கலந்து ஒரு சிறிய தன்னுணர்வை உருவாக்கக் கூடியதாக இருக்கும். செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று : கவிதை உருவாக்கத்தின் புறச் சூழ்நிலைகளையும் அவை உண்டு பண்ணும் அகச் சூழ் நிலைகளையும் பற்றியது. கவிதை உருவாகும் நேரத்தை நாம் கவிஞனருகில் நின்று கவனிக்கிற மாதிரியான அந்தரங்...

தாத்தாவும் பேரனும்

தாத்தாவின் பிள்ளைக்கு குழந்தை பிறந்திருக்கிறது. கொஞ்ச நாளாய் தாத்தாவிற்கு பேச எந்த தோழர்களும் தேவையில்லை... தாத்தாவும் பேரனும் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள்.. யாருக்கும் புரியவில்லை அவர்களின் ரகசியங்கள். அழுகிறப் பேரனிடம் தாத்தாய் அழகழகாய் ஏதோ சொல்லிக் கொடுக்கிறார்... குழந்தை கையை அசைக்கிற போதும் கால்களை ஆட்டி இசைக்கிற போதும் சாடையாய் கூடி நிற்கிற முகத்தின் ஓசையில் தாத்தா இப்போது அவரது தாத்தாவின் மடியினில் கைகளையும் கால்களையும் அசைத்து அசைத்து ஏதோச் சொல்லிக் கொண்டிருக்கிறார். உலகம் திரும்பி சுற்றிக் கொண்டிருக்கிறது.