Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 14

தமிழில் விமர்சர்கள் மிகக் குறைவு. ஆரம்பத்தில் க.நா.சுதான் தமிழில் விமர்சனத்தைத் தொடங்கி வைத்தார். படைப்பாளியாக இருந்த க.நா.சு விமர்சனத்தையும் ஆரம்பித்து வைத்தார். அவருடன் அதை வளப்படுத்திய பெருமை சி சு செல்லப்பாவிற்கும் உண்டு. க.நா.சு ஒரு முறை என்றால், சிசு செல்லப்பா வேறு முறையில் விமர்சனத்தை அணுகினார். சி சு செல்லப்பா மேலை நாட்டு புத்தகங்களைப் படித்துவிட்டு தமிழில் அது மாதிரி முயற்சியை மேற்கொண்டார். க நா சு எந்தத் தியரியையும் படிக்கவில்லை. அவர் படிக்கிற புத்தகங்களைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார். பத்து பேர்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார். அதை எதிர்த்தவர்களும் உண்டு. வேகமாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு வேகமாக அபிப்பிராயம் சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தவரும் க.நா.சுதான். சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். அலசல் முறை விமர்சனம் என்று மேலே போக முடியவில்லை. க.நா.சுவோ அப்படியில்லை. எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி, ஏன் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைளையும் பற்றியும் எழுதி விடுவார்.


விமர்சனத்திற்கென்று தனி கவனம் செலுத்திய க.நா.சுவும், சி.சு செல்லப்பாவும் வளர்த்த விமர்சன பண்பு இன்று பலரால் பின்பற்றப்படுகிறது. மார்க்ஸிய முறை, பின் நவீனத்துவ முறை என்றெல்லாம் பலர் விமர்சனத் துறையில் இறங்கி விட்டார்கள். எப்போதுமே படைப்பாளிகளை விட விமர்சர்கள் ஒரு படி தாழ்வுதான். விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்தவர்களுக்குப் பெரிதாக பரிசு எதுவும் கிடைத்துவிடாது. பொல்லாப்பு அதிகமாக சேரும். நடுநிலைமையோடு புத்தகம் விமர்சனம் செய்வது சாத்தியமா என்பதும் கேள்விக் குறியே?70 வாக்கில் விமர்சனம் தனி நபர் தாக்குதலாக மாறிவிட்டது. இதனால் வளர வேண்டிய பத்திரிகைகள் ஒழிந்து போனதுதான் சாத்தியமாயிற்று. அன்றைய விமர்சர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால், படைப்பிலக்கியத்துக்குத் தர வேண்டிய மரியாதைப் போய்விட்டது. நான் ஒரு முறை பிரஞ்ஞை என்ற பத்திரிகையை வாங்கிப் பார்த்தேன். எனக்கு தலையைச் சுற்றுவதுபோல் தோன்றியது. தனிநபர் தாக்குதலுக்காகப் பத்திரிகையின் பக்கம் முழுவதும் வீணடிக்கப்பட்டிருந்தது. உண்மையில் விமர்சனத்திற்காக அல்ல. விமர்சனம் என்ற பெயரில் முன்வைத்த சண்டைக்காக. விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படிக்க தூண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர, படைப்பை ஒழிக்கக் கூடாது.


க.நா.சு, சி சு செல்லப்பா காலத்தில் தனிநபர் தாக்குதல் நடைபெறவில்லை. புத்தகம் பற்றி விமர்சனம் மட்டும் இருக்கும். இன்றைய காலத்தில் புத்தக விமர்சனம் சாயங்களுடன் வெளிவரத் தொடங்கி உள்ளன. தலித் என்கிற சாயம், பெண்ணியம் என்கிற சாயம், ஜாதி என்கிற சாயம்..பின் நவீனத்துவம் போக்கை வளர்த்தவர்களில் தமிழவன், நாகார்ஜூனம் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். அவர்களால் வளர்ந்தவர்கள்தான் சண்முகம் போன்ற சிலர். சண்முகம் முதலில் கவிதை எழுத ஆரம்பித்தவர், பின் விமர்சனத்திற்கு தாவிவிட்டார்.


ஒரு புத்தகத்தைப் பற்றி எதிரான கருத்தைத் தெரிவித்தால் அது படைப்பாளிக்கு பாதகமான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாள நண்பர். அவர் ஒரு பாதரியார். பழக நல்ல மனிதர். தீவிரமாக சிந்திப்பவர். கவிதை எழுதுபவர். அவர் கவிதைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தார். அவர் புத்தகத்தை இன்னொரு இலக்கிய நண்பரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார். இன்னொரு இலக்கிய நண்பரும் கவிதைகள் எழுதுபவர். அவர் புத்தகம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் பாதரியார் நண்பருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.


எனக்கும் புத்தக விமர்சனம் எழுதுகிற அனுபவம் உண்டு. அதனால் சில சங்கடங்களைச் சந்தித்ததுண்டு. விருட்சத்திற்கும் வரும் புத்தகங்கள் சிலவற்றை நானும் விமர்சனம் செய்திருக்கிறேன். ஒரு சிறுகதை எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விமர்சனம் எழுதினேன். என் மனசில் அப்போது என்ன பட்டதோ அதை எழுதினேன். மொத்தமே விருட்சத்தில் 2 பக்கங்கள்தான் எழுதியிருப்பேன். அந்தச் சிறுகதை எழுத்தாளர் என்னைப்போல் வங்கி ஊழியர். மேலும் எங்கள் 2 பேர்கள் வங்கிகளும் பக்கத்திலேயே இருந்தன. ஒருநாள் மாலையில் அவரிடம் மாட்டிக்கொண்டேன். ''வாருங்கள் டீ சாப்பிடலாம்,'' என்று பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கு போனபிறகுதான் தெரிந்தது. என்னைத் திட்டுவதற்காக அழைத்துப் போகிறார் என்று. அவர் வைத்திருந்த பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து சில கடிதங்களை எடுத்துக் காட்டினார். ''இதப் பாருங்க..குமுதம் ஆனந்தவிகடனிலிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன..கதை அனுப்பச் சொல்லி.....உங்கப் பத்திரிகையை எத்தனைப் பேர் படிப்பாங்க....100 பேர்...200பேர்....புத்தகம் விமர்சனமா எழுதறீங்க...புத்தக விமர்சனம்...'' என்று ஒரு பிடிபிடித்தாரே பார்க்கலாம், என்ன சொல்வது என்பதே தெரியவில்லை. உண்மையில் நான் எழுதினால் மேலே அவர் சொன்ன பத்திரிகைகளில் வராது...மேலும் எனக்கு அவருக்குக் கிடைத்த பெயர் இல்லை...அன்று பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த எழுத்தாளருடன் ஏற்பட்ட அனுபவத்தோடு நிற்கவில்லை, அந்தப் புத்தகத்தை அச்சட்டவரிடமும் மாட்டிக்கொண்டேன். அவர் ஒரு கேள்வி கேட்டார்: ''அப்படி என்ன சார் எழுதிட்டீங்க..அது என்ன பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடுமா...ஏன் சார், புத்தகம் படிக்காமலே பார்த்தால்போதும் அலுப்பு வந்துவிடுமா..?''என்றாரே பார்க்கலாம்.. அப்புறம்தான் தெரிந்தது. நான் எழுதும்போது என்னை அறியாமலே பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று எழுதியிருக்கிறேன் என்று. வீட்டிற்கு வந்து விமர்சனம் வந்திருந்த விருட்சம் இதழைப் புரட்டிப் பார்த்தேன். ஆமாம். அப்படித்தான் எழுதியிருந்தேன். பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று. எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.


Comments