Skip to main content

பிக் பாக்கெட்




சிறுகதை


பர்சைத் தொலைத்திருந்தார் சங்கரன். அவர் பொதுவாக காரில் போகும் நபர். இன்று வண்டி திடீரென்று சப்பையான தனது வலது முன்பக்கச் சக்கரத்தைக் காட்டி 'சாரி பா' என்றது. ஸ்டெப்னி மாற்ற நேரம் இல்லாததால், வெறுத்துப் போய், மூன்று வருடங்களில் முதன் முறையாக மாநகராட்சிப் பேருந்தில், நெரிசலில் பயணித்தார்.

அப்படி ஒண்ணும் சிரமமாக இல்லை. எத்தனை பேர்! எத்தனை முகங்கள்! ஒவ்வொன்றிலும் கவலை, மகிழ்ச்சி, ஆர்வம், சோர்வு என பலவகை உணர்ச்சிகளுடன் முகங்கள்! டிக்கெட் வாங்கிக்கொண்டு ஒரு பொறுப்புள்ள, கண்ணியமான குடிமகனின் இலட்சணங்களுடன் ஓட்டுனர் இருந்த திசையில் முன்னேறிக் கொண்டிருந்தார்.


சைதாப்பேட்டை தாண்டி, நந்தனத்தை நெருங்கியது பஸ். என்னவோ சொல்லமுடியாத உணர்ச்சி திடீரென்று. அனிச்சையாகப் பான்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தார். ஆ, பர்ஸ் காணோம். சுற்று முற்றும் பார்த்ததில், அருகில் இருந்தவன் கையில் என்னவோ இருந்தது. நழுவி அவன் பின்னால் சென்றதைப் பார்த்து விட்டார். உடனே, சப்தமாக 'பிக் பாக்கெட் பிக் பாக்கெட்' என்று கூவி, ஒரு அதிர்ச்சி உண்டாக்கினார்.

பஸ் நிறுத்தப்பட்டது. அவர் காட்டியதன் பேரில் அந்த பிக் பாக்கெட் பிடிக்கப் பட்டான். போலிஸ் அழைக்கப்பட வேண்டும் என்று பொதுக்கருத்து நிலவியது. ஆனாலும் எல்லோருக்கும் ஆபிஸ், ஆசுபத்திரி என்று சொந்த அவசரங்கள்.

உடனே யாரோ இரு இளைஞர்கள் துவங்கி வைக்க, அந்தத் திருடனுக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. அவன் வாயில் இரத்தம் கசிந்தது. அவனிடம் துழாவிப் பார்த்தார்கள். பர்சின் சுவடே இல்லை. வெறும் இரண்டு ருபாய் நாணயம் சட்டைப்பையில் இருந்தது.

"இவனுங்கள நம்பக்கூடாது சார். ஒரு ரெண்டு, மூணு பேரா வருவானுங்க. சும்மா பாஸ்டா பாஸ் பண்ணுவாங்க."

"ஆமாடா, ஒத்தன் எடுப்பான், உடனே இன்னொருத்தன் கிட்ட பாஸ் பண்ணி, அவன் மூணாவது இப்பிடி போயிடும்"

"இப்பிடித்தான் ஒரு தடவ, பஸ்லேந்து ஜன்னல் வழியா தூக்கிப்போட்டான். அத கரீட்டா இவன் சகா வந்து காட்ச் புடிச்சிகினு போயிடாம்பா"

கண்டக்டர் சங்கரனிடம் "சார், எல்லாருக்கும் லேட் ஆகுது. வண்டிய போலிஸ் ஸ்டேசனுக்கு விடுவோம். அப்புறம் நீங்க பாத்துக்கோங்க" என்றார்.

அதற்குள் பிக் பாக்கெட் ஆசாமியின் சட்டை பெரும்பாலும் கிழிந்து போயிருந்தது. ஒரு மாதிரி கைகால்களை மடக்கி உட்கார்ந்திருந்தான். தலைமேல் அடி விழாதபடி கைகளால் மூடிக் கொண்டான்.

சங்கரன் முன்பு அம்பத்தூரில் குடியிருந்தபோது பக்கத்து வீடு போலிஸ் ஸ்டேஷன். ஒவ்வொரு இரவும் குற்றவாளிகளின் அலறல் காதை அறையும். பகல் நேரங்களில், காவலர்கள் உள்ளே நுழைகையில், சிறு திருடர்களை ஏதோ நொறுக்குத் தீனி உண்பது போல் ஒரு தள்ளு தள்ளி பூட்ஸ் காலால் மிதிப்பதை நிறைய முறை பார்த்திருக்கிறார். தேவைக்கு அதிகமாக போலிஸ்காரர்கள் அடிப்பதாகவே இவருக்குத் தோன்றும். ஒரு மாதிரி சிறு குற்றவாளிகளின் மேல் பொதுப் பரிதாபம் இவருக்கு வழிந்து ஓடும்.

இப்போதும் பர்ஸ் பறிபோன கோபம், வருத்தம் எல்லாம் காணாமல் போய், உடலைக் குறுக்கி, சாலை ஓரமாய், இரத்தம் வழிய உட்கார்ந்து இருந்தவனிடம் பரிதாபம் மேலோங்கி நின்றது. ஒரு முடிவு எடுத்தவராக, செல் போனைக் காதில் வைத்துக்கொண்டார். பிறகு குரலை உயர்த்தி, 'சார், சாரி, பர்சு வீட்டுல வெச்சுட்டேன். இப்பதான் போன் வந்தது' என்று பொதுவாகச் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இலேசான திட்டு, நிறைய அறிவுரை என்று பொதுஜனம் இவர் மேல் கக்கிய விஷயங்கள் அவ்வளவு முக்கியமில்லை.

எல்லோரும் போன பின்னும், அவன் அங்கேயே தலை குனிந்து இருந்தான்.

"நீ தா எடுத்தன்னு தெரியும். உனக்கு விழுற அடி பாக்க முடியல; அதான். பர்ஸ் எங்கே?'

அவன் ஒண்ணும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்த அவனால் இலேசாக எரிச்சல் அடைந்த அவர் "எனக்குத் தேவையான சில விஷயங்கள் பர்சில் இருக்கு. பணத்த விட்டுட்டு அதையாச்சும் கொடுத்திடு" என்றார்.

அவன் ஒண்ணும் பேசவில்லை. பிறகு திடீரென்று எழுந்து, இவரைப் பார்த்தான். வேகமாக நடக்க ஆரம்பித்தான். முட்டாள்தனமாக இருந்தாலும் சங்கரனும் தொடர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து அவன் "சார், சாயங்காலம் தரேன். உங்க அட்ரஸ் தாங்க" என்றான்.

"பர்சில் வீட்டு அட்ரஸ், போட்டோ எல்லாம் இருக்கு. இருந்தாலும், இதுதான் என் செல் நம்பர். அட்ரஸ் தெரியலேனா கூப்பிடு"

அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நல்ல வேளையாக செல் போன் இருந்தது. ஒரு ஆட்டோ (இப்போ கிடைக்குது!) பிடித்து நண்பன் ஆபிசுக்குப் போய் சேர்ந்தார்.

சாயங்காலம் ஏழு மணிக்கு வாசலில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். நிழலாட, நிமிர்ந்து பார்த்தார். அவனேதான். தயங்கித் தயங்கி வந்தான். அவரிடம் பர்சை நீட்டினான். வாங்கிப் பார்த்தார். பணம் அப்படியே இருந்தது. மற்ற குப்பைகளும்.

"என்ன பணம் எடுத்துக்கலையா?"

"வேணாம் சார்"

"என் இப்பிடி ஒரு தொழில் பண்ணுற?"

"உன்னத்தான் கேக்குறேன்"

"அது அப்புடித்தான் சார்; மாத்த முடியாது இனிமே"

"அதா ஏன்னு கேக்குறேன்"

"படிப்பும் இல்ல. வேற வேலையும் கெடைக்காது"

"உனக்கு என்ன வேல தெரியும்"

"சார், டிரைவிங் தெரியும் சார்"

"சம்பளம் நாலாயிரமோ, அஞ்சாயிரமோ கிடைக்கும். ஆமா, இதுல உனக்கு எவ்வளவு தேறும் மாசத்துக்கு?"

"மாமூல் போக, ஒரு பதினஞ்சு-இருபது வரும் சார். ஆனா நெறைய அடி ஒத திங்கணும் சார்"

"ம்ம்"

"அதோட மனுஷாலு நம்மள மதிக்க மாட்டாங்க - ஆனா பலகிடிச்சி"

கொஞ்ச நேர மௌனம். பிறகு அவனே தயங்கி அவரிடம் கேட்டன்.

"சார், நீங்க ஒரு டிரைவர் வேல போட்டுத் தரீங்களா?"

அவருக்கு அவன் மேல் உடனே ஒரு பச்சாதாபம் எழுந்தது. கிளர்ச்சியாக உணர்ந்தார். சமுதாயத்தில் ஒருவனையாவது திருத்தப்போகும் சாத்தியக்கூறு அவருக்கு கொஞ்சம் பரபரப்பைத் தந்தது. ஆனாலும், பெரிய மனிதர்களுக்கே உரிய, பல நூற்றாண்டுகளாக உட்புதைந்த, ஜாக்கிரதை உணர்வு "ம்ம், ரெண்டு நாள் கழிச்சு வா, பார்க்கலாம்" என்று சொல்ல வைத்தது.

இரண்டு நாட்களில் யோசிக்க யோசிக்க, உயர் இலட்சியங்கள் எனும் மெழுகுப் பொம்மையை நடைமுறை வாழ்க்கை என்னும் சுடர் உருக்கிக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் வந்த அவனிடம் 'இப்போதைக்கு இல்லப்பா. பின்னாடி இருந்தா சொல்லுறேன். இப்ப இருக்குற ரெசஷன் டயத்துல கார் வேணாம்னு பாக்குறேன்' என்று முடித்துக் கொண்டார். கொஞ்ச நேரம் நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்த போது நிச்சயமாக ஈரமான கண்களைப் பார்த்தது உண்மை. சுதாரித்துக் கொண்டான். முள்ளும் மலரும் ரஜினி பார்த்திருப்பீர்களே. அதனை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதே போல இலேசாக தலையைச் சாய்த்து 'பரவாயில்ல சார்' என்றான். நிச்சயமாக அவன் கண்களில் இப்போது இவரைப் பார்த்து பரிதாபம் இருந்தது. மெல்ல நடந்து மறைந்தான்.

'பாவந்தான்; ஆனா எப்பவும் மடில நெருப்பக் கட்டிகிட்ட மாதிரியில்ல இருக்கணும்"

"ஏதாவது காணாம போச்சுன்னா, பாவம் அவனத்தான சந்தேகப் படுவோம்?"

"இப்போ, கஷ்டமோ நஷ்டமோ, பதினஞ்சு-இருவதுன்னு சம்பாரிக்குறான்; அஞ்சாயிரம் சம்பளம் எப்படிப் பத்தும் அவனுக்கு?"

இப்படியெல்லாம் சால்ஜாப்புகள் அவரைச் சுற்றி வந்தன ஒரு வாரத்திற்கு.

பிறிதொரு நாள் சிக்னலில் காத்திருக்கையில், ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் இருந்து இலாவகமாக, பெருமிதமாக இறங்கியவனைப் பார்த்தார். குற்ற உணர்ச்சி, எத்தனை சால்ஜாப்பு செய்தும் போகவில்லை. மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே' என்றும் உப கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.



Comments

Anonymous said…
நல்ல கதை அனுஜன்யா.

தர்மர் இடக்கையிலேயே ஒரு முறை தர்மம் செய்வார், படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதப் போலத்தான். இடதிலிருந்து வலதிற்கு மாற்றுமுன் மனம் மாறிவிடக்கூடுமாம். தர்மருக்கே அவ்வாறெனில் நமக்கு?
அனுஜன்யா அவர்களுக்கு, சிறுகதை மிகநன்று.குற்ற உணர்வுகளும், இதற்கான நியாயப்படுத்துதல்களும் இப்படித்தானிருக்கிறது மனம். குதறுகிற மனதிலிருந்து விடுபட நமக்கு சாதகமான நியாயங்கள் சமாதானப்படுத்த கிடைக்காத போதே உளைச்சல்படுகிறது மனம், வாழ்வு நெடுக நியாயங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்க வேண்டும், அல்லவெனில் அவ்வளவுதான்.
அன்பின் அனுஜன்யா

சாதாரண மனிதர்களின் எண்ணங்கள் இப்படித்தான் செயல் வடிவம் பெறாமல் போய் விடுகிறது. மனம் அலை பாய்கிறது. நினைத்த உடன் செயலாற்றி விட்டால் நல்லது. அலசி ஆராய் இடம் கொடுத்தோமெனில் மனம் மாறி விடும். இயற்கை.

நல்ல நடை - எளிமையான சொற்கள் -கதை கொண்டு செல்லும் விதம் பாராட்டுக்குரியது.
க‌தை ந‌ல்லா வ‌ந்திருக்கு. க‌தைகாக‌ன்னு எழுதாம‌ எத‌ர்த்தை எழுதி இருக்கீங்க‌.
அருமையான கதை அனுஜன்யா... பாராட்டுகள்..
na.jothi said…
சூழ்நிலை காரணமா எடுத்த சில முடிவுகள்
பிடிக்கலான கூட கடைசிவரை
அதே முடிவில் இருக்கவேண்டியிருக்கு
நிதர்சனமான முடிவு. நல்லாருக்கு யூத்.
anujanya said…
தொடர்ந்து பிரசுரம் செய்து ஊக்குவிக்கும் அழகிய சிங்கர் அவர்களுக்கு முதலில் பெரிய நன்றி. உங்களுக்கு (Font விஷயத்தில்) மிக்க தொந்தரவு கொடுத்து விட்டேன். மன்னிக்கவும்.

நன்றி வேலன், யாத்ரா, சீனா சார், மின்னல், வெண்பூ, புன்னகை மற்றும் வெயிலான். மிகுந்த தாமதம் உங்களுக்கு நன்றி சொல்வதில். அதையும் பொறுத்து, மன்னித்து விடுங்கள்.

அனுஜன்யா