Skip to main content

தசாவதாரம்


தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும் எதாவது ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்கள் தயாரிக்க ஆகும் செலவைக் குறித்து. நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் செலவைப் பற்றியும், அதற்காக தேவைப்படும் உழைப்பைப் பற்றியும் யாரால் என்ன சொல்ல முடியும்? விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் சச்சினைவிட, தோனி விளம்பரம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கிறார். எல்லாம் கோடிதான். என் வாழ்க்கையில் கோடியை நான் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறேன். வேண்டுமானால் தெருக்கோடியில் போய் நிற்கலாம். ஒருபக்கம் இந்தியா வறுமைக்கோட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தசாவதாரம் என்ற படத்தைக் குடும்பத்துடன் பார்த்தேன். 60 கோடி ரூபாய்க்குமேல் செலவாம். 33 ரூபாய் விலையுள்ள டிக்கெட்டில் ரூபாய் 60 என்று அச்சிட்டிருந்தார்கள். இரவு பத்துமணி படத்துக்குப் போயிருந்தோம். ஒரே கூட்டம். தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள் என்று தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. எல்லோர் முகங்களிலும் சினிமா பார்க்கப் போகிற உற்சாகம்.

டெக்னாலஜி என்ற விஷயம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை இப்படத்தைப் பார்த்தால் நமக்குப் புரியும். பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த நவராத்திரி என்ற படத்தில் எல்லா வேஷங்களிலும் சிவாஜிதான் தென்படுவார். ஆனால் தசாவதாரத்தில் கமல்ஹாசன் எந்தந்த வேடங்களில் வருகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்து பல காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றபடி கதை என்று பெரிதாக இல்லை. இடைவேளை வரை உள்ள விறுவிறுப்பு பின்னால் கொஞ்சம் குறைந்து விடுகிறது. கமல்ஹாசனே கதை, வசனம் என்றெல்லாம் எழுதி உள்ளார். சாதாரண ஜனங்களுக்குக் கதை புரிவது சந்தேகமாக உள்ளது. சென்னை உதயம் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். முதல் சில காட்சிகளில் ஒலியே இல்லை. வழக்கம்போல ரசிகர்கள் ஊ...ஊ..ன்னு கத்தியபிறகு நிலமை சரியாயிற்று. தெலுங்கு போலீசாக வரும் கமல் பழைய நடிகர் பாலையா மாதிரி பேசுவதாகத் தோன்றியது. வித்தியாசமான நடிப்பு. சுனாமியைக் கொண்டுவருவதும், அமெரிக்க அதிபரை கதாபாத்திரமாக மாற்றுவதும் தமிழில் புதிய முயற்சி. ஆரம்ப காட்சியில் கமல்ஹாசன் பேசுவது சரியாகப் புரிபடவில்லை.

ஆனால் இப்படத்திற்கு ஆரம்ப முதல் இவ்வளவு எதிர்ப்பு ஏன்? வைணவத்திற்கும், சைவத்திற்கும் உள்ள எதிர்ப்பெல்லாம் இப்போது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஏன் இதை எதிர்க்க வேண்டும். என்ன இருந்தாலும் இது ஒருபடம் தானே என்று பார்க்க ஏன் முடியவில்லை.
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய நடிகர்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள். ஒரு காலத்தில், சிவாஜி, எம்ஜியார். இப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த். எனக்குத் தெரிந்து ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் சிவந்தமண் என்ற படம். அப் படம் வெளிநாடுகளில் போய் எடுத்து அதிகமாக
ஸ்ரீதர் செலவு செய்தார். அந்தப் படத்தைவிட எம்ஜியார் நடித்த நம்நாடு என்ற படம் அதிகமாகப் பணம் சம்பாதித்துக் கொடுத்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தரமூர்த்தி என்ற என் பள்ளிக்கூட நண்பன் ஒருவன், சிவாஜி ரசிகன். பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வின் போது வந்த சிவந்தமண் படத்தை 8 அல்லது 9 தடவைகள் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்று பார்டரில் வெற்றி பெற்றான். அவன் கையெழுத்து பார்க்க அழகாய் இருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது.

22.06.2008
9.30மணியளவில்

Comments

வணக்கம்,
நலம். தமிழ் வலைப்பூ உலகில் நவீன விருட்சத்தின் வரவு வரவேற்கத் தக்கது.
'தசாவதாரம்' திரைப்படம் குறித்து நடக்கும் கடுமையான விமர்சன விவாதங்களுக்கு இடையில் நீங்கள் மிக எளிமையாக உங்கள் கருத்தை வைத்து விட்டுப் போய் விட்டீர்கள். குறிப்பாக திரைப்படத்தில் நாயகர்கள் வில்லன்களை ஏமாற்ற வேண்டி மாறு வேடம் போட்டுக் கொள்ளும் போது படத்தின் கதாபாத்திரங்கள் ஏமாறுவதைப் போல் பார்வையாளர்களும் ஏமாற வேண்டும் என்று செய்யப் படுகிறது. அதிகம் சினிமா பார்க்காத, சினிமா குறித்து படிக்காத பலர் படம் பார்க்கையில் என் முன்னாலேயே வியந்ததை கண்டிருக்கிறேன்.
அதே போல் நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் தான் போட்டுக் கொள்ளும் வேஷங்களை ரசிகர்கள் கண்டு பிடிக்காது அவற்றை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதான் செய்திருப்பார். சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல் கைநிறைய, பை நிறைய எதிர்பார்ப்புகளை கட்டிக் கொண்டு போய் ''என்னப்பா ஒன்னும் சரியில்லை'' என்றும் ''ஏமாத்திட்டாங்கப்ப்பா'' ''இதுக்கா இத்தனை பீடிகை'' '' பயங்கரமான அரசியல்ப்பா'' இப்படி பலவாராக குத்தி கிளைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியலாக்க வேண்டுமானால் எல்லாவற்றையில் அரசிலாக்க முடியும். '' கொக்கு+அறுத்த+ கோமானே= கொக்கரக்கோ'' என்று முருகக் கடவுளின் கொடிச் சின்னமான சேவல் தனது அபிமானக் கடவுளை போற்றுவதாக திருவளர்ச் செல்வர் கிருபானந்தவாரியர் சொல்லியுள்ளார். இப்படித்தான் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல் தசாவதாரம் என்னும் மிகச் சாதாரண/பிரமாண்டமான பொழுது போக்கு படத்தை பற்றி இத்தனை விவாதங்கள்.
மற்றபடி மிக்க நலம். நவீன விருட்சம் ஓரிரு இதழ்கள் வாசித்திருக்கிறேன்.
கவிதைகளும் நலமாக உள்ளது. இன்னும் நிறைய ஆக்கமான படைப்புகளை எதிர்ப்பார்க்கிறேன்.

நன்றி.

முத்தங்களுடன்,
மதியழகன் சுப்பையா,
மும்பை