Skip to main content

புத்தகம் அறிமுகம்...1



அழகியசிங்கர்


23ஆம் செப்டம்பர் மாதம் 6 புத்தகங்களை குவிகம் வெளியிட்டது.  அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி.   அன்று மதியம் டாக்டர் பாஸ்கரனிடமிருந்து ஒரு போன்.  'சார், மேடையில் என் புத்தகம் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?' என்று கேட்டார்.

'சரி' என்றேன்.  அன்றைய நிகழ்ச்சியில் எனக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டது.

டாக்டரின் புத்தகம் பெயர் 'குவிகம் கடைசிப் பக்கம் பகுதி ௨'. புத்தகத்தின் அமைப்பு கைக்கு அடக்கமாக இருந்தது.

185 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.200.  30 கட்டுரைகள் கொண்ட புத்தகம்.   

குவிகம் மின்னிதழில் மாதம் ஒரு கட்டுரை எழுதித் தொகுத்தது. 

நான் முழுப் புத்தகத்தைப் படிக்காவிட்டாலும் என்னால் ஓரளவு இந்தப் புத்தகம் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

இப்புத்தகத்தின் பெரும்பாலான கட்டுரைகள் ஏற்கனவே முகநூலில் வாசித்தித்திருக்கிறேன். என்றாலும் மொத்தப் புத்தகத்தையும் முழுவதும் படிப்பது தனி அனுபவம்தான். 

முதலில் சில கட்டுரைகளை நான் வாசிக்காமலில்லை.  பரணீதரன் என்ற தலைப்பில் பல துறைகளில் வித்தகராக இருந்த எழுத்தாளர் பரணீதரன் பற்றி எழுதியிருக்கிறார்.

எந்தத் திட்டமிடுதலுமின்றி இக் கட்டுரைகள் எழுதப் பட்டிருக்கின்றன. 

பரணீதரன் கட்டுரை முடிந்தவுடன் 'ராமன் எத்தனை ராமனடி' என்று ஒரு கூட்டத்தைப் பற்றி எழுதி உள்ளார்.  மூன்றாவது 'ஒட்டா வாவில் ஒருநாள்' என்ற பயணக் கட்டுரை.

நாலாவது கொரோனா வைரஸ் பற்றி.  இது முக்கியமான கட்டுரை.  ஒரு மருத்துவரின் பார்வையில் கொரானாவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

இந்தக் கட்டுரைகள் எல்லாம் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் எழுதப்பட்டிருக்ககின்றன.  இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார். 

கிட்டத்தட்ட ஒரு நாட்குறிப்பு எழுதுவதுபோல்தான் இது. “

'லேகினி இன்னும் வருகிறதா?' என்ற கட்டுரை.  அதில் லேகினி என்ற பத்திரிகையை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துகிறார்.  அப்படி ஒரு பத்திரிகை இன்னும் வருகிறதா என்ற சந்தேகம் அவருக்கு.  

'முதுமைக்கு நரை அழகு' என்ற கட்டுரையில்  புறநானூறு சாலமன் பாப்பையா புத்தகத்தை அலசுகிறார்.  சரி, சங்க காலத்துக்குப் போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது,

அறிவியில் புனைகதை தமிழுக்குப் புதுசா என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் தாவி விடுகிறார். 

'டெராண்டாவில் ஒரு இலக்கிய சுரங்கம்' என்ற கட்டுரையில் 82 வயது தமிழ் அறிஞர் பசுபதியைப் போய் சந்திக்கிறார். 

இப்படிப் பல அரிய தகவல்களைக் கொண்ட இப் புத்தகத்தை ஒருவர் வாங்கி வைத்திருப்பது அவசியம்.


குவிகம் கடைசிப்பக்கம் (பாகம் 2) (கட்டுரைகள்)- ஜெ.பாஸ்கரன் - முதல் பதிப்பு செப்டம்பர் 2022 - 186 பக்கங்கள் - விலை ரூ.200 - தொடர்புக்கு : குவிகம் பதிப்பகம் 9442525191,  & 8939604745

 

  

Comments