31.7.09

மரம்வளர்ப்போம்....அரசன் போல் ஒக்காந்திருக்கும்
ஊர் தலைவர்களே -எம்
பேச்சையும் கொஞ்சம் கேளுங்கலே ....
கல்லுப்பட்டி கர வேட்டி
கந்தசாமி எம் பேரு கார வீடு எனக்கில்ல
காசுபணமும் அதிகமில்ல....

அரச மரம் சுத்தி வந்து வருஷம் பல
போனபின்னே ஒத்தப்புள்ள பெத்தெடுத்தேன்
அவன ஒசத்திகாட்ட ஆச பட்டேன் ,,,

கஷ்டப்பட்டு படிக்கவச்சேன் - எம் புள்ள
கலெக்டராக ...
உழுது உழுது உரிகிபோனேன் - எம் புள்ள
கமிஷனராக ...
கஷ்டப்பட்டு படிச்சப்பய கலெக்டரும் ஆகிபுட்டன் ...
காசுபணம் கூடுனதும் என்னைய
வீதில விட்டுபுட்டான் ..


எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் மனுசபயல
நம்புறதுக்கு மரத்த நம்பலாமுன்னு ....

ஒரு கவிதை


சைக் கருவி செய்திருக்கும்
மரத்தில் மீதமிருக்கும் பறவையின் பாடல்
கேட்கும் ப்ளுட்டோ இரவில்

சோதனைக் குழாய் குழந்தையின்
இதயம் துடிக்கத் துவங்குகிறது

அலை
தோலுரிக்கும்
கடல் அரவத்துடன்

கனவுகள் தோறும்
அலைந்து கொண்டிருக்கிறது
உடல் கொள்ளத் துவங்கும் உயிர்

முயலின் காதுகளாய் வளர்ந்து கொண்டிருக்கிறது
பற்றிக் கைக்கொள்ள யேதுவாய்

கடல் தாவரத்தின் சுவாசம்
மீளுருக் கொள்ளுதல்

இரண்டு கவிதைகள்

ஒழுங்கு

வரிசையாக ஆடுகின்றன
பிரசவ ஆஸ்பத்திரி
தொட்டில்கள்
வரிசை வரிசையாக
பார்த்து சிரிக்கிறார்கள்
பார்வையாளர்கள்
வரிசை தவறாமல் பெற்று
வரிசையில் சேர்த்து
உச்சி முகர்கிறார்கள்
தகப்பன்கள்
வரிசையாக நின்றும்
வரிசையில் தின்றும்
வரிசையில் படுத்தும்
வரிசையாகவே செத்தும் போகிறார்கள்

ஒரு மழை இரவின்

ஒரு மழை இரவின்
திடீரென இறங்கிய
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்


அக்கரையில் நின்று கொண்டு

கார் நனையாமலிருக்க
கவர் போட்டு விட்டு
திரும்பினேன்

ஒரு கிழவர்
அரைகுறை வேட்டியோடு
சட்டை இல்லாமல்
மழையில் நனைந்தவாறு
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்

ஓடிப்போய் என் பழைய
சட்டையொன்றை எடுத்து வந்து
அவரை கூப்பிட்டேன்

அதெல்லாம் வேணாம் தம்பி
சோறு கொஞ்சம் போடேன்....
என்று
வயிற்றை தடவினார் கிழவர்...!

கூழாங்கற் சினேகங்கள்

நீர்ச்சலனத்திற்கு ஏதுவான
ஒரு கூழாங்கல்லைப் போல
உருண்டு திரண்டு
பொலிவாகிவிட்டது இதயம்

திரவப்பரப்பினைத் தொட்டகலும்
நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம்
அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும்
நோக்குடன் நீ வருகிறாயென

நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்

உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்


கோவில் மிருகம்என்னதான் அடித்தாலும்
அ‌ங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
கா‌ட்டு‌ப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்

27.7.09

தன்னைத் தானேதன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகைத்தவுடன் என்றேன்.
சரி நீ எழுதுவதைப்
படிப்பவர் இப்போது
புன்னகைக்கிறார்
நீ நிறுத்துவாயா என்றது.
நானும் புன்னகைத்துக் கொண்டே
சரி என்றுவிட்டேன்.

25.7.09

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......6


இந்தத் தொடரில் நான் பிரமிளைப் பற்றி எழுதுகிறேனா விசிறி சாமியார் பற்றி எழுதுகிறேனா அல்லது என்னைப் பற்றி எழுதுகிறேனா?


விசிறி சாமியாரைப்போல் அட்டகாசமான சாமியாரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு முதலில் திகைப்பாக இருந்தது சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து. பின் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் மாலைகளைப் பார்த்து திகைப்பாக இருந்தது. மாலைகள் முழுவதும் தூசிகள் நிரம்பி வழிந்தன. அவர் கட்டளை யார் யார் எங்கே உட்கார வேண்டும். நான் போய் முன்னால் உட்கார முடியாது. சாமியார் கட்டளை இடுகிறார் பிரமிள்தான் முதலில் உட்கார வேண்டுமென்று. அடுத்தது லயம் சுப்பிரமணியன். மூன்றாவதுதான் நான். அந்தப் பகுதியிலிருந்து நான்தான் முதல். ஆனால் பிரமிள்தான் அவர் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தார். அடிக்கடி முதுகில் ஷொட்டுகளை வாங்கிக்கொண்டு.


ஏன் சாமியார் இதெல்லாம் செய்கிறார் என்று எனக்குத் தோன்றாமலில்லை. ஆனால் இது ஒரு விளையாட்டு மாதிரி தோன்றியது. சாமியார் ஒரே நிமிஷத்தில் என் மூடை மாற்றுகிற காரியத்தைச் செய்தார். அவர் கையில் வைத்திருந்த Passingshow சிகரெட் தீர்ந்து விட்டது. பிரமிள் சிகரெட் வாங்கி வரட்டுமா என்று கேட்டார். சாமியார் சரி என்றார். பிரமிள் உடனே என்னைப் பார்த்து சிகரெட் வாங்க பைசா கொடுங்கள் என்றார். பிரமிளிடம் பைசா இல்லை. அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துப் போகும் செலவை நான் ஏற்றக்கொண்டிருந்தேன்.


நானும் உற்சாகத்துடன் சிகரெட் வாங்க சாமியாரிடம் பணத்தை நீட்டினேன். ஆனால் சாமியாரோ என்னிடமிருந்து சிகரெட் வாங்க மறுத்துவிட்டார். இன்னொன்றும் சொன்னார். சிகரெட் வாங்கும் பணத்தை பிரமிளிடம் கொடுக்கச் சொன்னார். நானும் சாமியார் சொன்னபடி பிரமிளிடம் கொடுத்தேன். பிரமிள்தான் என்னிடம் வாங்கிய பணத்தை சிகரெட் வாங்க சாமியாரிடம் கொடுத்தார்.


அந்த நிகழ்ச்சி நடந்தபிறகு நான் சாதாரண நிலையில் இல்லை. ஏன் சாமியார் என்னிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தார் என்ற கேள்வி என்னை குடை குடையென்று குடைந்துகொண்டிருந்தது. என் முகம் வாடிவிட்டது. நான் எப்போதும் போல் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு என் நண்பர் எஸ் சண்முகத்திடம் இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அவர் சாமியாரும் சிபிஐக்காரர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். நம் மூளையை அவர்கள் முன்னதாக நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார்கள். முளைக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்துவது அவர்கள் வழக்கம். உங்கள் இயல்புநிலையை சீர்குலைக்கும் உத்தியாகக் கூட இருக்கும் என்று கூறியதாக ஞாபகம்.


சாமியாருக்கு உதவி செய்யும் பையன் ஒருவன் அவருக்கு சிகரெட் வாங்கி வந்தான். பிரமிள் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இன்னொன்று சொல்லியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி ஒருவரைத் தொட்டால் ஒன்றுமில்லை. ஆனால் நாம் கிருஷ்ணமூர்த்தியைத் தொடக்கூடாது. அப்படி தொட்டால் நமக்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு விசிறி சாமியார் மீதுள்ள என் மரியாதை கொஞ்சங்கூட குறையவில்லை.


இந்தச் சம்பவம் நடந்த பிறகு சாமியார் எல்லோருக்கும் கொய்யாப்பழத்தைப் பிண்டு கொடுத்தார். முதலில் எனக்குத்தான் கொடுத்தார். எனக்கு கொய்யாப்பழம் என்றால் ரொம்பவும் உயிர். நான் விரும்பி சாப்பிடும் பழங்களில் இதுவும் ஒன்று. எப்படி சாமியாருக்கு எனக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன்.


(இன்னும் வரும்)

24.7.09

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......5
பிரமிள் எண் கணிதம் என்று சொல்வதை விசிறி சாமியார் வேறுவிதமாக சொல்கிறார் என்று தோன்றியது.ஆனால் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது விசிறி சாமியார் எங்கள் மூவருக்கும் பால் கொடுத்தார். ஒரு தம்ளரில்தான் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.. நடுவே நடுவே Passingshow சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். விசிறி சாமியார் தெய்வத்தின் குரல் என்கிற புத்தகத்தை பிரமளிடம் கொடுத்து ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்கும்படி கூறினார். பிரமிள் பயப்பக்தியுடன் எடுத்துப் படித்தார். திடீரென்று பிரமிள் முதுகில் ஒரு ஷொட்டு. பிறகு அவருடைய கையை வெகுநேரம் பிடித்துக் கொண்டிருந்தார். எனக்கோ இதெல்லாம் ஆச்சிரியமாக இருந்தது. நடுவில் அமர்ந்திருந்த லயம் சுப்பிரமணியம் எந்தவித சலனத்தையும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நானோ அவர்கள் பேசுவதைக் கேட்டு பரவசம் அடைந்து விட்டேன். ''பேசுவது ரொம்ப interesting ஆக இருக்கிறது,'' என்று வேறு சொன்னேன்.


இப்போது ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இருவரும் பேசினார்கள். அந்தக் காலத்தில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டுப் போனார்கள். நாராணோ ஜெயராமன் (வேலி மீறிய கிளைகள்) கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டார். யார் எது எழுதினாலும் ஜே கிருஷ்ணமூர்த்தியை மீறி எழுதிவிட முடியாது என்று என்னிடம் கூறுவார். பிரமிள் கூட ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டு விட்டார் என்று எனக்குத் தோன்றும்.

விசிறி சாமியாரும், பிரமிளும் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். முதலில் விசிறி சாமியார், ''இந்தப் பிச்சைக்காரன் ஒரு முறை, அப்பாய்ண்ட்மென்ட் எதுவும் இல்லாமல் வசந்த் விஹாரில் தங்கியிருந்த ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன்...அங்குள்ளவர்களிடம் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். முன்னதாக அப்பாண்ட்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாது என்று பார்க்க விடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது ஜே கிருஷ்ணமூர்த்தி மாடிப்படியிலிருந்து இறங்கிநடந்து வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஒரு முறை பார்த்தார். பின் என் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்,'' என்று கூறினார் விசிறி சாமியார்.

உடனே பிரமிள், ''நானும் ஒருமுறை என் வாழ்க்கையில் தாங்க முடியாத பிரச்சினையாக இருந்தபோது, ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன். என்னிடம் வாழ்க்கையைப் பற்றி கேட்க ஏகப்பட்ட கேள்விகள் வைத்திருந்தேன். அவரை தனியாக சந்திக்க வேண்டுமென்று அனுமதி கேட்டேன்... அனுமதி தந்தார்கள். உள்ளே நுழைந்து கிருஷ்ணமூர்த்தி முன் அமர்ந்தேன். ஒருமுறை அவர் என்னை உற்றுப் பார்த்தார்...என்னமோ தெரியவில்லை...நான் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை...என் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிட்ட மாதிரி தோன்றியது. நான் அவரிடம் எதுவும் பேசவில்லை,'' என்றார்.

என் நண்பன் ஒருவன் கிருஷ்ணமூர்த்தி பேச்சைக் கேட்டுவிட்டு வரும்போது எக்ஸ்பிரஸ் காப்பி குடித்த மாதிரி இருக்கும் என்பான். பின் அதன் effect போய்விடும் என்பான். பிரமிள் வேடிக்கை. ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் மாலை மயிலாப்பூரிலுள்ள ஷீரிடி சாய்பாபா கோயிலுக்குப் போவார். அதேபோல் சனிக்கிழமை கிருஷ்ணமூர்த்தி வீடியோ பேச்சைக் கேட்க மாலை வந்துவிடுவார். இதை ஒரு கடமைபோல் செய்து கொண்டிருந்தார்.
(இன்னும் வரும்)

23.7.09

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.


நவீன விருட்சம் 84வது இதழ் வெளிவந்து விட்டது. 21 ஆண்டுகள் முயற்சி. 160 பக்கம் கொண்ட இந்த இதழ், புதுக்கவிதை இயக்கம் தோன்றி 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. க.நா.சு., ந பிச்சமூர்த்தி, சி சு செல்லப்பாவிற்கு நன்றி கூறும் விதமாக இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் முடியும் என்று நினைத்த இந்த இதழ் அவ்வளவு எளிதில் முடியவில்லை. ஜனவரி 2009க்குப் பிறகு ஜூலை மாதம்தான் இதழ் வருகிறது. இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் சற்றுகூட அவகாசம் தராத என்னுடைய கடுமையான பணி, மூட் எல்லாம் சேர்ந்ததுதான். எல்லாவற்றையும் மீறி இதழைக் கொண்டுவர வேண்டுமென்ற பிடிவாதத்தால்தான் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழுக்காக நான் அதிகமாகவே செலவு செய்துள்ளேன். தனிப்பட்ட ஒரு இதழுக்காக நான் இந்த அளவு அதிகமாக செலவு செய்ததில்லை. நவீன விருட்சம் முதல் இதழ் 16 பக்கங்களுடன் தொடங்கியது. இப்போது 160 பக்கம் வரை வந்துவிட்டது. 21 ஆண்டுகளுக்கு முன் இதழ் வரும்போது இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஏகப்பட்டவர்கள் படிக்கிறார்கள், ஏகப்பட்டவர்கள் எழுதுகிறார்கள்.


இந்த இதழ் தயாரிக்க உதவிய படைப்பாளிகளைப் பற்றி சொல்ல வேண்டும். வழக்கம்போல் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் இந்த இதழுக்கும் தன்னுடைய பங்களிப்பை நல்கி உள்ளார். நாகார்ஜூனன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆங்கிலத்திலிருந்தும், பிரெஞ்சு மொழியிலிருந்தும் நேரிடையாக மொழிப்பெயர்த்துள்ள கவிதைகளில் சில்வியா பிளாத் கவிதைகள் சிலவற்றை அளித்துள்ளார். என்னுடைய பல ஆண்டு கால நண்பரான ஞானக்கூத்தன் இன்னொரு என்னுடைய நண்பரான ஆனந்த் கவிதையைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை அளித்துள்ளார். அதேபோல் அம்சன்குமார், விட்டல்ராவ், வைதீஸ்வரன், ஐராவதம், ரா ஸ்ரீனிவாஸன், எஸ் வைத்தியநாதன், கொம்பன், க்ருஷாங்கினி முதலிய பல இலக்கிய நண்பர்கள் இதழுக்கு மகுடம் சேர்த்துள்ளார்கள்.


நவீனவிருட்சம் நெட்டில் தெரியவந்தபோது, பலர் நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை அனுப்பி இதழை சிறப்பிக்க உதவி செய்துள்ளார்கள். அவர்களுடைய படைப்புகள் உடனுக்குடன் நவீனவிருட்ம் blogspot ல் வருவதோடல்லாமல், நவீன விருட்சம் இதழிலும் வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்தக் கொள்வதோடு அடுத்த இதழ் இன்னும் சீக்கிரமாக கொண்டுவர எல்லாவித முயற்சியையும் எடுத்துக்கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். யார் யார் படைப்புகள் வெளிவந்துள்ளன என்பதற்கு ஒரு லிஸ்ட் கீழ்கண்டவாறு தருகிறேன். எல்லோருக்கும் பத்திரிகை அனுப்ப விரும்புகிறேன். தயவுசெய்து முகவரிகளை அனுப்பி உதவுங்கள்.


1. அனுஜன்யா - பிக்பாக்கெட் - சிறுகதை

2 கார்க்கோ - கவிதை - அன்னம், கிளி, மயில், மேகம், ஆன்ந்த் - பக்கம் ௭

3. செ செந்தில்வேல் - நான்கு கவிதைகள் - பக்கம் 8

4. ரா ஸ்ரீனிவாஸன் கவிதை - சொல்லும் சொல்லமைப்பும் - பக்கம் ௧௧

5. இரா வசந்தகுமார் - மாமா எங்கே? - சிறுகதை - பக்கம் ௧௨

6. யோசிப்பவர் - உயிர் - சிறுகதை - பக்கம் ௧௬

7. அம்ஷன்குமார் - வேர்கள் - கட்டுரை - பக்கம் ௨௧

8. ஜான்சிராணி - விஸ்வரூபம் - கவிதை - பக்கம் ௨௫

9. இரங்கல்கள் - அஞ்சலி - அசோகமித்திரன் - பக்கம் ௨௬

10. க்ருஷாங்கினி - அஞ்சலி - கிருத்திகாவும், சுகந்தியும் - பக்கம் ௩௧

11. அழகியசிங்கர் - அஞ்சலி - எதிர்பாராத மரணம் - பக்கம் ௩௪

12. ஸில்வியா ப்ளாத் கவிதைகள் - தமிழில் நாகார்ஜூனன் - பக்கம் ௩௮

13. அழகியசிங்கர் - புரியாத பிரச்சினை - சிறுகதை - பக்கம் ௫0

14. செல்வராஜ் ஜெகதீசன் - 6 கவிதைகள் - பக்கம் ௫௬

15. வடகரை வேலன் கவிதை - 9 மணி அலுவலகத்திற்கு - பக்கம் ௬0

16. மதன் - என் சட்டைப்பையினுள் - கவிதை - பக்கம் ௬௨

17. ஞானக்கூத்தன் - மதிமை சாலா மருட்கை - கட்டுரை - பக்கம் ௬௩

18. இரா பூபாலன் - கவிதை - அக்காவின் அன்பளிப்பு - பக்கம் ௭௬

19. என் விநாயக முருகன் - கவிதை - இலக்கணப்பிழை - பக்கம் 7௬௨

20. பாவண்ணன் - இரண்டு கவிதைகள் - பக்கம் ௭௭

21. எம் ரிஷான் ஷெரீப் - நிழற்படங்கள் - சிறுகதை - பக்கம் ௭௯

22. அனுஜன்யா கவிதைகள் - பக்கம் ௮௫

23. வைதீஸ்வரன் - இரு கவிதைகள் - பக்கம் ௮௮

24. நிலா ரசீகன் - மூன்று கவிதை - பக்கம் ௯0

25. ஒரு தேசமே சேவல் பண்ணையாய் - சிறு - சோ சுப்புராஜ் - பக்கம் ௯௨

26. த அரவிந்தன் - கவிதை - பூனையின் உலக இலக்கியம் - பக்கம் ௧0௫

27. எம் ரிஷான் ஷெரீப் - கவிதை - சாகசக்காரியின் வெளி - பக்கம் ௧0

8. பிரேம்குமார் - கவிதை - கோவில் யானை - பக்கம் ௧0௭

29. கே ரவிசங்கர் - கவிதை - அபார்ட்மெண்ட் பித்ருக்கள் - பக்கம் ௧0௮

30. மாலினி புவனேஷ் - நான்கு கவிதைகள் - பக்கம் ௧0௯

31. விட்டல்ராவ் - சிறுகதை - ஓர் ஓவியனும் ஒரு ரசிகனும் - பக்கம் ௧௧௧

32, அழகியசிங்கர் - கட்டுரை - சில குறிப்புகள் - பக்கம் ௧௨௧

33. விக்கிரமாதித்யன் - கவிதை - என் இனிய இளம்கவி நண்பரே - பக்கம் ௧௩௪

34. ப்ரியன் - கவிதை - பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை - பக்கம் ௧௩

35. கோகுல கண்ணன் - சிறுகதை - ஒரே நாளில் - பக்கம் ௧௩௯

36. கொம்பன் - சந்தி - கட்டுரை - பக்கம் ௧௪௯

37. புத்தக விமர்சனங்கள் - ஐராவதம் - பக்கம் ௧௫௨

௩அழியா கைக்கிளி - புத்தக விமர்சனம் - மா அரங்கநாதன் - பக்கம் ௧௫௬

39. உரையாடல் - அழகியசிங்கர், ஜெகன், மோகினி - பக்கம் 159

22.7.09

ஒலி மிகைத்த மழை
மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன


தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை


இப்பெருத்த மழைக்கு
கூட்டுக் குஞ்சுகள் நனையுமா
சாரலடிக்கும் போது
கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா


மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன


நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்

உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல

21.7.09

இரண்டு கவிதைகள்

மொன்னை மனசு


முற்றத்தில்

மழைநீர் கொஞ்சம்

மிச்சமிருந்தது


கத்திக் கப்பல்

செய்து தாவென்றது

குழந்தை


கத்தி எதற்கென்றேன்


முட்டும் மீனை

வெட்டுவதற்கு என்றது

விழிகள் விரிய்

முனை கொஞ்சம்

மழுங்கலாகச்செய்து

கொடுத்து விட்டேன்.இறகின் பிறகும்..பாலொத்த வெள்ளையும்

பரிச்சயமானதொரு மென்மையும்

அந்த இறகில் இருந்தது


இறந்திருக்க முடியாதென்ற

பெருநம்பிக்கையோடு தேடியலைந்தேன்

அப்பறவையை


எதிர்ப்பட்ட மின்கம்பங்களில்

எருமையின் முதுகிலென

எங்கேயுமில்லை


அம்மாதிரியொரு பறவை

கவலை பெருக்கியும்

கையிலிருந்த இறகு கருக்கியும்

கவிழ்ந்து கொண்டிருந்த இரவில்

வெண்பறவை தென்படா

வானம் வழி

பறந்து மறைந்ததொரு கருங்காக்கை

எஞ்சியிருந்த அவ்விறகின்

நிறமொத்த எச்சமிட்டு

13.7.09

ஒரு வேண்டுகோள்ஒரே கயிற்றில்
ஒரு டஜன்
கோழிகளையாவது
கால்களில் சுறுக்கிட்டு
சைக்கிளின் இருபுறம்
தொங்கவிட்டு செல்கிறான்
நிதானமாக.
மானசீகமாக வேண்டுகிறேன்.
கொஞ்சம்
விரைந்துச்செல்
நண்பா
சீக்கிரம்...
வெந்நீரில் முக்கியோ
கழுத்து திருகியோ
கொன்றுவிடு.

11.7.09

சொல்லும் சொல்லமைப்பும்
ஒன்றுசொல்லக் கேட்டு

சொல்லச் சொல்லி


பிறந்தது ஓர் சொல்.சொல்லச் சொல்ல


சொல் பெருகியது


பின்னிப் பின்னி


உருவானது ஓர் சொல் வலை


சொல் தன்னைத் தானே


சொல்லத் துவங்கியது


தான் வகித்த வலைக்குள்


தானே சிக்கியது சொல்.


இரண்டு


மலரென்ன ஓர் சொல்


கிளையென்ற ஓர் சொல்லிலிருந்து


காற்றென்ற சொல்லைத் தழுவி


மண்ணென்ற சொல் மீது உதிர்கிறது.


மண்ணில் புதைந்த விதையென்ற ஓர் சொல்


மண்ணைக் கீறி மரமென்ற சொல்லாக முளைத்து


வான் என்ற சொல்லைத்


தீண்டி நிற்கிறது....

10.7.09

இலக்கணப்பிழைஉன்னைப் பற்றிய

கவிதையில்

ஏதோ ஒரு சொல்

பொருந்தாமல்

சீர் வரிசைத் தப்பி

வருவதாக விமர்சித்தான்

கவிஞன் ஒருவன்

உன்னிடம் வாசித்துக் காட்டினேன்

தெற்றுப்பல் தெரிய சிரித்தாய்

9.7.09

கே.பாலமுருகன் கவிதைகள்

1
முன்பொரு சமயத்தில்
நான் பார்த்து வளர்ந்த
காமம் ஒன்று
சில குட்டி பூதங்களாகவும்
சில கடவுள்களாகவும்
வாழ்ந்து கொண்டிருந்தன

2
சுயம் என்றேன்
இல்லை ஆக்கம் என்றான்
சுயம் என்றேன்
மீண்டும் கண்களை உருட்டி
நாக்கை நீட்டி
‘ஆக்கம்’ என்று
அழுத்திச் சொன்னான்

3
கண்டடைந்த பிறகு
தேடலும்
சோர்வாகிவிடுகிறது.
கண்டடைவதில் ஏன்
இவ்வளவு தேக்கம்?

4
பிட்டத்தையெல்லாம்
அடுக்கி வைத்து

அழகு பார்த்தேன்.
வெறும் குசுவிட்டு
எல்லாவற்றையும்
கெடுத்துக் கொண்டன
பிட்டங்கள்.

5
நீர் கசியும்
பாகங்களையெல்லாம்
சரிப்பார்த்துக் கொண்டேன்.
வழுக்கி விழுந்த
அண்டத்தில் பிறப்பில்
நீரில்லாமல்
ஏது சாத்தியம்.


6
என்னுடன் பழகி
விளையாடி
வளர்ந்த குட்டி பேயொன்று
என்னையறியாமல் துடிக்க
வளர, விரைக்க, நீள,
கசிய, முட்ட
தொடங்கின.

7
நிற்க
சரி நடக்கலாம்
மீண்டும் நிற்க
சரியாமல் நடக்கலாம்.
எல்லாம் ஒழுங்கு.

8
பட்டாம்பூச்சியைப்
பறக்கவிட்டது போதும்
போர்க்களத்திற்கு வாரும்.

9
தற்செயலாக
வயிறு கிழிந்து தொங்கியபோது
தெரிந்துவிட்டது
வயிற்றெரிச்சல்.

கீறல் பெயர்கள்கருவேலம் மரத்தில் காலம் தள்ளும்

கீறப்பட்ட அந்தப் பெயர்களுக்குள்

சமீபமாய்

பல பிணக்குகள்

பிசினை வழித்து

கீழே தள்ளுவது

யார் வேலை?

கட்டெறும்புகள் மேலேறி வர

யார் காரணம்?

கோடை தொடங்குவதற்குள்ளே

இலையுதிர்க்க

யார் காரணம்?

காக்கா முட்டையை

பச்சப் பாம்புக்கு

காட்டிக் கொடுத்தது ஏன்?

தேனடை கட்ட

அனுமதிக்காதது ஏன்?

உச்சிக் கிளை முள்ளைப் பிடித்து

தொங்கியவாறே

கீழே குதித்துவிடப் போவதாக

நேற்று மதியம்

'ள்' பெயர் மிரட்ட

குதிக்காதே...குதிக்காதே என

'ன்' பெயர் கெஞ்சிய பிணக்கு

'உன் சொந்தக்காரப் பசுக்களுக்கு

பழுத்த கருவேலங் காய்களை

அதிகமாய்

பறித்துப் போட்டாய்

என் பசுக்களுக்குப் போடவே இல்லை.'

timing..எழுதி முடித்த

கவிதையொன்றைச்

சத்தமாய்

வாசித்தேன்


குக்கர்

விசிலடித்தது.

7.7.09

இடைவெளிஅப்பா....!

இரவுதூக்கத்தில்

என்

இரண்டு கால்களையும்

இடுப்பில்

சுமந்திருக்கிறீர்கள்

நீங்கள்

கூர் செய்த

பென்சில்கள்

இன்னும்

என்நினைவில்

எழுதிக்கொண்டு

இருக்கின்றன

என் பரீட்ஷை

நேரங்களில்

நீங்களல்லவா

என் விடிகாலை

அலாரம்

உங்கள்

உள்ளங்கை சூட்டிலும்

கைவிரல் ஜவ்வுகளிலும்

என் இளவயது

அச்சங்கள்

தொலைந்து

போயிருக்கின்றன

நான் சைக்கிள்

சவாரி

பழக

நீங்கள்

வேலைக்கு

விடுமுறை சாவாரி

பிரதி மாதம்

முதல் தேதி

நீங்கள்

வாங்கி வரும்

ஜாங்கிரி

நெஞ்சில்

இன்னமும்

ஜீராவாய்

ஒழுகிக் கொண்டு

இருக்கிறது

எங்கு பிசகினோம் ?

யார் கண் திருஷ்டி ?

இமைக்கும் கண்ணுக்கும்

இடையில்

கள்ளி வேலி

எப்படி ?

என் இடுப்பில்

வேட்டி ஏறியதும்

உங்கள் பாசம்

ஏன் அம்மணமாயிற்று ?

நான் கட்டிய

காதல் கோட்டை

நம் உறவிற்கு

பிரமிடாய் போனதேன்?

ஒரே வீட்டில்

இரண்டு

முகாம்களிட்டு

வாழ்கிறோம்

நம் வீட்டில்

வசதிகள்

வளர்பிறையாய்

சூரியனாய் ஒளிர்ந்த

நம் உறவோ...

கிரகணமாய் தேய்ந்துகொண்டு

நீங்கள்

பேசத் தயாராயில்லை

எனக்கோ

பேசத் திராணியில்லை

வருந்த மட்டும்

செய்வதால்

விரிந்துபோன

உறவு

உதடுகளாய் ஒட்டுமா என்ன ?

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.


நவீன விருட்சம் blog ஆரம்பித்து ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று தற்செயலாகத்தான் இதை அறிந்தேன். இத்தனை பேர்கள் நவீன விருட்சத்திற்காக படைப்புகள் அனுப்புவார்கள் என்பதையும் எதிர் பார்க்கவில்லை. 160 பக்கங்கள் கொண்ட நவீன விருட்சம் 84வது இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான படைப்புகள் இந்த blog மூலம் எனக்குக் கிடைத்த படைப்புகள்தான். எனக்கே ஆச்சரியம்..இத்தனை பேர்கள் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்களா என்பது. எனக்கு தினமும் கவிதைகள் blogல் பிரசுரம் செய்ய அதிகம் பேர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கவிதைகள் பிரசுரம் ஆக ஆக கவிதைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவர்கள் பெரும்பாலும் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற எளிமையான வழி மட்டும் எனக்குத் தெரியும். அந்த எளிமையான வழியை எழுதுபவர்கள் எல்லோரும் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விருட்சம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.பொதுவாக கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன். நான் எழுதுவதுதான் சரி என்பதெல்லாம் இல்லை. மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்களும் இருக்கலாம்.1) கவிதை எளிமையாக இருக்க வேண்டும்


2) எடுத்த உடன் வாசிக்க வைக்கும்படி இருக்க வேண்டும்


3) கருத்துகளில் குழப்பம் எதுவும் இருக்கக் கூடாது


4) கருத்து என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்கலாம்.


5) தோன்றுவதையெல்லாம் கவிதையாக எழுதலாம்.


6) மிகைப்படுத்தப்பட்ட உணர்வைத் தவிர்க்க வேண்டும்


7) கவிதை மூலம் யாரும் அழக் கூடாது


8) Self pity இருக்கவே கூடாது


9) கவிதை வாசிப்பவர்களையும் வசீகரித்து சிரிக்க வைக்க வேண்டும்.


10) ஜாலியான மன நிலையை கவிதை உருவாக்க வேண்டும். வாசிப்பவர்களும் அப்படியே வாசிக்க வேண்டும்


மேற் குறிப்பிட்டபடி எனக்குத் தோன்றுவதை எழுதியிருக்கிறேன். நீங்களும் நிறையா கருத்துக்களை அளிக்கலாம்.


அன்புடன்
அழகியசிங்கர்

6.7.09

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......4விசிறி சாமியாரை அந்த முறைதான் அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. பிறகு பார்ப்பதே அரிதாகி விட்டது. பாலகுமாரன் மூலம் என்று நினைக்கிறேன். அவர் மிக முக்கியமான சாமியாராகி விட்டார். அவரைச் சுற்றிலும் எப்போதும் கூட்டம். அவர் பெயரில் தனியாக ஆசிரமம் கட்டி விட்டார்கள். அவர் ஆசிரமத்திற்கு ஒருமுறை போனபோது தனியாக அவருடைய சிலையை வைத்திருந்தார்கள். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம். நான் பார்த்தபோது எளிதில் பழகக்கூடியவராகவும், சற்று வித்தியாசமானவராக இருந்த விசிறி சாமியார் நெருங்க முடியாதவராக மாறிவிட்டார்.நான் இங்கு சொல்வது என் நினைவில் தோன்றுவதைத்தான் சொல்கிறேன். சிலசமயம் அது கோர்வையாக இல்லாமல்கூட போய்விடும். அல்லது எதாவது சொல்வது விடுப்பட்டுப் போய்விடும். விசிறி சாமியாரைப் பார்ப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரமிளுக்கு என் நன்றி எப்போதும் உண்டு.சாமியார்கள் சாதாரண மனிதர்கள்போல் தோற்றத்தில் இருந்தாலும், அவர்கள் மகான்கள். யோகி ராம்சுரத் குமார் ஒரு மகான். அதனால்தான் பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் அவருக்கு அளவு கடந்த மரியாதையும், பக்தியும் வைத்திருக்கிறார்கள். விசிறி சாமியார் ஒரு சாதாரண அழுக்கு வேஷ்டியை அணிந்துகொண்டு இருந்தாலும் அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ் எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது. கொட்டங்குச்சி வைத்திருந்தார். கையில் ஜபமாலையை வைத்துக்கொண்டு உருட்டுவதுபோல் வெறும் விரல்களில் ஜபம் செய்துகொண்டிருந்தார். எங்களுடன் பேசிக்கொண்டும் இருந்தார். அவர் அடிக்கடி Passingshow சிகரெட்டைப் பிடித்துக்கொண்டிருந்தார். அந்த சிகரெட் இப்போது வருவதில்லை என்று நினைக்கிறேன். சாமியார் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறாரே என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். பிரமிள் இலங்கையில் அவர் பார்த்த சில சாமியார்கள் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று குறிப்பிட்டார்.பிரமிளுக்கு எண் கணிதம் மீது அபார நம்பிக்கை. ஒருவர் பெயரைக் கேட்டால்போதும் உடனே பெயரை எழுதி கூட்டி. கூட்டல் எண்ணை வைத்து பலன் சொல்ல ஆரம்பித்துவிடுவார். பெயரை வேறு எண் வரும்படி மாற்றிவிடுவார். அழகியசிங்கர் என்ற என் பெயரை அழகு சிங்கன் என்று வைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார். என் இயற்பெயர் மெளலியில் ஓ வருவதால் எல்லோரும் என்னைக் கிண்டல் செய்வார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். விசிறி சாமியாரிடம் எண் கணிதம் பற்றி பிரமிள் பேச ஆரம்பித்தார். அது ஒரு விஞ்ஞானம் என்றும், பெயர் மாற்றுவதால் எண்கள் மாறுவதால் அதனால் ஏற்படும் பலாபலன்களைப் பற்றி சாமியாரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவர் பெயரை மாற்றி பரிசோதனை செய்திருப்பதாகவும் அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.விசிறி சாமியார் ஒவ்வொரு முறை பேசும்போதும் தன்னை ஒரு begger என்று குறிப்பிட்டுத்தான் பேசுவார். எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும். ''இந்த beggerஐத் தேடி ஒரு பெண்மணி வந்தாள். அவளுக்கும், அவள் கணவருக்கும் ஏதோ பிரச்சினை. அழுதபடி பிரச்சினையைச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டாள்...நான் பெயரை மாற்றி அவளை அனுப்பினேன்... இறுதியில் ஒரு வருடம் கழித்து அவள் திரும்பவும் வந்தாள்...அவளுக்கும் அவள் கணவருக்கும் இப்போது சுமுகமான உறவு இருப்பதாக கூறினாள்..'' என்று சாமியார் பிரமிளிடம் குறிப்பிட்டார். (இன்னும் வரும்)

வெயிலை உலர்த்தும் இரவுபகல் வெளியில் பயணிக்கையில்

கிரகிக்கும் வெயிலையெல்லாம் குவித்து

வைக்கோல்போராய் வைத்துக்கொள்வான்

இரவு படுக்கையில்

போரின் மையத்திலிருந்து

கொத்துக்கொத்தாகப் பிய்த்து

உதறி, பரப்பி

மேலே படுத்துருண்டவாறு

வேக வட்டமடிப்பான்

ஈரமுள்ள வெயில் பக்கம்

சொணை சுள்ளெனடிக்க

அதிகச் சுற்றடிப்பான்

நள்ளிரவு சோர்கையில்

உலர்த்திய வெயிலைக் குவித்துக் கட்டி

உறங்கப் போவான்.

5.7.09

சந்திப்பு

நிமிடங்கள் சந்திக்கையில்

நாள் உருவானது


கிழமைகள் சந்திக்கையில்

வாரம் உருவானது

வாரங்கள் சந்திக்கையில்

வருடம் உருவானது

வருடங்கள் சந்திக்கையில்

எனும்போது

இறங்க வேண்டிய

தளம் நெருங்க

நிலைக்கண்ணாடியில்

தந்தையின் உருவம்

எனை நோக்க

திகைப்புடன் நகர்ந்தேன்

தேடல்


எத்தனை முறை உதிர்ந்தாலும்

அத்தனை முறையும்

பூத்துத்தொலைக்கும்

காதலை எழுதிய

இறகொன்றும்


எத்தனை முறை பெய்தாலும்

அத்தனை முறையும்

கொட்டித்தீர்க்கும்

மழையில் நனைந்த இறகொன்றும்


நூறாண்டுகளாய்

அலைந்துக்கொண்டிருக்கும்

சிறகிலிருந்து பிரிந்த

இறகொன்றும்


தேடிக்கொண்டிருக்கின்றன.


தீராத பக்கங்களில்

எந்த கூட்டில்

அமர்ந்துள்ளது அதுவென்று.

எங்கே அவன்?நானே காலமுமாய் இருப்பதாய்

சொன்னவன்

கடந்து விட்டானா?

கரைந்து கொண்டிருக்கிறானா?

சொல் இருக்கிறது.

சொன்னவன் எங்கே?

கேட்டவன் எவன்?

2.7.09

மீண்டும் வாசிக்கிறேன் 3நகுலன்


நான்


எனக்கு


யாருமில்லை


நான் கூட.........